Monday, 30 December 2013

முடிவறியா பாதைகள்இடைவெளிகள் அதிகமற்று
ஒற்றைப் புள்ளியாய்
நீண்டுகொண்டே செல்கிறது...

முடிந்துவிடுமென முன் அடி வைக்க
பிரிந்தே செல்கிறன பாதைகள் ...
இடம் மாறி நடக்க எத்தனிக்கும் வேளைகளில்
வாழ்வின் தடம் மாற்றிடும் பாதைகள் ...

வளைவு நெளிவுகளாய்...
மேடு பள்ளங்களாய்....
அகண்டும் குறுகலுமாய்...
தடைகளற்று நீண்டு கொண்டே ....

பயணிப்பவர்களுக்கு மட்டுமேயல்லாமல்
பார்வையாளர்களுக்கும் ....
கண் அளக்கும் தூரம் அருகிருந்தாலும்,
கால்களால் அளந்திடும் தூரம் நீளமே...
வாழ்வின் பயணங்கள் ஒரு புள்ளியில் முற்றுபெற,
பாதைகளோ முடிவறியா !!!


Sunday, 29 December 2013

சின்ன சின்ன ஆசைகள்


கொஞ்சும் மழலையாய் மாறிவிட ஆசை

வண்ணத்துப்பூச்சியாய் தேன்சுவைக்க ஆசை

மொட்டில் இருந்து பூவாய் வெடித்திட ஆசை

கயல் போல நீரில் நீந்திட ஆசை

விண்மீனாய் வானில் உறைந்திட ஆசை

மயில் போல தோகை விரித்தாட ஆசை

மான் போல துள்ளி குதித்தோட ஆசை

கிளி போல கிள்ளை மொழி பேச ஆசை

குயில் போல கானம் பாடிட ஆசை

வானவில்லை உடையாய் அணிந்துகொள்ள ஆசை

நிலவின் மடியில் கண்ணுறங்க ஆசை

அன்பெனும் குடைக்குள் உலகை அடைத்திட ஆசை.!!!
Saturday, 28 December 2013

அன்பதிகாரம் 2#அன்பெனப்படுவது காதோடு கதை சொல்வது போல் வந்து கழுத்தோடு முகம் புதைப்பது...

#அன்பெனப்படுவது உண்ணும் உணவில் உப்பு அதிகமென்பதை. உன்னை ஒருபோதும் மறவேன் என நாசூக்காய் சொல்வது...

#அன்பெனப்படுவது செல்லப் பெயராய் உன்னை செல்லமென்றழைப்பது ...

#அன்பெனப்படுவது உண்ணும் உணவின் முதல் கவளத்தை ருசி பார்த்து பின் ஊட்டிவிடுவது...

#அன்பெனப்படுவது கையில் வைத்திருக்கும் ஒரு கல்கோனா மிட்டாயை காக்காய் கடி கடித்து தோழனோடு பகிர்ந்து கொள்வது ..

#அன்பெனப்படுவது விதையில் இருந்து துளிர்க்கும் தளிர்களை விரல் கொண்டு மென்மையாய் வருடுவது ...

#அன்பெனப்படுவது முகமறியா அகங்களுக்காய் மனம் கலங்குவது...

#அன்பெனப்படுவது நகம்வெட்டி தேடும் போது விரல் பிடித்து நகம் கடித்துவிடுவது ...

#அன்பெனப்படுவது மதங்கள் கடந்து பண்டிகை நாட்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்வது...

#அன்பெனப்படுவது உன் நிழலை அளவெடுத்து ரசிப்பது ...Friday, 27 December 2013

அமைதியின் ஒரு துளி
இன்றும் தொடர்ந்து கொண்டே...
நேற்றில் முடியா எனது பொழுதுகள்.

ஏனென்று புரியாமலே ...
இது நேற்றோ அன்றி அதன் முன்தினம் போல!!

நேற்றைகளின் பிரதிபலிப்பாகவே அமைந்து விடுகிறது பல நேரங்களில் இன்றும்...

மணித்துளிகள் நிமிடங்களோடும் ,
நிமிடங்கள் நாட்களோடும்
நாட்கள் , வாரங்களாய் ,
அதுவே மாதங்களோடு கண்ணாமூச்சி விளையாடுகின்றது.

தெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை
கல்லெறிந்த நீர் திவலைகளாய் குழம்பி
சலித்துவிடுகிறது சில நேரங்களில் ...

விம்மி வெடிக்கின்றன சில மனதை அழுத்தும் நினைவுகள் ...

அதன் தாக்கத்தை எதிர் கொண்டு
அமைதியின் ஒரு துளியில் கரையும் நான் ...


Thursday, 26 December 2013

சுமுகமான உறவுகள் நிலைத்திட ...

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க......

1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.

2.அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள்.(Loose Talks)

3.எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டுக் கொடுங்கள்.(Compromise)

4.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.(Tolerance)

5.நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.(Adamant Argument)

6.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness)

7.உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Tales)

8.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.(Superiority Complex)

9.அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

11.உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.(Flexibility)

12.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.(Misunderstanding)

13.மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)

14.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

15.பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்Sunday, 22 December 2013

காத்திருப்பின் அவஸ்தைகள்பெருமழையில் நனைந்த
சிறு பறவையாய்
சிலிர்கிறதென் மனம்

நேர்கொண்ட பார்வை,
நிமிர்ந்த என் நடை,
கனவுகளற்ற நித்திரை,
ஆழ்மன தியானம்...

ஏதும் சாத்தியமாகா
இவ்வேளையில்

கவனப் பிசகில் கல்லில் இடறி
பின் கல்லை நோவதாய்,
என்னை குறைசொல்ல
ஏதுவாய் இருந்ததுனக்கு

எப்போது நீயறிவாய்
உனக்காக என் காத்திருப்பின்
அவஸ்தைகளை ...Saturday, 21 December 2013

வண்ணத்துப் பூச்சியின் துடிப்புகள்மின்சாரம்
நின்று போய் இருந்தது...

சன்னலுக்கு வெளியே
சன்னமாய்
மழை தூறலின்
சத்தம்...

மழை நீரின் ஈரத்தில்
சிறகுகள் இரண்டும்
ஒட்டிக்கொள்ள...

பிரிக்கவும் முடியாமல்
பறக்கவும் முடியாமல்
வண்ணத்துப் பூச்சி
தரையில் விழுந்து கிடக்க...

எப்படியும் விடுபட்டு விட
கால்களில் மட்டும்
பரபரப்பான துடிப்புகள் ....Thursday, 19 December 2013

மறுகரையில் நான்
பகட்டான மாளிகையில்
பட்டாலும் , பொன்னாலும்
அலங்கரிக்க பட்ட
அன்பால் ஏழையாக்கப் பட்ட
சிறு பெண் நான்

ஏக்கப் பார்வையொன்றை
ஜன்னல் வழி வீசிய படி
அருகில் உள்ள ஓலைகுடிசையில்
சந்தோஷத்தின் இளவரசியாய் வலம் வரும்
என் வயதொத்தவளை பார்த்தபடி

உதிரம் பகிர்ந்தோரோடு
வாசல் முற்றத்தில் கூடி களிக்க
நான் மட்டும் தனியறை சிறையில்
என் தோழமை பொம்மைகளுடன்

தந்தை மேல் அம்பாரி ஏற
தாய், உணவோடு அன்பை ஊட்ட
நானோ மாடிபடிகளின் விளிம்பில்
ஆயா தரும் ரொட்டி துண்டுகளை
வெறுப்புடன் பார்த்த படி

ஜன்னல் வழி வெறித்த என்னை
கையசைத்து விளையாட அழைத்தாள் அவ் இளவரசி
மான்குட்டியாய் துள்ளி ஓடினேன்
அவள் மாளிகை நோக்கி

என் ஆடை அணிகளைத் தொட்டு தடவி
நீ இளவரசியோ என கேட்க
அன்பால் நான் ஏழை என்றுரைத்தேன்
வா , நேசம் பகிர்வோம்
என்றென்னை அணைத்துகொண்டாள்
நானும் கூடுடைத்த பறவையானேன் .ஸ்ரீயும் நானும்


ஸ்ரீ : அத்தம்மா தயிர் சாதம் பிசஞ்சு தாங்க ...

நான் : தயிர் சாதம் பிசைந்து குடுத்தேன்.

ஸ்ரீ : அத்தம்மா நான் உங்கள எப்போதும் மறக்க மாட்டேன் .... ஹஹஹா .....

நான் : என்ன டா சிரிப்பு . நல்லா இல்லையா ?

ஸ்ரீ : நல்லாருக்கே . உப்பு தான் கொஞ்சம் அதிகமா இருக்கு . அதனால தான் உங்கள எப்போதும் மறக்க மாட்டேன் ....

நான் : ...................


Tuesday, 17 December 2013

அன்பதிகாரம்-1#அன்பெனப்படுவது கண்ணாமூச்சி ஆடும் போது அம்மாவின் முந்தானை சேலைக்குள் ஒளிந்துகொண்டு அவளின் வாசம் சுவாசிப்பது ...

#அன்பெனப்படுவது அப்பா குடிக்க தண்ணீர் கேட்கும் போது ஒரு வாய் குடித்துவிட்டு கொடுப்பது...

#அன்பெனப்படுவது நான் மனதில் நினைத்ததை நீ வார்த்தைகளில் சொல்லும்போது நெகிழ்ச்சியடைவது ...

#அன்பெனப்படுவது மழலையின் அக்கும் எனும் அழகிய நாதத்தில் மனம் நெகிழ்வது ...

#அன்பெனப்படுவது நீ கோபப்படும் போது உன் மூக்கின் நுனி பற்றி இழுப்பது ...

#அன்பெனப்படுவது நீ சீண்டும் போது வெட்கி முகம் ஒளித்துக்கொள்ள இடம் தேடி உன் மார்பிலேயே முகம் புதைத்துக்கொள்வது...

#அன்பெனப்படுவது தூக்கதில் குழந்தையை போல நீ சிரிக்கும் அழகை பார்த்து ரசிப்பது...

#அன்பெனப்படுவது எல்லாம் தெரிந்தும் நீ சொல்லும் அழகை ரசிக்க ஒன்றும் தெரியாதது போல உன்னிடம் கதை கேட்பது...

#அன்பெனப்படுவது தலைவலி எனும் போது தலைவருடி நெற்றியில் இதழ் ஒற்றி எடுப்பது...

#அன்பெனப்படுவது அலைபேசியில் உன்னை அழைக்கவேண்டும் என்று நினைக்கும் போதே உன்னிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதாய் என் அலைபேசி சத்தமிடுவது...


Wednesday, 4 December 2013

காதல் விருட்சமாய் நீ
இல்லையென நான் மறுக்க
என்னில் நினைவுகளாய்
நிரம்புகிறாய்

கல்லெறிந்த நீர் திவலைகளாய்
அலையுதென் மனம்

நீ விதைத்துச் சென்ற
காதல் விதையொன்று
கிளைபரப்பி
அகண்ட விருட்சமாய்
வேரூன்றி நிற்கிறதெனக்குள்

அம்மரக் கிளை அமர்ந்த
மனப் பறவையை தூதாய்
அனுப்பிவைத்தேன் உன்னிடம்

அண்ட பெருவெளி சுற்றி
உன்னிடம்
அடைக்கலமானது அப் பறவை

தஞ்சம் வந்த பறவையை
நெஞ்சஅணைத்துக்கொள்ளடா ...Wednesday, 27 November 2013

கலைந்த கோலம்


ஆழ்ந்த நித்திரையில்
ஒரு கனவு
அக்கனவுக்குள்
ஒரு தூக்கம்

வேடனின் அம்பொன்று
மரக் கிளையில் அமர்ந்திருந்த
கிளியின் கழுத்தை குறி பார்க்க
வீழ்ந்து மடிந்ததந்தக் கிளி

பதறி துள்ள
கலைந்தது

கனவில் வந்த தூக்கமா?
தூக்கத்தில் வந்த கனவா?

இன்னும் எழும்பவில்லை நான் ...Sunday, 24 November 2013

முத்தச் சிதறல்கள்பசிக்கிறதென்றதும்

பரிமாற ஏதும் இல்லை
என் முத்தம் தின்று போ என்கிறாய் .!!!
==========================

இதழ் கொண்டு
மை தீட்டும்
புது யுக்தி
எங்கறிந்தாயடா!!!
================

இதழ் பட்டுத் தெறித்ததும்
மழைத்துளி
தேன்துளியானடா.!!!
================

என்னை தொட்டு
சிதறும்
உன் முத்தத் துளிகள்
உனக்கான கவிதையாகிறது .!!!
==========================

நீ பொழியும்
முத்த மழையில்
நான் பூக்களாய்
நனைகிறேன் !!!
=============

இதழ் மடிப்பில்
சேகரித்துக் கொள்ளடா
ஒவ்வொரு
முத்தத் துளிகளையும்

மொத்தமாய் கணக்கிட்டுகொள்வோம் .!!!


Monday, 18 November 2013

தென்றலென பிறந்தவளேதென்றலென பிறந்து
முகிலோடு கலந்து
கார்மேகமாய் உருவெடுத்து

பூஞ்சாரலாய்
எம் சுவாசம் வருடி
வானவில்லின் ஜாலத்தோடு

பெருமழையாய்
பூமியை முத்தமிட்டு

மலைகளில் அருவியாய்
ஆர்ப்பரித்து
காடுகளில் நதியாய்
நடனமாடி

கடல் அன்னையில்
சங்கமித்து
சூரியக் காதலனின்
அன்பு தீண்டலில்

மீண்டும் மீண்டும்
குளிர் வாடலாய் பிறக்கிறாய்!!!


Tuesday, 12 November 2013

பதநீர்
பனைமரத்தின் பாளையை சீவி அதில் ஒரு சுண்ணாம்பு தடவிய கலயத்தை கட்டிவிட்டு செல்வர் பனை ஏறுபவர்கள் .அதிலிருந்து வடியும் நீரே பதநீர் .

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.

பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது. மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

இப்போது கிராமப்புறங்களில் பனை ஏறுபவர்கள் குறைந்துகொண்டே வருவதால் சுத்தமான பதநீர் கிடப்பது இல்லை . நீரில் சர்க்கரை பாகு கலந்து பதநீர் என்று விற்பனை செய்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் சாப்ட்ரிங்க்ஸ் அருந்தும் நம் மக்கள் இது போன்ற நல்லதொரு பானத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை என்பது தான் வருத்ததிற்குரிய உண்மை .Monday, 11 November 2013

எனக்குள் உறைந்தவன்

எழுத்துக்களில்
தேடினேன் உன்னை
கவிதையாய்
என்னுள் ஊற்றெடுக்கிறாய்

உன் அன்புச் சாரலில்
நனைந்திட தேடினேன்
அடைமழையாய் வந்தெனை
ஆலிங்கனம் செய்கிறாய்

வெளிச்சம் வேண்டி
விளக்கொன்று தேடினேன்
விண்மீன்களாய்
எனை பார்த்து
கண்சிமிட்டுகிறாய்

கனவில்
உன்னை நாடிக்
கண் மூடினேன்
நிஜமாய் அருகில் வந்து
மெய் சிலிர்க்க செய்கிறாய்

என்னை விட்டு
எங்கெங்கோ தேடியிருக்கிறேன்
நீ எனக்குள் ஒளிந்திருப்பதை
அறியாமலேயே.. !!!


Sunday, 10 November 2013

வரம் தருவாயா ?என் வார்த்தைக்குள்
சிக்காத கவியொன்றை
வரமாய் கேட்கிறேன்
உனக்காக நான் எழுத

பெருமழையின்
சிறு தூறலாய் மாற
வரமாய் கேட்கிறேன்
உன் மெய் தீண்டி கொள்ள

வெண்பனியின்
ஒரு துளியாய் மாற
வரமாய் கேட்கிறேன்
உன்னில் உறைந்து கொள்ள

என் உயிருக்குள்
நீ உறைந்திட
வரமொன்று
கேட்கிறேன்
தவங்கள் ஏதுமின்றி!!!
Wednesday, 6 November 2013

தேவதையடி நீ எனக்கு
என் பெயர் சொல்லி
இப்போதெனை அழைத்தாயா
என்றான்
இல்லையடா என்றதற்கு
என் தோட்டத்து மாமரத்தில்
குயிலொன்று கூவிற்றேயென
கன்னம் சிவக்க வைத்தான்

என் காலடி ஓசை கேட்டதும்
துள்ளி குதித்து
ஓடி நீ ஒளிந்தாயா என்றான்
இல்லையடா என்றதற்கு
மானொன்று எனைக்கண்டு
துள்ளி ஓடி ஒளிந்ததென்றான் .

சாரல் மழை கண்டு
களிநடனம் ஆடினாயா என்றான்
இல்லையடா என்றதற்கு
மயிலொன்று
தோகை விரித்தாடக் கண்டேன்
என எனை திகைக்க வைத்தான்

ஐந்தறிவு விலங்கினமல்ல
ஆறறிவு பெண்ணடா
நான் என்றதற்கு ,
பெண்ணல்ல நீ எனக்கு
தேவதையடி என்றுரைத்து
எனை மயங்க வைத்தான்!!!
Thursday, 31 October 2013

தீப ஒளித் திருநாள் : தீபாவளிதீமைகள் அகன்று உலக மக்கள் நன்மை பெற்ற நாள்

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசைக்கு முந்திய நரக சதுர்த்தசி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகின்றது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு.

மகாவிஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் நரகாசுரன்.

இறைவனுக்கு மகனாகப் பிறந்திருந்த போதும், நரகாசுரனிடம் அசுர குணம் தலைத்தூக்கியது. அசுர்களுடன் சேர்ந்து பலவித போர் பயிற்சிகளையும் பெற்றான்.

தன் தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்ற வரத்தைப் பிரம்மதேவனிடமிருந்து பெற்றான் .

ஆணவச் செருக்கினால் மக்களைப் பலவாறு துன்புறுத்தினான். தவம் செய்யும் முனிவர்கள், தவச்சீலர்கள், தேவர்கள் என எவருமே அவனுடைய கொடுமைகளிலிருந்து தப்ப முடியவில்லை. அவனுடைய கொடுமைகள் அதிகம் ஆனதால் அதற்கும், அவனுக்கும் முடிவு ஏற்பட வேண்டிய நேரம் நெருங்கியது.

தேவர்களின் தலைவன் இந்திரன், கிருஷ்ணரிடம் சென்று நரகாசுரனின் கொடுமைகளைக் கூறி முறையிட்டார். ஸ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனுடன் போர் புரியச் சென்றார். அவரது தேருக்குச் சாரதியாக பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா இருந்தார். போர் கடுமையாக நடந்தது.
இருவரும் பலவித அஷ்திரங்களை ஏவுவதும், தடுத்து நிறுத்துவதுமாக இருந்தனர். அந்தச் சமயத்தில், நரகாசுரன் எய்த அம்பு பட்டு மயக்கமடைந்த கிருஷ்ணர் தேரிலேயே சரிந்தார். இதைக்கண்டு சாரதியாகச் சென்ற சத்தியபாமா, தானே வில்லை ஏந்தினார். தன் தாயின் அன்புக்கு அடிபணியாது அசுரனான நரகாசுரன் அவளின் அம்புக்கு இரையானான்.

பிராம்மாவிடம் தான் பெற்ற வரப்படி தன் தாயாலேயே மரணமடைந்தான். தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளிப் பண்டிகையின் விசேஷம்.


அறம் தவறாது இருப்பது மனித குணம். அதைத் தவறி நடப்பவன் மகனே ஆனாலும் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதால் பெற்ற தாயே போரிட்டுக் கொன்றாள்.

தன் தாயின் அம்புக்கு அடிப்பட்டு வீழ்ந்த நரகாசுரன் தவறுக்கு வருந்தியதோடு தன்னுடைய இறந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என வேண்டிக் கேட்டான். அவனுடைய பெற்றோர்களும் அதை அங்கீகரித்தனர். மக்களும், மற்றோரும் அசுரனின் துன்பங்களிலிருந்து விடுப்பட்ட நாளை, அவன் விருப்பப்படியே “ தீபாவளி” பண்டிகையாக நாம் கொண்டாடுகின்றோம்

தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய்யைத் தலையில் வைத்து வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரானாலும், குழாய் நீர் ஆனாலும், கிணற்று நீர் ஆனாலும் அதில் தீபாவளி அன்று கங்கை பிரசன்னம் ஆவதாக ஐதீகம்.
பின்னர் பூஜை அறையில் திருமால், மகாலெஷ்மி ஆகிய படங்களின் முன் புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி வைக்க வேண்டும். அன்று செய்த பலகாரங்களையும், இனிப்புப் பண்டங்களையும் நெய் வேத்தியமாகப் படைத்து, பூஜைகள் செய்து திருமாலையும், மகாலெஷ்மியையும் வணங்கி, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று புத்தாடைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் குடும்ப உறுப்பினர்கள் புத்தாடைகள் அணிந்து அனைவரும் ஒன்றாக ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வழிபாடு செய்வர். பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இறைவனுக்கு நெய்வேத்தியமாகப் படைத்தவைகளையும் பலகாரங்களையும் சாப்பிடுவார்கள். பட்டாசுகள் வெடித்து மகிழ்வர் .

பண்டிகை நாளில் உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோரின் இல்லங்களுக்குச் செல்வதும், அவர்கள் நம் வீட்டிற்கு வருகை புரிவதும், பெற்றோர்களும் பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பு கொடுப்பதும்; பட்டாசு, மத்தாப்பு, வானவேடிக்கைகள் விளையாடுவதும் தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு அம்சங்களாகும்.

தற்போது தீபாவளியன்று தொலைகாட்சிப் பெட்டிக்குள் முடங்கி போய்விடுகிறார்கள் இன்றைய தலைமுறையினர்.Tuesday, 29 October 2013

உன்னுள் உறைகிறேன் .நினைவெனும்
சிறகு விரித்து 
நீ இருக்கும் இடம் தேடி
எனை பறக்கச் செய்கிறாய்

நிஜங்களில்
நெடுந்தொலைவில் இருக்கும் நீ
கனவுகளில் என்னுடன்
கை கோர்த்து வலம் வருகிறாய்

தென்றலாய் தவழ்ந்த என்னை
நேசித்துப் பின் சுவாசித்து
உன் இதயத்துள்
சிறை வைத்துக் கொண்டாய்

என் மூச்சு
திணற திணற
கவிதையாய் வந்து
எனைக் கட்டிக் கொள்கிறாய்

என் மனதில்
காதல் தீ மூட்டி
நீ குளிர் காய்கிறாய்
உன் கதகதப்பில்
நானும் குளிர் காய்ந்துக்
கொள்கிறேன் நிரந்தரமாய்

சிறை வைத்த
உனக்கே உயிருமாய்
நான் உறைந்தே போகிறேன் .!!!


நெருப்பு


பஞ்சபூதங்களின் ஒன்றுதான் நெருப்பு.

பொதுவாக எல்லாவற்றையும் பொசுக்கிப் போடுவதுதான் நெருப்பின் குணம்.

விளைவு ஒன்று எரிந்து சாம்பலாகும். உலோகம் போன்றவை உருகி ஓடும். ஆனால் மண்ணை மட்டும் அதிலும் குறிப்பாக களிமண்ணை முற்றிலும் வேறு விதமாக மாற்றிவிடுகிறது நெருப்பு.

களிமண்ணாக இருக்கும் போது அது நீரில் கறைகிறது. கெட்டித் தன்மை கிடையாது. ஈரப்பதம் வற்றிப் போனால் பொடிந்துத் துகளாகி போய்விடும்.


இந்த அடிப்படை குணங்களை கொண்ட களிமண் நெருப்பால் சுடப்பட்டால் அதன் இளக்கத் தன்மை மாறி கெட்டித்தன்மை பெறுகிறது. நீரில் கரையாத தன்மையையும் பெறுகிறது.


இப்படி நெருப்பால் புது வடிவம் கொள்ளும் களிமண் தான் நாம் வீடு கட்டப் பயன்படும் செங்கலாகிறது. நீர் சேகரிக்கும் பாண்டமாகிறது. சமையல் செய்யும் பாத்திரமாக மாறுகிறது.


நெருப்பு களிமண்ணை மட்டுமே தனது வெப்பத்தால் இவ்வளவு சிறப்புடையதாக மாற்றுகிறது. மற்றவற்றையெல்லம் எரித்து பஸ்பமாக்கிவிடுகிறது.


மண்ணை நெருப்பால் எரிக்கும் வித்தையை கண்டடைந்த பின் தான் மனிதசமூகம் ஒரு மிகப் பெரிய சாதனையை சாதித்தது.

அறிவில்லாதவனை பார்த்து உன் மண்டையில் களிமண்ணா இருக்கிறது? என்று திட்டுகிறோமே ஏன் தெரியுமா? கல்வி என்னும் நெருப்பில் சுடப்படும் போது தான் அறிவு வேறொரு பரிமாணத்தை பெறுகிறது என்பதின் வெளிப்பாடே அது.அவ(ள்)ல் உப்புமா அவன் உப்புமாவாக மாறியது

ஸ்ரீ : அத்தம்மா நைட் என்ன டிபன் ?

நான் : அவல் உப்புமாவும் தோசையும் கண்ணா .

ஸ்ரீ : தோசை ஓகே . ஆனா எனக்கு அவள் (ல் ) உப்புமா வேண்டாம் . அது கேர்ள்ஸ்க்கு தான் .

நான்: அப்போ உனக்கு என்ன உப்புமா வேணும் டா தம்பி ?

ஸ்ரீ : எனக்கு அவன் உப்புமா செய்து குடுங்க அத்தம்மா ....

நான் :?????????..... கொஞ்சம் யோசிச்சிட்டு உப்புமாவை மைக்ரோஓவன்ல வச்சி சூடு படுத்தி இந்தா டா உனக்கு அவன் உப்புமா என்று கையில் குடுத்தேன் ...

குழந்தைகளின் குறும்பு தனத்தை என்னனு சொல்ல .....


Monday, 28 October 2013

வடதிசையில் தலை வைத்து படுக்கவேண்டாமே .
வடக்கு பக்கம் தலை வைத்து படுக்காதே என்று அடிக்கடி எச்சரிப்பாள் பாட்டி.
ஏன் பாட்டி இப்படி சொல்கிறாள் என்றெல்லாம் அப்போது யோசிப்பது இல்லை.
அவள் சொல்வதை வகை வைப்பதும் இல்லை. ஆனாலும் பின் நாளில் இது பற்றி தெரிய வந்த போது பாட்டி எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமாக சொல்லியிருக்கிறாள் என்று நினைக்கையில் கொஞ்சம் வியந்து தான் போனேன்.


காந்தம், உலோகப் (இரும்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் சக்தி கொண்டது என்பது நாம் சிறு வயதில் பள்ளிகூடத்தில் செய்த ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொண்ட ஒன்று தானே.

வட துருவம் மற்றும் தென் துருவம் காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மைகளைக் கொண்டதாகும். இதுவும் பள்ளிகூடத்தில் படித்ததே.

சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது.

எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது.

அத்துடன் பூமி தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது. பூமியின் இரண்டு துருவங்களில் வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.

இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.

அதைப் போலவே நமது தலை  பகுதி நேர் மின்னோட்டம் கொண்டது. கால் பகுதி எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் நமது எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.

காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம். இந்த உண்மை தெரிந்து சொன்னாளோ இல்லையோ தெரியாது. ஆனால் அவள் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்பது என்னவோ உண்மை.


Friday, 25 October 2013

பூம்பூம் மாடு
பூம்பூம்மாடு சிறு பிராயத்தில் கிராமத்தில் அடிக்கடிப் பார்த்தது.
இப்போது எல்லாம் கண்ணில் படுவதேயில்லை.

முதுகின் மேல் வேலைப்பாடுகளுடன் கூடிய துணி மற்றும் பல நிறங்களில் புடவைகள் போர்த்திவிட்டு,அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, கழுத்தில், உடம்பில், கொம்புகளில் சலங்கைக்கட்டி,பலூன் கட்டி, பூ மாலை மற்றும் இன்னும் பிற மாலைகள் எல்லாம் போட்டு அலங்கரிக்கப்பட்டு, "ஜில் ஜில் ஜில்" சத்தத்துடன் மாட்டை ஓட்டிவருவார்கள்.

ஓட்டிவருபவரும் முண்டாசு கட்டி, காலில் சலங்கை க்கட்டி, கையில் ஒரு பீப்பியுடனும் வருவார். பீப்பியால் ஊதுவார். நடுநடுவே மாட்டிடம் பேசுவார், கேள்விக்கேட்பார். அதற்கு மாடும் "பூம் பூம்" என்ற குழல் சத்தத்திற்கு ஏற்ப தலையாட்டும்.

இந்த சத்தம் தெருவில் கேட்டால் போதும், ஓடி போய் நின்று மாடு தலையாட்டுவதைவேடிக்கைப் பார்ப்பது அன்றைய நாள் சிறுவர்களுக்கு வழக்கம். பூம்பூம் மாட்டுகாரருக்குப் பணமோ, அரிசியோ தருவார்கள்.பெரும்பாலும் அரிசியாகத் தான் இருக்கும், தோளில் மாட்டியிருக்கும் ஒரு ஜோல்னா பையை திறந்துக்காட்டி அரிசியை வாங்கிக்கொள்வார். அதில் வெள்ளை, பழுப்பு, சிவப்பு என விதவிதமான அரிசி வகைகள் போடப்பட்டு இருக்கும்.

ஊர் ஊராகச் சென்று வீட்டுக்கு வீடு தேடிப்போய் மேளம் கொட்டிக் கதைப்பாடல்கள் உள்ளிட்ட வாய்மொழிப் பாடல்கள், திரைப்பாடல்கள் ஆகியவற்றைப் பாடி யாசகம் பெற்று அதன் மூலம் வாழ்க்கை நட்த்துகின்ற ஒருவகை நாடோடி இனமக்கள் தான் இந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள்.

 பூவிடையார் என்ற பூக்கட்டும் இடையர் இனத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது ஆய்வார்களின் கூற்று.

பூம் பூம் மாடுகளைக் கொண்டு குறி சொல்லுவதைப் குலத் தொழிலாகக் கொண்டுள்ளனர் இவர்கள்.

கோவில் விழாக்கள், மக்கள் கூடுமிடங்கள் ஆகியவற்றிக்கு சென்று அல்லது வீடு வீடாகச் சென்று வித்தை காட்டுவது இத்தொழில் ஈடுபடுவர்களது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட மாட்டிடம் குறி சொல்பவர்


கேள்விகேட்பதும்,அக்கேள்விகளுக்கும் ஆம் அல்லது இல்லை என்பது போல மாடு தலை ஆட்டுவதைக் கொண்டு குறி பலன்களைச் சொல்வர். அனைத்து விசயங்களிலும் வாய் பேசாமல் தலையை ஆட்டும் நபரை “பூம் பூம் மாடு” என்று கிண்டலாக அழைக்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது.

இந்த வித்தியாசமான காட்சிகளை எல்லாம் காணும் வாய்ப்பு இன்றைய பிள்ளகளுக்கு இல்லாமல் போய்விட்ட்தே என்று நினைக்கையில் மனது கொஞ்சம் வலிக்கதான் செய்கிறது.

Thursday, 24 October 2013

அன்பும் உயிர் கொல்லு(ள்ளு)ம் .
ஒற்றைப் புள்ளியாய்
ஒளிப் பிரவாகம்.

கண்ணுக்குத் துலங்காமல்
பொருள் மறைவது
இருளில் மட்டும் அல்ல

பேரொளியிலும் அது சாத்தியமே

துன்பம் தருவது
இன்னல் மட்டும் அல்ல

அன்பும் உயிர் கொல்லும்.!!!


Wednesday, 23 October 2013

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.

ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.

உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.

கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.

நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

கல்லில் காற்று உண்டு.: எனவே தான் கல்லில் தேரை கூட உயிர். வாழ்கிறது

ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.

அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன.

இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்


Tuesday, 22 October 2013

உவர் மணம்.
குளிருக்கு போர்த்திய

வெளுத்தப் போர்வையின்

உவர் மண் மணம்

நாசியில் பரவ

மூடிய விழிகளுக்குள்

பச்சைக் கரைகளை

தொட்டு நுரைக்கும்

புது வெள்ளம் ...!!!


Monday, 21 October 2013

தியானம்
தியானம் என்பது சிந்திப்பதோ , மந்திரங்களை உச்சரிப்பதோ அல்லது பிரார்த்தனை செய்வதோ அல்ல.

என்னங்களிடமிருந்து விடுதலை பெற்று மனமானது வெற்றிடமாயிருத்தலே தியானம் ஆகும் .

தியானம் என்றால் நம் சுவாசத்தின் மீது நமது முழு கவனத்தை வைத்திருப்பதாகும் . அவ்வாறு மூச்சை கவனித்துக் கொண்டிருந்தால் நமது மனம் எந்த சிந்தனையுமின்றி சாந்த நிலையை அடையும்.

மனம் அந்நிலையை அடையும் போது அளவற்ற விஸ்வசக்தி நம் தலையில் உள்ள பிரம்மரந்திரத்தின் மூலம் உடலில் பாய்கிறது . அந்த விஸ்வசக்தி நமது நாடி மண்டலத்தை சுத்திகரித்து நமது மூன்றாம் கண்ணை இயக்குகிறது.


இந்த விஸ்வசக்தியின் மூலமாக நமக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் அமைதியான மனநிலையும் மற்றும் பல ஆன்மிக அனுபவங்களும் தரும் .

தியானத்தின் பலன்கள்

எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் . நினைவாற்றல் அதிகரிக்கும். மனம் எப்போதும் அமைதியாகவும், அதனால் நிம்மதியாகவும் இருக்கும் . நம் செயல்கள் அனைத்தும் மிக திறமையாக மேம்படுத்தப்படும் . நம் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியும் .

தியானம் செய்யும் முறை

தியானம் செய்வதற்கு சுகஸ்திர ஆசனத்தில் அமர வேண்டும்.

தரையிலோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொள்ளவும்.

பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்துக்கொள்ளவும்.

இரு கைவிரல்களையும் ஒன்றுடன் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும். உடலை இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இயல்பாக இருக்கவும்.

பின்பு கண்களை மூடிக் கொண்டு நம்மில் இயல்பாகவும், இயற்கையாகவும், மென்மையாகவும் நடக்கும் சுவாசத்தின் மீது கவனத்தை செலுத்தவேண்டும். மனம் அலைபாயும் போதெல்லாம் அவற்றை தவிர்த்து மறுபடியும் நம் கவனத்தை சுவாசத்தின் மீது மட்டும் செலுத்தவும்.


தியானம் மிக எளிமையானது .தியானம் செய்வதில் எவ்வித சிரமமும் கிடையாது

அனைத்து வயதினரும் செய்யலாம் .தியானம் தவறாமல் செய்ய வேண்டும். குறைந்தது முப்பது நிமிடமாவது செய்ய வேண்டும் .

 "நம் வாழ்வின் வெற்றியை நமது முயற்சியால் நமக்கு நாமே பெற்றுக்கொள்ளும் வரப்பிரசாதமே தியானம்9:39p

மனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்.


வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே சிந்தியுங்கள் .

கடந்த காலங்களில் செய்த தவறுகளைப் பற்றி பட்சாதாபப்படாதீர்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப் படாதீர்கள் .உங்கள் கையில் இருக்கும் நிகழ்காலத்தை வெற்றியாக்குவதில் முழு கவனம் செலுத்துங்கள் .

நீங்கள் உங்கள் வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டு கவலைப் படாதீர்கள். ஏனெனில் நீங்கள் இந்த உலகில் தனிச் சிறப்புள்ள மனிதர் . உங்களைப் போல வேறு யாரும் இருக்க முடியாது .

உங்களை நிந்திப்பவர்களே உங்கள் நண்பர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .ஏனெனில் அவர்கள் உங்களிடம் இருந்து விலையேதும் பெறாமல் மனோதத்துவ மருத்துவரைப் போன்று உங்களது குறைகளின் பக்கம் உங்களின் கவனத்தை கொண்டு செல்கிறார்கள் .

உங்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடியவரை மன்னித்து விடுங்கள் , அதனை மறந்தும் விடுங்கள் .

அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முயற்சித்து குழப்பமடைய வேண்டாம் . ஒரு நேரத்தில் ஒரு பிரச்சனையை மட்டும் தீர்க்க முற்ப்படுங்கள் .

முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் கவலைகளை மறக்ககூடும் .

வரக்கூடிய பிரச்சனைகளைப் பார்க்கக் கூடிய கண்ணோட்டத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் துக்கத்தை சுகமாக மாற்றம் செய்ய முடியும் .

எந்த பிரச்சனைகளை உங்களால் மாற்றமுடியாதோ அதைப் பற்றி சிந்தித்து துக்கப் படாதீர்கள் . காலம் பொன் போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

இந்த உலகம் என்னும் விசாலமான நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள் . அவரவரது பாகத்தை சரியாக நடித்துக் கொண்டிருக்கிறோம் . எனவே பிறரது நடிப்பை பார்த்து கவலைப் படவேண்டாம் .

பிறரை மாற்றவேண்டும் என்ற இச்சையின் மூலமாக மானசீக மனஇறுக்கம் அதிகரிக்கிறது . முதலில் தன்னை மாற்றிக்கொள்ளும் இலட்சியம் வைப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் .

பொறாமைப் படுவதால் மனமானது எரிகிறது .அதை மனதில் இருந்து நீக்கினால் மனம் அளவற்ற குளிர்ச்சியை அனுபவிக்கிறது .

மகிழ்ச்சி கொடுப்பதன் மூலமே மகிழ்ச்சி அதிகரிக்கும் .ஆகையால் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முயற்சி செய்யுங்கள் . ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்கும் சிந்தனையே செய்யாதீர்கள் .

பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ளும் பொழுது உங்களது கடந்தகால கர்மத்தின் கணக்குகள் (எதிர்மறையான வினைப் பயன்) முடிந்துகொண்டிருக்கிறது என்று நினைவுகொள்ளுங்கள் .

உங்களுக்குள் இருக்கும் சூட்சும அஹங்காரத்தை தியாகம் செய்யுங்கள் . வரும் பொழுது எதுவும் கொண்டுவரவில்லை . திரும்பும் பொழுதும் எதுவும் கொண்டுசெல்ல மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

தினமும் சிறிது நேரமாவது யோகா மற்றும் தியானம் பயிற்சி செய்யுங்கள் .இதனால் உடல் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விலகி ஆரோக்கியம் பெறலாம் .
Sunday, 20 October 2013

ஸ்ரீயும் நானும் .

யு கே ஜி படிக்கும் என் தம்பி மகன் ஸ்ரீயும் நானும்


அபார்ட்மென்ட்டில் உள்ள சஜ்ஜஷன் பாக்சை பார்த்து

ஸ்ரீ :இது என்ன அத்தம்மா?

நான்: நம்ம குறைகளையும் அவங்க செய்ற நல்ல விசயங்களுக்கு தேங்க்ஸ் சொல்லியும் இதுல லெட்டர் எழுதி போடலாம் .அதுக்காக வச்சிருக்காங்க . இதை சஜ்ஜஷன் பாக்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க கண்ணா .

ஸ்ரீ :அப்போ நாங்களும் கரெக்டா தான் செய்துருக்கோம்.

நான்:என்னடா கண்ணா செஞ்சிங்க?

ஸ்ரீ : எங்க ஸ்கூல்லில் உள்ள பாக்ஸ்ல நாங்களும் லெட்டர் எழுதி போட்டுருக்கோம்

நான் : எப்போ டா ?

ஸ்ரீ : எக்ஸாம்முக்கு முன்னாடி அத்தம்மா.

நான் :என்ன டா எழுதி போட்டேங்க , யார் எல்லாம் எழுதி போட்டேங்க ?

ஸ்ரீ : லீவ் வேணும் ட்வென்டிபைவ் டேஸ்க்கு வித்அவுட் ஹோம் வொர்க்னு , நானும் என் கூட இன்னும் அஞ்சு பாய்ஸ்சும் ரெண்டு கேர்ள்ஸ்சும்.

நான்:நேம் எழுதி போட்டீங்களா ? யாரும் பாக்கலையா ?

ஸ்ரீ : நாங்க என்ன லூசா அத்தம்மா? யாரும் பாக்காத போது தான் போட்டோம் . நேம் எழுதினா கிளாஸ்ல வந்து திட்டுவாங்கனு எழுதல.

நான் :ஏன் கண்ணா இப்படி செய்த ?

ஸ்ரீ : பின்ன என்ன அத்தம்மா. லீவே விடமா கிளாஸ் வைக்கிறாங்க .போர் அடிக்குது . விட்டாலும் ஹோம்வொர்க் குடுதுடுறாங்க .

நான் : இனி இப்படி செய்யாதடா கண்ணா . நான் உங்க மிஸ் கிட்ட சொல்லி லீவ் விட சொல்றேன் .

ஸ்ரீ :சரி அத்தம்மா .

#கல்வியை குழந்தைகளுக்கு விளையாட்டாக புகட்ட வேண்டும் .அதை விட்டு விஷம் போல திணிக்க முற்படும் போது இது போல வெறுப்பே ஏற்படும் .

#லீவ் நாட்களில் ப்ராஜெக்ட் என்ற பேரில் குழந்தைகளை படுத்தி எடுக்கும் பள்ளி நிர்வாகங்கள் இதை கருத்தில் எடுத்து சரி செய்தால் மட்டுமே இந்த வெறுப்பு மாறும் .


Saturday, 19 October 2013

யார் இவள் ?இளையவளாய் பிறந்தும்
மூத்தவள் போல்
மிடுக்கோடு
அரவனைப்பில்
அன்னையை தோற்கச்
செய்கிறாய் !!

தந்தையாய் தோளணைத்து
தைரியம் சொல்கிறாய்
தமயனாய் அதிகாரம் செய்து
பூப் போல எனை பாதுகாக்கிறாய்!!

போலியாக என்னுடன்
போட்டிபோட்டு பின்
எனக்கே நீ விட்டும் கொடுக்கிறாய் .
நான் கண் கலங்கினால்
நீ மனம் கலங்கி விடுகிறாய் !!

தோழியாய்
என் துயர் களைய
எத்தனிக்கிறாய்
குழந்தையாய் என் மடியமர்ந்து
குறும்புகள் பல செய்கிறாய் !!

நிஜத்தில் விலகி
நினைவுகளில்
என்னை ஆரத்தழுவும்
என் செல்ல சுந்தரத் திலகமே
சில நேரங்களில்
இந்த அணைப்புக்காக
உயிரும் உடலும்
ஏங்கித் தவிக்கிறது .!!!

Thursday, 17 October 2013

ஸ்ரீயும் லக்ஷ்மனும் .
லக்ஷ்மன் : என்ன டா தம்பி சாப்பிட்ட ?

ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன்

லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா ????

ஸ்ரீ : ஆமா மாமா ...முகத்துக்கு பவுடர் கிரீம் எல்லாம் போடுவாங்க இல்லையா அது போல தான் இதுவும் .

லக்ஷ்மன்: தோசையில் உங்க அத்தை பவுடர் லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு குடுத்தாளா ???

ஸ்ரீ : இல்ல உருளைக்கிழங்கு வைத்து மசாலா செய்து போட்டு குடுத்தாங்க மாமா .

லக்ஷ்மன் : திருதிருன்னு முழிச்சிட்டு மீரா உங்க வீட்டுல எல்லாரும் இப்படித்தானோ அறிவாளியா இருப்பிங்களா ???/Wednesday, 16 October 2013

உன்னுள் தொலைகிறேன் .நீ அருகமர்கிறாய்
என்றென்னும் வேளைகளில்
எட்டி நின்று வேடிக்கை செய்கிறாய் .

எட்டி நிற்கிறாய்
என்று நினைக்கும் தருணங்களில்
கட்டி அணைக்கிறாய் .

விழிகளுக்குள் நுழைந்து
இதயத்தில் சிம்மாசனமிட்டு
அமர்ந்து கொண்டாயடா .

கொடுத்தேனா
பெற்றேனா என்றறியேன்
நீ என் இதழோடு இதழ் ஒற்றும்
பொழுதுகளில் .

என் பலமும்
என் பலவீனமும் நீயாகிறாயடா.

உன்னுள் உறைந்து
பின் உன்னுள்ளே தொலைந்தும்
போகிறேனடா...!!!

என் வீட்டு தேவதை


''கை கால் முளைத்த
மூன்றாம் பிறை ஒன்றை
பிரம்மன் எனக்கிங்கு
பரிசளித்தான்.

அத்தை என்று
நீ அழைக்க
ஆயுள் கொண்டு
காத்திருப்பேன்...

உன் நிறம் கண்டு
ரோஜாவும்
வெட்கிப் போனதோ ?

மொழியில்லா
உன் குரல் கேட்டு
குயில் கூட
கூவ மறந்ததோ?

மின்மினி போல் நீ
கண் சிமிட்டும்
அழகு பார்த்து
விண்மீன்கள் ஒளிந்து
கொண்டதோ?

உன் எச்சில் சுவை
அறிந்தபின் நான்
தேன்சுவை யதையும்
மறந்தேனடி...

மயிலிறகே மென்மை
என்றிருந்தேன் உன்
மேனி தொட்டுப்
பார்க்கும் வரை...

உறக்கத்தில் உன்
தாத்தா கதை சொல்ல
கேட்டு நீ
சிரிக்கின்றாயோ?

நீ உதடு சுழித்து
அழும்போது என்
மனம் இங்கு
அழுகின்றதடி...

மருமகளாய் வந்த
என் தேவதையே
மாமன் உனக்கிட்ட
பெயர் 'சிந்தனா'..

ஆனாலும்
நீ பூமி வரும் முன்
என் அப்பனும்
வந்தபின் உன் அப்பனும்
உன்னை அழைப்பதென்னவோ
என் பெயர் சொல்லித்தானடி...

பாசக் குவியல்களை
சேகரித்துக் காத்த
சிற்பக் கலசமடி
நீ எனக்கு.!!!!