Wednesday, 27 November 2013

கலைந்த கோலம்


ஆழ்ந்த நித்திரையில்
ஒரு கனவு
அக்கனவுக்குள்
ஒரு தூக்கம்

வேடனின் அம்பொன்று
மரக் கிளையில் அமர்ந்திருந்த
கிளியின் கழுத்தை குறி பார்க்க
வீழ்ந்து மடிந்ததந்தக் கிளி

பதறி துள்ள
கலைந்தது

கனவில் வந்த தூக்கமா?
தூக்கத்தில் வந்த கனவா?

இன்னும் எழும்பவில்லை நான் ...Sunday, 24 November 2013

முத்தச் சிதறல்கள்பசிக்கிறதென்றதும்

பரிமாற ஏதும் இல்லை
என் முத்தம் தின்று போ என்கிறாய் .!!!
==========================

இதழ் கொண்டு
மை தீட்டும்
புது யுக்தி
எங்கறிந்தாயடா!!!
================

இதழ் பட்டுத் தெறித்ததும்
மழைத்துளி
தேன்துளியானடா.!!!
================

என்னை தொட்டு
சிதறும்
உன் முத்தத் துளிகள்
உனக்கான கவிதையாகிறது .!!!
==========================

நீ பொழியும்
முத்த மழையில்
நான் பூக்களாய்
நனைகிறேன் !!!
=============

இதழ் மடிப்பில்
சேகரித்துக் கொள்ளடா
ஒவ்வொரு
முத்தத் துளிகளையும்

மொத்தமாய் கணக்கிட்டுகொள்வோம் .!!!


Monday, 18 November 2013

தென்றலென பிறந்தவளேதென்றலென பிறந்து
முகிலோடு கலந்து
கார்மேகமாய் உருவெடுத்து

பூஞ்சாரலாய்
எம் சுவாசம் வருடி
வானவில்லின் ஜாலத்தோடு

பெருமழையாய்
பூமியை முத்தமிட்டு

மலைகளில் அருவியாய்
ஆர்ப்பரித்து
காடுகளில் நதியாய்
நடனமாடி

கடல் அன்னையில்
சங்கமித்து
சூரியக் காதலனின்
அன்பு தீண்டலில்

மீண்டும் மீண்டும்
குளிர் வாடலாய் பிறக்கிறாய்!!!


Tuesday, 12 November 2013

பதநீர்
பனைமரத்தின் பாளையை சீவி அதில் ஒரு சுண்ணாம்பு தடவிய கலயத்தை கட்டிவிட்டு செல்வர் பனை ஏறுபவர்கள் .அதிலிருந்து வடியும் நீரே பதநீர் .

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.

பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது. மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

இப்போது கிராமப்புறங்களில் பனை ஏறுபவர்கள் குறைந்துகொண்டே வருவதால் சுத்தமான பதநீர் கிடப்பது இல்லை . நீரில் சர்க்கரை பாகு கலந்து பதநீர் என்று விற்பனை செய்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் சாப்ட்ரிங்க்ஸ் அருந்தும் நம் மக்கள் இது போன்ற நல்லதொரு பானத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை என்பது தான் வருத்ததிற்குரிய உண்மை .Monday, 11 November 2013

எனக்குள் உறைந்தவன்

எழுத்துக்களில்
தேடினேன் உன்னை
கவிதையாய்
என்னுள் ஊற்றெடுக்கிறாய்

உன் அன்புச் சாரலில்
நனைந்திட தேடினேன்
அடைமழையாய் வந்தெனை
ஆலிங்கனம் செய்கிறாய்

வெளிச்சம் வேண்டி
விளக்கொன்று தேடினேன்
விண்மீன்களாய்
எனை பார்த்து
கண்சிமிட்டுகிறாய்

கனவில்
உன்னை நாடிக்
கண் மூடினேன்
நிஜமாய் அருகில் வந்து
மெய் சிலிர்க்க செய்கிறாய்

என்னை விட்டு
எங்கெங்கோ தேடியிருக்கிறேன்
நீ எனக்குள் ஒளிந்திருப்பதை
அறியாமலேயே.. !!!


Sunday, 10 November 2013

வரம் தருவாயா ?என் வார்த்தைக்குள்
சிக்காத கவியொன்றை
வரமாய் கேட்கிறேன்
உனக்காக நான் எழுத

பெருமழையின்
சிறு தூறலாய் மாற
வரமாய் கேட்கிறேன்
உன் மெய் தீண்டி கொள்ள

வெண்பனியின்
ஒரு துளியாய் மாற
வரமாய் கேட்கிறேன்
உன்னில் உறைந்து கொள்ள

என் உயிருக்குள்
நீ உறைந்திட
வரமொன்று
கேட்கிறேன்
தவங்கள் ஏதுமின்றி!!!
Wednesday, 6 November 2013

தேவதையடி நீ எனக்கு
என் பெயர் சொல்லி
இப்போதெனை அழைத்தாயா
என்றான்
இல்லையடா என்றதற்கு
என் தோட்டத்து மாமரத்தில்
குயிலொன்று கூவிற்றேயென
கன்னம் சிவக்க வைத்தான்

என் காலடி ஓசை கேட்டதும்
துள்ளி குதித்து
ஓடி நீ ஒளிந்தாயா என்றான்
இல்லையடா என்றதற்கு
மானொன்று எனைக்கண்டு
துள்ளி ஓடி ஒளிந்ததென்றான் .

சாரல் மழை கண்டு
களிநடனம் ஆடினாயா என்றான்
இல்லையடா என்றதற்கு
மயிலொன்று
தோகை விரித்தாடக் கண்டேன்
என எனை திகைக்க வைத்தான்

ஐந்தறிவு விலங்கினமல்ல
ஆறறிவு பெண்ணடா
நான் என்றதற்கு ,
பெண்ணல்ல நீ எனக்கு
தேவதையடி என்றுரைத்து
எனை மயங்க வைத்தான்!!!