Friday, 31 January 2014

நம்பிக்கை கயிறு


வாழ்க்கை ஒரு மலையேற்றம்
ஏற்றம் ஒன்றே குறியாய்
வீறுகொண்டு ஏறு

பயணம் ஒன்றே குறியாய்
சிகரம் அல்ல
வீறுகொண்டு ஏறு

வெற்றி தோல்விகள் சகஜமாய்
முயற்சி ஒன்றே குறியாய்
வீறுகொண்டு ஏறு

ஏற்றத்தில் தயக்கம்
மலையளவு தேக்கம்
வீறுகொண்டு ஏறு

தடைக் கற்களே
படிக்கற்களாய் மாற்றி
மேலே ஏறு
அடுத்த உயரம் கண்களுக்கு புலப்படும்

ஏறும் போது தடையாய் தெரியும் பாறைகள்
தவறி விழும்போது தாங்கி நிற்கும்.

சில அடி ஏற பல அடி சறுக்கும்
துவண்டு விடாதே

ஏற்றம் மட்டுமே குறியாய்
வீறுகொண்டு ஏறு

வீழ்வதும் உன் தவறல்ல
விழு, ஆனால் விட்டுவிடாதே
உச்சியோடிணைந்திருக்கும்
நம்பிக்கை எனும் ஒற்றைக் கயிற்றை

மீண்டும் ஒரு ஏற்றத்திற்காய் ஆயத்தமாகு !!!
Thursday, 30 January 2014

துணையாய் நான்


உன்னின் ஒரு கவிதையாய் நான்!!!

உயிரா,
இல்லை மெய்யா
என கேள்வியாய் நீ...

துணையெழுத்தாய்
இருந்திடவே ஆசையடா!!!

Wednesday, 29 January 2014

நானென்பது யார்?


நானென்பது யாரென
புரியாத புதிராய்
முன்னின்றது
கேள்வியொன்று !!!

விடை தேடி களைத்த வேளையில்
பெரும் கேள்விக்கனைகளோடு
முன் வந்து நின்றது அறிவு

நானென்பது யார்?

என்னில் உணர்ந்த அனுபவங்களா?
ஆழ்மனக் கடலில் புதைந்திருக்கும்
நினைவுகளின் பொக்கிஷங்களா?
நம்பிக்கையின் ரேகைகளா?
மரபு வழி புகுந்த
முன்னோர்களின் கனவுக்கோளங்களா ?

சொல்லற்று நிற்கையில்
வியப்பாய் விரிகிறது "நான்"!!!

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமாய்
விலகவும், விலக்கவும் இயலா
மனதை நிரப்பும் கேள்விகளோடு
மற்றொரு நாளும் தொடங்குகிறது...

தேடல் முடியவில்லை ....

பெருவெளியில் படர்ந்திருக்கும்
காலத்தை போலவே
புரிவதாய் இல்லை
நள்ளிரவில் எனை எழுப்பும் கேள்விகள்

அதிகாலை உதிக்கும் இளங்கதிரே
நீயாவது சொல்

நானென்பது யாரென்று ??

Sunday, 26 January 2014

மூன்று தவளைகள்மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.

பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.

நாமும் வாழ்வில் இந்த தவளையை போலசெயல் ஒன்றே குறியாக முயற்சி செய்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.Monday, 20 January 2014

ஆண், பெண்ணின் பருவங்கள்சங்க காலத்தில் ஆண், பெண்ணின் பருவங்கள் ஏழாக பிரிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் பருவங்கள்
பேதை- 1 முதல் 8 வயதுவரையுள்ள பெண்.
பெதும்பை- 9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.
மங்கை- 11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.
மடந்தை- 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.
அரிவை-19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்.
தெரிவை-25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்.
பேரிளம்பெண்- 30 வயதுக்கு மேல்உள்ள பெண்.

ஆணின் பருவங்கள் .
பாலன்-1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண்
மீளி-8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண்
மறவோன்-11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண்
திறவோன்- 15 வயது ஆண்
விடலை-16 வயது ஆண்
காளை-17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்
முதுமகன்- 30 வயதுக்கு மேல் உள்ள ஆண் .

சங்க காலத்திலேயே பெண்கள் தங்களுக்கு வாயதாகிவிட்டது என சொல்லவிரும்பாததால் "பேரிளம்பெண் " என்று சொல்லிகொண்டார்கள் . ஆண்கள் வயதை ஒரு பொருட்டாக கருதாததால் "முதுமகன் " என்று தங்களை அடையாளப் படுத்திகொண்டார்கள் .
ஆனால் இப்பொழுது ஆண்களும் தங்களுக்கு வயதாகி விட்டது என்பதை ஒப்புகொள்ளவதில்லை.


Thursday, 9 January 2014

காலத்தின் ஒரு துளிதூளி கட்டிய ஆடிய
தாய்மாமன் வேஷ்டி,
பாலருந்திய கென்டி,
பாட்டியால் மருந்து புகட்டிய சங்கு,
குட்டையாய் போன பட்டு பாவாடை சட்டை,
உடைந்த ஸ்லேட்டின் சட்டம்,
எழுதிக் கரைந்த பென்சில்கள் ,
பொலிவிழந்த தொங்கட்டான்கள் ,
தங்கையோடு விளையாடிய ,
மரச்செப்பு சாமான்கள் ,
அப்பா வரைந்த ஓவியம் ,
அம்மா எழுதிய டைரி குறிப்புகள் ,
செல்லரித்து போன
தாத்தா பாட்டியின் திருமண புகைப்படம்,
இது போல இன்னும் பல .....

உபயோகப் படாதென்றாலும்,

கடந்து விட்ட காலங்கள்
விட்டு சென்ற நீங்கா நினைவுகளாய்
பெருவெளியின் ஒரு ஓரத்தில் (பரணில்)
என்னின் பொக்கிஷங்களாய் !!!

Tuesday, 7 January 2014

தவிப்பின் விடையா நீ?
ஏன் , எப்படி
என்று தொக்கி நிற்கும்
குழப்பமான கேள்விகள்
பல என்னை சுற்றி .

விடையேதும் தெரியாத
புதிர்க் குன்றாய்
தனித்து விடப்பட்டிருக்கிறேன்

எங்கிருந்து தொடங்குவது
என் விசாரிப்புகளை
என்று எனக்கே தெரியவில்லை

உனக்கும் எனக்கும்
இடையே திரை போல
ஏதோ ஒன்று
கிழித்தெறிய
வழி தெரியாமல்
தவிக்கிறேனடா !!!

தடை களைந்து
மீன்டும் உனை சேர
வழி சொல்லடாயென
தாங்கி நிற்கிறேன் உன்னிடம்.!!!

தடை என்று
மனம் நினைத்தால்
தடையாகும் நம் உறவு
விடை தெரியா
கேள்விகளில் இதுவும்
ஒன்றென விட்டு விடு
என் கண்ணே என்கிறாய்

என்னடா என்ற
ஒரு வார்த்தையில்
என் குழப்பங்கள் அனைத்தையும்
தீர்த்தாயடா

இதழாலே எனை தாங்கி
இறைஞ்ச துவங்குகிறாய் நீயும்.!!!