Wednesday 26 February 2014

தேடல்...சுகமா? சுமையா?



தேவைகள் எதுவென்றறியாமலே 
தேடல்களை தொடங்கிவிடுகிறோம்.

தேவைகள் யாதென தெரிந்து 
தேடும் வேளைகளில் 
தெரிந்து விடுகிறது 
இருத்தலும் இல்லாமையும் 

எப்போது , எங்கே, யாரால் , எப்படி , தொலைத்தோம் 
என்பதை உறுதிபடத் தெரியாமல் 
அவநம்பிக்கையோடு அயர்ந்தமர செய்கிறது 
நம் இயலாமை 

கண்டெடுத்திடும் தருணங்களுக்கு நிகராக
நம் கவனத்தை ஈர்ப்பதில்லை 
காணாமல் தேடிய பொழுதுகள்

தொலைந்த ஏதோவொன்று 
தன்னை தேடுவாரற்று 
புதைந்து போயிருக்கலாம் 
அதன் துயர் மிகு ஓலக் கூக்குரல் 
உரிமையாளரை சென்றடையாமல் போயிருக்கலாம் 

புதிய வரவுகளால் கவனிப்பாரற்று 
புறந்தள்ளப்பட்டிருக்கலாம் 
கண்ணெதிரே இருந்தும் 
பொலிவிழந்த அதனிருப்பு 
தன்னை அடையாளப் படுத்த தவறியிருக்கலாம் 

இருத்தலும் இல்லாமையும்
ஒன்றென உணர்வது வலி மிக்கது...



Friday 21 February 2014

நானும் கண்ணாடி தான்


உன்னில்
பிம்பமாய்
பிரதிபலிப்பவள்
நான்

உன் சிரிப்பில்சிரித்து
உன் துக்கத்தில்
துக்கமடைபவள் .

ஆயினும்
உன் கோபங்களும்
புறக்கணிப்புகளும்
என்னில் எரிந்த
கல்லாய்...

சுக்குநூறாகி விடுகிறேன்

கண்ணாடியாய்
என்னை
கையாளுடா...


Wednesday 19 February 2014

தொடரும்....


இனி "தொடரும்"....

இந்த ஒற்றை சொல்லுக்குப் பின்னால்
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்...
ம்ம்ம் எனும் சலிப்புகள்...
அடுத்து எப்போது எனும் தவிப்புகள்...

இது போலவே...

தவிக்கவும் தடுமாறவும்
வைக்கிறாய் என்னையும்

அலைபேசி வழி
பேசிகொண்டிருக்கும் போதே
ஒரு நொடி என
உரையாடலை
நிறுத்திவிட்டு போகும்
உனக்காக...


Monday 17 February 2014

நிஜம் தேடி ...


நிஜம் தேடி அலைந்து
தோற்கும் நேரங்களில்
தளர்ந்து போகின்றது அகம் ...

முட்களின் கூர்மையாய்
வார்த்தைகளின் வலி
மனதில் தைக்க,
மடை தடுக்கும் வெள்ளமாய்
இமை தட்டி வழியும் கண்ணீர்
கன்னக்குழி நிறைக்க...

உள்ளம் மூடி
தோளோடு சாய்கிறேன்
கண்ணீரின் பிம்பத்தில் ஒரு முகம்
நெஞ்சோடு அணைக்கையில் ...

வார்த்தை தொலைத்து
மௌனப் பாலத்தில்
கடந்துகொண்டிருக்கிறேன்
வாழ்வோடு சேர்ந்த அன்பை தேடி நிரப்ப...

இன்றோ பொறுமை காத்து நிற்கிறேன்
விடியலின் உண்மைகளுக்காக ....

Sunday 16 February 2014

கற்பனையாய் ஒரு சுமை


சில்லென தென்றல் முகம் வருட
தோளோடு தோள் உரசி
கைகோர்த்து நடந்த
ஒரு மாலைவேளையின் நினைவுகள்...

பக்கமாய் அமர்ந்திருக்கையில்
சுவாசத்தின் வெப்பம் என் மேல் மோத
உன் வசமிழந்த நிமிடங்கள் ...

வியர்வையின் கசங்கலாய் சட்டை பிடித்திழுத்து
மார்பில் முகம் புதைத்து
ஈரத்தோடு காதலையும் உள்வாங்கிய
ஈரமான மணித்துளிகள் ...

நீ விரட்ட
நான் விலக
என்னை இழுத்தணைத்த
கற்பனை பொழுதுகள் ...

இப்படி பல்லாயிரம் கற்பனைகளோடு
உன்னையும் சேர்த்து சுமக்கிறேன்
என் நினைவில் நீ தடம் பதித்த நாள் முதலாய்...


Saturday 15 February 2014

வாழ்வியல் ரசியங்கள்



நண்பர்கள் சிலர் சேர்ந்து தங்கள் முன்னால் பேராசிரியரை சந்திக்க அவர் இல்லத்துக்கு சென்றிருந்தனர். தன்னிடம் பயின்ற மாணவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று அமர செய்தார் பேராசிரியர் .
அவர்கள் அருந்துவதற்கு காப்பி தயாரித்து காண்ணாடி , பீங்கான், வெள்ளி, போன்ற விலை உயர்ந்த கோப்பைகளிலும் அன்றாடம் உபயோகிக்கும் சில வகை கோப்பைகளிலும் எடுத்து வந்து மாணவர்களின் முன் வைத்தார் .
மாணவர்கள் எல்லாரும் அவரவர்க்கு ஒவ்வொரு கோப்பையை கையில் எடுத்துக்கொண்டனர்

பேராசிரியர் மாணவர்களிடம் , நான் உங்கள் அனைவரையும் கவனித்துகொண்டு தான் இருக்கிறேன் . நீங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு விலையுயர்ந்த கோப்பையில் உள்ள காப்பியை பருக எடுத்துகொண்டீர்கள்
அனைவருமே பகட்டான மதிப்பு மிக்க கோப்பைகளையே விரும்புகிறீர்கள். அதுவே மன அழுத்தத்திற்கும் பதற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக அமைகிறது.

உங்களுடைய தேவை காப்பியே அன்றி கோப்பைகள் அல்ல என்றாலும் நீங்கள் அனைவரும் பகட்டையே விரும்புகிறீர்கள் .
நம் வாழ்வென்பது காப்பியை போல என்றால் , வேலை, பணம், புகழ், அந்தஸ்த்து, நேசம் போன்றவை அனைத்தும் காப்பியை தன்னுள் நிரப்பிக் கொள்ளும் ஒரு கருவியே.

பணம், புகழ், அந்தஸ்த்து போன்ற கோப்பைகளுக்கு அடிமையாகாமல் வாழ்வெனும் பானத்தை பருகி ருசியுங்கள் ( ருசிப்போம் நாமும் )

#ஒரு_ஆங்கில_கதையின்_மொழி_தழுவல்


Friday 14 February 2014

காதலை போற்றுவோருக்கு தனி ஒரு நாள் வேண்டுமா ??


முகம் கானா என் முகநூல் ஆன்மா, திருமதி சுந்தரி கதிர்
https://www.facebook.com/sundarichalliah
அவளின் பார்வையில் காதல் என்பது என்ன என்று தன் அழகிய சொல்லாடல்களுடன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை உங்களுடன் பகிர்கிறேன்



காதல்.....அனல் கொல்லும் பனி மொழி

உச்சரிக்கும் போது உள்ளாடும் நாக்கு
கீழ் மேலாய் தட்டி .......

உதடுகள் இணையாமல் உள்ளங்கள் இணையும் மொழி

வார்த்தைகளுக்குள் அர்த்தங்களாய் சிறை படுத்தமுடியாத
மெளனத்தில் தான் உன்னை அழகாய் பேசமுடியும்

வெட்கம் தருகிறாய்...வேகம் தருகிறாய்
முடிவில் வேதனையும் தருகிறாய்

ஆனால் அத்தனையும் இனிக்க இனிக்கவே......

சிலருக்கு தவிப்பு ..பலருக்கு தேடல் நீ

காதலே உனது பொருள் அன்புஎனில்

பலரில் நீ இன்னும் வேணும் வேணும்
என்கிற ஏக்கக் குறையே

காதலே நீ பாசம் எனில்...
உன்னில் வழுக்கி விழுந்தவர் ஏராளம்

காதலே ..கலவி தான் உன் முடிவெனில்
உன்னை முழுமையாய் உணராத

தன்னை தான் ..உன்னோடு கடக்க முடியாத
உணர்வு வக்கிரப் பள்ளவிழும்
வாய்சவடால் வீரர்கள் இங்கு அதிகம்

அடி முடி காணாத ஆதாம் ஏவாள் பிரியமே
நீ பிறவிகள் மண்ணில் தோன்ற

வித்திட்ட விதையா ...இல்லை விதை கொழுத்த கனியா

பிரிய பிரிய பிரியம் வளர்க்க உன்னால் மட்டுமே இயலும்

ஒருவிழி மோதலில் ..ஒரு மொழி ஆசையில்
மடி கொடுத்து குழைய களிப்பூற வைத்து சிகரம் வளைக்கும் வல்லைமையும் நீயே

கண்ணுக்குள் கத்தி குத்தி கண்ணீர் உதிரம் வரவழைக்க
நீ மறுத்து செல்லும் ஒரு அலட்சியம் போதும்

உன்னை தீண்டாத பருவம் ஆண்//பெண்ணில் இங்கு இல்லை
உன் பெயர் எழுதி வைத்து எத்தனை பேர் தற்கொலை செய்தினும்
உன்னை சிறையில் போட்டு கழுவில் ஏற்ற ஒருவருக்கும் துணிவு இல்லை

ஒரு கைகுலுக்கலாய்..ஒரு கனிந்த குழைவுகளாய்
ஒரு ஆர்ப்பாட்டமாய்..ஒரு அமைதியாய்
ஓர் ஆனந்தமாய்..ஓர் ஏமாற்றமாய்.............
மனித உரு தழுவி....மனங்களில் நீ வாழ்ந்துகொண்டு இருக்கிறாய்

அரும்பு மூச்சு விடும் பூக்களிலும்
பூ தொடரும் பிஞ்சுகளிலும்

பிஞ்சு பருவம் பழுக்கும்
வயதுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் புனிதமே

உன்னை ஏன் நான்

நான் என்னும் என்னை முழுவதுமாய் மறந்து

நீயே சரணாகதியென பதி பற்றும்
இறைப்பிரியம் எனக் கூறக் கூடாது

ஆம்
எனது கனவுகளில்..நினைவுகளில் ..நிஜங்களில்
நிகழ்வுகளில் நீக்கமற நிறைந்து ......

மொழிகளில் போதையேற்றி தள்ளாடும்
என் விதவிதமான ’’கரைகாணா நேசம்’’ எனும் ஆளுமையே

நீ எனக்கு...என்றும் என்றென்றும்

எட்டியாபுரத்து செல்லம்மாவின் கணவனை.....
முண்டாசுக் கவிக் காதலனை மூச்சு முட்டுத் தழுவிய
கற்புக்கரசி கனவு கண்ணம்மா...வழிவந்த

அன்புருகி நான் ஊன்மறக்கும்
நேச இறையெனும் ஆலயமே.........

நிமிட நிமிட நான் உனை நேசித்து..
மொழிதொட்டு பூஜிக்க

இது போன்று
தனி ஒரு நாள் எனக்கு இனி வேண்டுமோ ,,

என் சுவாச நேசமே.......!!!


Thursday 13 February 2014

தெய்வீக காதலிது



காதலிப்பதாய் கூறி
என் சுட்டுவிரல் கூட தீண்டியதில்லை
ஆசை மொழி பேசி
எனை வெட்க படவைத்ததில்லை
பரிசுகளால் எனை
திக்குமுக்காட செய்ததில்லை

கண்களுக்கு புலப்படா
நம் மன பரிமாற்றங்களிலேயே
என்னுள் வெட்கம் பூக்க செய்கிறாய்
உன்னோருவனின் கரம் பற்ற
வாழ்நாள் முழுதும் காக்க செய்கிறாய்

உன்னை காணாத போதும்
கலையாத கனவிது
நீ அணைக்காத போதும்
அணையாத நெருப்பிது

மனதினில் உறைந்த நீ
மைல்கள் தாண்டி இருக்கிறாய்

மனதில் இணைந்து
உணர்வுகளில் ஒன்றி
என்னில் நீயும்
உன்னில் நானும்
வாழும் நம் தெய்வீக காதலிது.!!


Tuesday 4 February 2014

வாழ்வின் ரகசியம்



அன்றிரவு உணவு பரிமாறி கொண்டிருக்கும் போது மெதுவாக தன் மனைவி ஜேனின் கை பற்றி விவாகரத்து வேண்டும் என்பதை தெரியபடுத்தினான். இரவு முழுதும் மௌனமாய் அழுதுகொண்டே தங்களின் திருமண வாழ்வில் எங்கே விரிசல் விழுந்தது என்று ஆராய தொடங்கினாள். அவனோ தன்னால் அவளின் வாழ்வு வீணாகி போனதாக எண்ணி வருந்தினான்.காரணம் அவன் தன் மனைவியை உயிரினும் மேலாக காதலிக்கிறான்.வாழ்நாளில் பத்து வருடங்கள் ஒன்றாக கழித்தவர்கள் நொடி பொழுதில் அன்னியமாகி போனார்கள்

விடிந்தது ... காலையில் ஜேன் தன் கணவனிடம் விவாகரத்துக்கான நிபந்தனைகளை சமர்ப்பித்தாள். தனக்கு அவனிடம் இருந்து எதுவும் தேவையில்லை. ஆனால் விவாகரத்துக்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும் எனவும் தங்களின் திருமணத்தின் போது அவன் அவளை கையில் தூக்கி கொண்டு மணவறையை விட்டு வெளியே வந்தது போல இனி வரும் ஒரு மாதகாலமும் தங்களின் தனியறையில் இருந்து வாசல் வரை தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று கோரினாள். மிதமுள்ள அந்த ஒரு மாத காலத்தையும் அமைதியாக கழிக்கவேண்டும் என்பதால் அவனும் தன் மனைவின் அர்த்தமில்லா ( என்று தன் மனதில் நினைத்துக்கொண்டு ) கோரிக்கையை ஏற்றுக் கொண்டான் .

விவாகரத்து உறுதி செய்யப்பட்டதும் அடுத்த நாள் அவளை சுமந்தபடி வாசல் வரை வர இருவரும் தயக்கத்துடன் அசவுகரியமாக உணர்ந்தார்கள் . ஆனால் அவர்களை பின்தொடர்ந்த அவர்களின் மகனோ தன் அப்பா அம்மாவை கைகளில் ஏந்திய படி நடப்பதை பார்த்து மகிழ்ச்சியில் கைதட்டி சந்தோஷமடைந்தான் . அவனுக்கோ மனதில் லேசான உறுத்தல் ஏற்பட்டது.

அடுத்த நாள் இருவருக்கும் சற்று சவுகரியமாக இருந்தது. அவள் அவனின் மார்பில் சாய்ந்து கொண்டபோது அவளின் வாசம் அவனை தாக்கியது. பலநாள் தன் மனைவியை அலட்சியப்படுத்தியிருப்பதை எண்ணி வருத்தினான். அவள் தன் இளமையை தொலைத்து முதுமையில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். திருமணம் என்ற பெயரில் பெரும் சுமையொன்றை ஏற்றியது தவிர இவளுக்காக நான் என்ன செய்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டான் .

ஐந்தாம் நாளில் தங்களுக்குள் நெருக்கம் மீண்டும் மலர்வதை அவன் உணர்ந்தான். இவள் தன் பத்து வருட வாழ்வை தனக்காக தியாகம் செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான். அடுத்து வந்த நாட்களில் நெருக்கம் இன்னும் அதிகமாவதை உணர்ந்தான் . அவளை சுமப்பது எளிதாக இருந்தது. ஒரு மாத காலம் சென்றதே தெரியவில்லை .

இறுதி நாளில் அவளை தூக்கிக்கொண்டு ஒரு அடி கூட அவனால் எடுத்து வைக்க முடியவில்லை. அதே நேரத்தில் வீட்டிற்க்குள் நுழைந்த மகன் , அப்பா நீங்கள் அம்மாவை தூக்கி சுமக்கும் நேரம் வந்துவிட்டது என்றான் . அவனை பொருத்தவரை தன் தந்தை , தாயை சுமப்பதை பார்ப்பது வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது . இதை சொல்லிவிட்டு மகன் வெளியில் சென்றுவிட , அவன் தன் மனைவியை இறுக்கமாக அணைத்தபடியே நம் வாழ்க்கை நெருக்கத்தை இழந்துவிட்டதை நான் கவனிக்க தவறிவிட்டேன் என்று அவளை இறக்கிவிட்டு அலுவலகம் விரைந்தான் .

தன் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மீண்டும் வீடு விரைந்தான் . காரின் கதவை கூட பூட்டாமல் அவசரமாக மாடிப்படிகளில் ஏறி கதவை தட்டினான். கதவை திறந்த தன் மனைவியிடம் என்னை மன்னித்துவிடு ஜேன் ,எனக்கு விவாகரத்து தேவையில்லை என்றான். தங்களின் வாழ்வு கடினமாக மாறியதற்கு காரணம் தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பவில்லை என்பதல்ல, தங்கள் வாழ்வின் பொன்னான தருணங்களை ஒருவருக்கொருவர் மதிக்கவில்லை என்பது தான் உண்மை என்றான். அவள் விழித்துக் கொண்டவளாய் அவனை ஏறெடுத்து பார்த்தாள். அவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு தனியறைக்குள் சென்று விம்மி வெடித்தாள். அவனோ படியிறங்கி மீண்டும் காரைஎடுத்தான்

தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்புகையில் தன் மனைவிக்காக ஒரு பூங்கொத்து வாங்கினான். விற்பனை பெண்மணி அட்டையில் என்ன எழுத வேண்டும் என கேட்டாள். அவன் புன்னகையுடன் “மரணம் நம்மை பிரிக்கும் வரை தினமும் உன்னை காலையில் தூக்கி சுமப்பேன்" என்று எழுதி கேட்டான். மாலையில் பூங்கொத்தோடு முகத்தில் புன்னகை சுமந்தபடி மாடிப்படிகளில் ஏறத்தொடங்கினான் .... இதற்கு மேல் கதையை தொடர்வது அவசியமற்றது என்பதால் விட்டுவிடுகிறேன்

நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன வாழ்வியல் விசயங்களே உறவுகளை பலப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதமாய் இருக்கிறதேயன்றி வீடோ, காரோ, சொத்துக்களோ, வங்கியில் பணமோ அல்ல. வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தலால் வரும் வெற்றியை அறியாதவர்களே பெரும்பாலும் தோற்றுப் போகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இன்று நம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் பெரும்பான்மையோர் அந்த நிலையிலேயே தான் இன்றும் உழன்று கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. கனத்த இதயத்தோடு ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது .

Monday 3 February 2014

மௌனத்தின் சப்தங்கள்


மௌனத்தின்
சப்தங்கள்
இனிமை !!!

மனதை அடக்கி
மௌனத்தை கேள்...

மௌனம்
நாம் வியக்கும்
ஒரு விந்தை மொழி

கேட்கும் செவிகளுக்கு
மௌனம் பேசும்
மொழியின் சப்தம்
விந்தையாகும்

உணர்வுகளின் ஓம்காரம்
ஒரு மௌனப் பரிமாற்றம்

மனக்கடலின்
கரை மோதும்
நினைவலைகள்
ஒரு மௌனப் போராட்டம்

கண்கள் பேசும்
காதலின் மொழி
ஒரு அழகிய
மௌனத் தடுமாற்றம்

ஆம் ...
மௌனத்தின்
சப்தங்கள்
இனிமை !!!


Sunday 2 February 2014

எனக்கும் எனக்குமான இடைவெளியில்...


எதுவென்றே தெரியாத
ஏதோவொன்றால்
எப்போதும் நிறைக்கப்படுகிறேன் !!

கனவுகளுக்கும்
காணும் காட்சிகளுக்கும்
இடைப்பட்ட சூனியத்தை,

நிஜங்களுக்கும்
நிழல்களுக்குமான இடைவெளியை,

பெருவேளிக்கும்
என் எல்லைகளுக்குமான
தூரங்களை
என எல்லாம் மறைந்து மறைத்த படி...

நினைவுகளுக்கும்
நடக்கும் நிகழ்வுகளுக்கும்
இடையில் என்னை நிறைத்திட,

எனக்கும்
நான் எனும் எனக்குமான
தூரத்தில்

எதுவென்றே தெரியாத
ஏதோவொன்றால்
எப்போதும் நிறைக்கப்படுகிறேன்...!!!


Saturday 1 February 2014

ஊடலாய் சில நொடிகள்


உன் அன்பின் பரப்பிற்குள்
அடியெடுத்து வைக்கும் போதே
ஆழிப் பேரலையாய்
இழுத்துக் கொள்கிறாய் என்னை

விக்கித்து நிற்றலும்,
செயலற்று அமர்தலும்,
கைகால் முடக்கி படுத்தலும்
இப்போதென் வாடிக்கையாகிவிட்டது...

நினைக்கும்நொடிகளில்
நிறைத்துவிட்டு போகிறாய் காதலை...

இப்போதேனும் விட்டுசெல்
உன்னிடம் சண்டையிட காரணமாய்
ஒன்றிரண்டு தவறுகளை !!!