Monday, 30 December 2013

முடிவறியா பாதைகள்இடைவெளிகள் அதிகமற்று
ஒற்றைப் புள்ளியாய்
நீண்டுகொண்டே செல்கிறது...

முடிந்துவிடுமென முன் அடி வைக்க
பிரிந்தே செல்கிறன பாதைகள் ...
இடம் மாறி நடக்க எத்தனிக்கும் வேளைகளில்
வாழ்வின் தடம் மாற்றிடும் பாதைகள் ...

வளைவு நெளிவுகளாய்...
மேடு பள்ளங்களாய்....
அகண்டும் குறுகலுமாய்...
தடைகளற்று நீண்டு கொண்டே ....

பயணிப்பவர்களுக்கு மட்டுமேயல்லாமல்
பார்வையாளர்களுக்கும் ....
கண் அளக்கும் தூரம் அருகிருந்தாலும்,
கால்களால் அளந்திடும் தூரம் நீளமே...
வாழ்வின் பயணங்கள் ஒரு புள்ளியில் முற்றுபெற,
பாதைகளோ முடிவறியா !!!


Sunday, 29 December 2013

சின்ன சின்ன ஆசைகள்


கொஞ்சும் மழலையாய் மாறிவிட ஆசை

வண்ணத்துப்பூச்சியாய் தேன்சுவைக்க ஆசை

மொட்டில் இருந்து பூவாய் வெடித்திட ஆசை

கயல் போல நீரில் நீந்திட ஆசை

விண்மீனாய் வானில் உறைந்திட ஆசை

மயில் போல தோகை விரித்தாட ஆசை

மான் போல துள்ளி குதித்தோட ஆசை

கிளி போல கிள்ளை மொழி பேச ஆசை

குயில் போல கானம் பாடிட ஆசை

வானவில்லை உடையாய் அணிந்துகொள்ள ஆசை

நிலவின் மடியில் கண்ணுறங்க ஆசை

அன்பெனும் குடைக்குள் உலகை அடைத்திட ஆசை.!!!
Saturday, 28 December 2013

அன்பதிகாரம் 2#அன்பெனப்படுவது காதோடு கதை சொல்வது போல் வந்து கழுத்தோடு முகம் புதைப்பது...

#அன்பெனப்படுவது உண்ணும் உணவில் உப்பு அதிகமென்பதை. உன்னை ஒருபோதும் மறவேன் என நாசூக்காய் சொல்வது...

#அன்பெனப்படுவது செல்லப் பெயராய் உன்னை செல்லமென்றழைப்பது ...

#அன்பெனப்படுவது உண்ணும் உணவின் முதல் கவளத்தை ருசி பார்த்து பின் ஊட்டிவிடுவது...

#அன்பெனப்படுவது கையில் வைத்திருக்கும் ஒரு கல்கோனா மிட்டாயை காக்காய் கடி கடித்து தோழனோடு பகிர்ந்து கொள்வது ..

#அன்பெனப்படுவது விதையில் இருந்து துளிர்க்கும் தளிர்களை விரல் கொண்டு மென்மையாய் வருடுவது ...

#அன்பெனப்படுவது முகமறியா அகங்களுக்காய் மனம் கலங்குவது...

#அன்பெனப்படுவது நகம்வெட்டி தேடும் போது விரல் பிடித்து நகம் கடித்துவிடுவது ...

#அன்பெனப்படுவது மதங்கள் கடந்து பண்டிகை நாட்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்வது...

#அன்பெனப்படுவது உன் நிழலை அளவெடுத்து ரசிப்பது ...Friday, 27 December 2013

அமைதியின் ஒரு துளி
இன்றும் தொடர்ந்து கொண்டே...
நேற்றில் முடியா எனது பொழுதுகள்.

ஏனென்று புரியாமலே ...
இது நேற்றோ அன்றி அதன் முன்தினம் போல!!

நேற்றைகளின் பிரதிபலிப்பாகவே அமைந்து விடுகிறது பல நேரங்களில் இன்றும்...

மணித்துளிகள் நிமிடங்களோடும் ,
நிமிடங்கள் நாட்களோடும்
நாட்கள் , வாரங்களாய் ,
அதுவே மாதங்களோடு கண்ணாமூச்சி விளையாடுகின்றது.

தெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை
கல்லெறிந்த நீர் திவலைகளாய் குழம்பி
சலித்துவிடுகிறது சில நேரங்களில் ...

விம்மி வெடிக்கின்றன சில மனதை அழுத்தும் நினைவுகள் ...

அதன் தாக்கத்தை எதிர் கொண்டு
அமைதியின் ஒரு துளியில் கரையும் நான் ...


Thursday, 26 December 2013

சுமுகமான உறவுகள் நிலைத்திட ...

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க......

1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.

2.அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள்.(Loose Talks)

3.எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டுக் கொடுங்கள்.(Compromise)

4.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.(Tolerance)

5.நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.(Adamant Argument)

6.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness)

7.உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Tales)

8.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.(Superiority Complex)

9.அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

11.உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.(Flexibility)

12.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.(Misunderstanding)

13.மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)

14.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

15.பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்Sunday, 22 December 2013

காத்திருப்பின் அவஸ்தைகள்பெருமழையில் நனைந்த
சிறு பறவையாய்
சிலிர்கிறதென் மனம்

நேர்கொண்ட பார்வை,
நிமிர்ந்த என் நடை,
கனவுகளற்ற நித்திரை,
ஆழ்மன தியானம்...

ஏதும் சாத்தியமாகா
இவ்வேளையில்

கவனப் பிசகில் கல்லில் இடறி
பின் கல்லை நோவதாய்,
என்னை குறைசொல்ல
ஏதுவாய் இருந்ததுனக்கு

எப்போது நீயறிவாய்
உனக்காக என் காத்திருப்பின்
அவஸ்தைகளை ...Saturday, 21 December 2013

வண்ணத்துப் பூச்சியின் துடிப்புகள்மின்சாரம்
நின்று போய் இருந்தது...

சன்னலுக்கு வெளியே
சன்னமாய்
மழை தூறலின்
சத்தம்...

மழை நீரின் ஈரத்தில்
சிறகுகள் இரண்டும்
ஒட்டிக்கொள்ள...

பிரிக்கவும் முடியாமல்
பறக்கவும் முடியாமல்
வண்ணத்துப் பூச்சி
தரையில் விழுந்து கிடக்க...

எப்படியும் விடுபட்டு விட
கால்களில் மட்டும்
பரபரப்பான துடிப்புகள் ....Thursday, 19 December 2013

மறுகரையில் நான்
பகட்டான மாளிகையில்
பட்டாலும் , பொன்னாலும்
அலங்கரிக்க பட்ட
அன்பால் ஏழையாக்கப் பட்ட
சிறு பெண் நான்

ஏக்கப் பார்வையொன்றை
ஜன்னல் வழி வீசிய படி
அருகில் உள்ள ஓலைகுடிசையில்
சந்தோஷத்தின் இளவரசியாய் வலம் வரும்
என் வயதொத்தவளை பார்த்தபடி

உதிரம் பகிர்ந்தோரோடு
வாசல் முற்றத்தில் கூடி களிக்க
நான் மட்டும் தனியறை சிறையில்
என் தோழமை பொம்மைகளுடன்

தந்தை மேல் அம்பாரி ஏற
தாய், உணவோடு அன்பை ஊட்ட
நானோ மாடிபடிகளின் விளிம்பில்
ஆயா தரும் ரொட்டி துண்டுகளை
வெறுப்புடன் பார்த்த படி

ஜன்னல் வழி வெறித்த என்னை
கையசைத்து விளையாட அழைத்தாள் அவ் இளவரசி
மான்குட்டியாய் துள்ளி ஓடினேன்
அவள் மாளிகை நோக்கி

என் ஆடை அணிகளைத் தொட்டு தடவி
நீ இளவரசியோ என கேட்க
அன்பால் நான் ஏழை என்றுரைத்தேன்
வா , நேசம் பகிர்வோம்
என்றென்னை அணைத்துகொண்டாள்
நானும் கூடுடைத்த பறவையானேன் .ஸ்ரீயும் நானும்


ஸ்ரீ : அத்தம்மா தயிர் சாதம் பிசஞ்சு தாங்க ...

நான் : தயிர் சாதம் பிசைந்து குடுத்தேன்.

ஸ்ரீ : அத்தம்மா நான் உங்கள எப்போதும் மறக்க மாட்டேன் .... ஹஹஹா .....

நான் : என்ன டா சிரிப்பு . நல்லா இல்லையா ?

ஸ்ரீ : நல்லாருக்கே . உப்பு தான் கொஞ்சம் அதிகமா இருக்கு . அதனால தான் உங்கள எப்போதும் மறக்க மாட்டேன் ....

நான் : ...................


Tuesday, 17 December 2013

அன்பதிகாரம்-1#அன்பெனப்படுவது கண்ணாமூச்சி ஆடும் போது அம்மாவின் முந்தானை சேலைக்குள் ஒளிந்துகொண்டு அவளின் வாசம் சுவாசிப்பது ...

#அன்பெனப்படுவது அப்பா குடிக்க தண்ணீர் கேட்கும் போது ஒரு வாய் குடித்துவிட்டு கொடுப்பது...

#அன்பெனப்படுவது நான் மனதில் நினைத்ததை நீ வார்த்தைகளில் சொல்லும்போது நெகிழ்ச்சியடைவது ...

#அன்பெனப்படுவது மழலையின் அக்கும் எனும் அழகிய நாதத்தில் மனம் நெகிழ்வது ...

#அன்பெனப்படுவது நீ கோபப்படும் போது உன் மூக்கின் நுனி பற்றி இழுப்பது ...

#அன்பெனப்படுவது நீ சீண்டும் போது வெட்கி முகம் ஒளித்துக்கொள்ள இடம் தேடி உன் மார்பிலேயே முகம் புதைத்துக்கொள்வது...

#அன்பெனப்படுவது தூக்கதில் குழந்தையை போல நீ சிரிக்கும் அழகை பார்த்து ரசிப்பது...

#அன்பெனப்படுவது எல்லாம் தெரிந்தும் நீ சொல்லும் அழகை ரசிக்க ஒன்றும் தெரியாதது போல உன்னிடம் கதை கேட்பது...

#அன்பெனப்படுவது தலைவலி எனும் போது தலைவருடி நெற்றியில் இதழ் ஒற்றி எடுப்பது...

#அன்பெனப்படுவது அலைபேசியில் உன்னை அழைக்கவேண்டும் என்று நினைக்கும் போதே உன்னிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதாய் என் அலைபேசி சத்தமிடுவது...


Wednesday, 4 December 2013

காதல் விருட்சமாய் நீ
இல்லையென நான் மறுக்க
என்னில் நினைவுகளாய்
நிரம்புகிறாய்

கல்லெறிந்த நீர் திவலைகளாய்
அலையுதென் மனம்

நீ விதைத்துச் சென்ற
காதல் விதையொன்று
கிளைபரப்பி
அகண்ட விருட்சமாய்
வேரூன்றி நிற்கிறதெனக்குள்

அம்மரக் கிளை அமர்ந்த
மனப் பறவையை தூதாய்
அனுப்பிவைத்தேன் உன்னிடம்

அண்ட பெருவெளி சுற்றி
உன்னிடம்
அடைக்கலமானது அப் பறவை

தஞ்சம் வந்த பறவையை
நெஞ்சஅணைத்துக்கொள்ளடா ...