Friday, 25 April 2014

யாதுமான என்னவள்என் விடியல்களின் போது
மலரும் புன்னகை பூவாய்

கலங்கி தவிக்கும் போது
மடி சாய்த்து தலை கோதும் விரல்களாய்

தடுமாறும் போது
தாங்கி நிறுத்தும் தோள்களாய்

முகம் புதைத்து அழும் போது
தாங்கி அணைக்கும் தலையணையாய்

மனம் நோகும் போது
அணைத்துக்கொள்ளும் வெப்பமாய்

உறங்க கெஞ்சும் போது
இமை வருடும் தென்றலாய்

ஆற்றவியலா நேரங்களில்
ஆறுதல் கொடுக்கும் முத்தங்களாய்

எட்டி விலகி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்

மிரண்டிடும் போது
ஒளிகொடுக்கும் கதிரலைகளாய்

தனிமை படுத்தும் போது
கால் தழுவும் கடலலையாய்

ஏதோ ஒரு பொழுதில் இல்லை
முப்பொழுதும் , எப்பொழுதும்
வேண்டுமடி என் செல்லமே...
நீ என்னவளாய்
என் சுந்தரக் கண்ணழகி !!!


Sunday, 20 April 2014

அடைபடா ஒற்றை புள்ளி


எண்ணும் போது
தவறியிருக்கலாம்

கோடிழுத்து இணைக்கும் போது
விடுபட்டிருக்கலாம்

அதிகப்படியென
தவிர்த்திருக்கலாம்

இதுபோல இன்ன பல
காரணங்கள் இருப்பினும்

இயல்பை மீறி
உறுத்திக் கொண்டிருக்கிறது
கோலத்தில் அடைபடா
ஒற்றைபுள்ளி ..


தவிர்த்த ப்ரியங்கள்


தவிர்த்தோ தவிர்க்கபட்டோ
பல நேரங்களில் நம் ப்ரியங்கள்...

ஏற்றுக்கொள்ளாத ப்ரியங்களும்-உடைந்து
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
என்னவாகுமென தோன்றுகிறது

தினங்கள் தோறும் தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக்கொள்ளும்
மரங்களைப் பார்க்கும் போதும்
மனதை ஈர்க்கும் கவிதைகள் வாசிக்கும் போதும்

உடைந்த நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகவும்

தவிர்த்த ப்ரியங்கள்
ஈர்க்கும் கவிதைகளாகவும்
உருமாறி உள்ளதென்று!!!காகிதத்தில் ஒரு காடு


தூரிகையால்
இலை ஒன்றைதீட்டினேன்
எங்கும் பசுமை நிறைந்திற்று

வியந்து பூவொன்று வரைந்தேன்
அதனின் வாசம் ஊரெங்கும் மணத்தது!!

காயொன்று எழுத
கனிந்து தித்தித்தது

வேர்களென்றும் விழுதுகளென்றும்
கிளைத்துத் தழைக்க
முழுமையாக்கினேன்

பறவைகள் குடிபெயர்ந்து
மகிழ்வாய் இசைத்திருந்தன

மரம் பெருகி வனமாகிற்று

மனிதம் தொலைந்த நகர் தொலைத்து
அவ்வனத்தின் அரசியானேன்.Tuesday, 15 April 2014

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்


கனவுகள் யாவும் நிறைவேறிட
நல் எண்ணங்கள் ஈடேற்றித் தர
உள்ளத்தில் இன்பமும்
இல்லத்தில் சுகமும் இனிதே தங்கிட

மழலை மொழியாய் தித்தித்திட
முகங்களில் மகிழ்ச்சி மலர்ந்திட
குனிந்தவன் நெஞ்சம் நிமிர்ந்திட
வறுமைகள் போக்கிட
தலைமுறைத் தாண்டியும்
தமிழன் வாழ்ந்திட

நதிகளில் புதுப்புனல் பாய்ந்து களம்
யாவும் கட்டுக்கதிர் மலையொத்த முகட்டில்
நலம் யாவும் மங்கலமாய் நம்வீடு
வரவேண்டி வந்தது இந்த புத்தாண்டு

இனிதாய் வரவேற்ப்போம் இந்த "ஜய" ஆண்டை!!!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் !!ஒற்றை விரல் தீண்டலில்....


கடல் தப்பி கரை ஒதுங்கிய
மீன்கள் இரண்டு
மணல் வெளியில்
சந்தித்துக் கொண்டன

கடல் பற்றிய கதைகள் பல
இருந்தன அவைகளிடம்
ஆனால் கடல் இல்லை

வாழ்வின் முடிவை நோக்கி
பயணிக்கின்றன
அதனதன் வழியில்

ஒரு வேளை ,
ஒரு தலை கோதலோ
ஒரு மென் முத்தமோ- இல்லை
ஒரு ஒற்றை விரல் தீண்டலோ
நிகழ்ந்திருந்தால்
கடலற்றும்
வாழ்ந்திருக்கக் கூடும்.


இயல்பின் மாற்றங்கள்


அந்திசாயும் பொழுதொன்றில்
அருகிலுள்ள பூங்காவில்
ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தேன்

நிஜங்களின் நிதர்சனங்களும்-மனதில்
நிழலாடும் எண்ணங்களும்-அலைகளாய்
கரை மோதிச் சென்றன.


வார்த்தைப் பரிமாற்றங்களோடு
வசந்தத்தின் கற்பனைகள் சுமந்து
ஆங்காங்கே ஓரிருவர் இருக்க ...

எறும்புகளின் தேடல்களும்
மனதின் அலைவரிசையாய் ஒலிக்கும்
பறவைகளின் கீதங்களும்
எல்லையில்லா ஆனந்தமாய் !!

பின்னிய வலையறுந்து
கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவற்று கையேந்திய
பிஞ்சின் வலியும்
கனக்கத்தான் செய்கிறது

வாயிலுக்கருகில் உள்ள மரத்தடியில்
அயர்ச்சியாய் உறங்கும் முதியவரை காணவில்லை
என்ன ஆயிற்றோ ...
நாளை எவரோ ...

நாளையும் செல்வேன்
தன்னியல்பில் இருந்து மாறியவை
எவையென்றறிய ...


எனக்குள் ஒரு தேடல்எங்கோ எதையோ
தொலைத்து
அதை எதனிடத்திலோ
தேடி ...

தேடித் தேடி ...
தேடித் தேடி...

அலைந்து
தெளிந்து நிமிர்ந்தேன்

தேடல் வெளியிலில்லை
எனக்குள் என்னை..

Thursday, 10 April 2014

சிறகில் ஒரு பயணம்


பெருமழை நின்ற வானத்தின்
சிறு தூறல் ஒன்றினைக்
கயிறாக பற்றி
பால் வீதியில் உலாவ முயற்சிக்கையில்

எதிர் வந்த தூறலின் நூலிழைநுனி பட்டு
தவறி கீழ் நோக்கி விழ ...

விழுந்த இடம்
பறத்தலுக்கு ஆயத்தமான
பறவையின் சிறகெனபதால்

அச்சிறகையே பற்றி
மீண்டும் ஒரு பயணம் தொடங்குகிறேன்!!

Tuesday, 8 April 2014

பெண்மையின் அடையாளம்


சுமந்தோ
சுமத்தப் பட்டோ
நத்தையின் ஓடு

தன்னுடன் பயணித்து வரும் போது
சுமையாகவும்
பலரை ஈர்க்கும் அழகானதொரு கூடாகவும்

ஓடில்லா நத்தை கற்பனைக்கு எட்டவில்லை
உடனிருக்கும் அதன் அடையாளமாய்

கூட்டிற்கான நகலாய்
பெண்களின் வரையறைகள்
சுமந்தோ- அல்லாமல்
சுமத்தப் பட்டோ

ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சில நேரங்களில் சுமையாகவும்
அவளின் அடையாளங்களாகவும்

மௌனப் போர் ...


சிணுங்கிடும் சலங்கையில்
மயங்கிடும் மனது...

மௌனமாய்
ஒரு போர் ஒத்திகை!!! 

மௌனமாய் ஒரு கேவல்...


கையிலெடுத்த புத்தகத்தை
கடமைக்காய் பாதி பக்கங்கள்
வரை வாசிக்க

புரியவில்லையென,
சுவாரசியங்கள் இருப்பதாய்
தெரியவில்லையென,
எழுத்துக்கள் தெயளிவில்லையென,
வேறு வேலைகள் இருப்பதாய்
காரணங்கள் பல கண்டு,

பக்கங்களின் அடையாளமாய் அட்டையை வைத்தோ
குப்புற கவிழ்த்தவிட்டோ
அல்லது இனி எதற்கு
சுவாரசியமற்ற இதை படிக்கவென
அடுக்கில் அடுக்கிவிடும் போதே
தெரிந்து விடுகிறது புத்தகத்திற்கும்
திரும்ப படிக்கபோவதில்லையென

தவிர்த்த பக்கங்களில் தான்
நீங்கள் தேடிய கதையின் சாரமென
மௌனமாய் பரிதாப படுகிறது
அப்புத்தகம்
உங்களுக்காகவும்
கொஞ்சமாய் தனக்காகவும்!!!
Monday, 7 April 2014

தேடலின் பாதையில்


நெடியதொரு நடைப் பயணத்தின்
களைப்பு தீர சற்று ஓய்வாய்,
கிளை பரப்பி செழித்து படர்ந்ததொரு
அடர்மரத்தினடியில் அமர

தாழ்ந்து வளைந்ததொரு கிளையில்
வந்தமர்ந்ததொரு பெயர் தெரியா வெண் பட்சி
என்னை நோக்கி சில கேள்விகனைகளோடு

கேள்விகளில் ஒன்றாய்
பிறப்பின் காரணம் யாதென கேட்க
சற்றே குழப்பமாய்
பிற உயிர்க்கு உதவிடவென பதிலுரைத்தேன்

ஒரு புன்னகையை உதிர்த்த படி
தாவரவினம் செய்யுமதை என கூற
ஒப்புதலாய் தலையசைத்தேன்

அன்பு செய்தலென நினைக்கும் போதே
ஐந்தறிவே போதுமென செயலற்றேன்

நெடியதொரு தேடலின் பாதையில்
மனம் செல்ல
எதிரமர்ந்த பறவையின் பெயர் கேட்டேன்
தேடிக் கண்டுகொள்லென சிரித்துப் பறந்தது

அமர்ந்தது போதி மரமாய் இருக்குமோ!!!
அல்ல எதிரமர்ந்தது
மனமெனும் ஞானப் பறவையாய் இருக்கக் கூடுமோ !!!
இரவலாய் ..


உன் நினைவுகள் சுமந்து
நடக்கும் வேளைகளில்
என்னை பின் தொடர 
மறுக்கிறதென் நிழல்...

இரவலாய் கொஞ்சம் தந்துவிடேன்
உன் நிழலையேனும்..

Thursday, 3 April 2014

சிரிக்கும் முத்தம்
நீ தருவாயென நானும்
நான் தருவேனென நீயும்
தயக்கம் காட்ட...

தள்ளி நின்று
ஏளனமாய் சிரிக்கிறது...

முத்தமொன்று!!!

நீங்கா நினைவுகள்


கோடையின் விடுமுறைகளில்
கிராமத்து பாட்டி வீட்டிற்கு செல்லும் போது

மணல் வீடு கட்டி
மாமன் மகளோடு விளையாடியதும்

கூட்டாஞ்சோறு பொங்கி
விருந்து வச்சி மகிழ்ந்ததும்

கைகளில் சிக்காத
காற்றைப் பிடித்து
நாளை வேண்டுமென பத்திர படுத்தியதும்

தட்டானின் வாலில்
நூல் கட்டி பறக்க விட்டதும்

நுங்கு மட்டையில்
வண்டி ஓட்டியதும்

கருவேலங்காட்டுக்குள்
காத்தாடிக்கு முள் எடுக்க சென்றதும்

ஊரெல்லாம் சுத்திட்டு
புழுதியோடு வீட்டுக்கு வந்து
அம்மாவிடம் ஏச்சு வாங்கி

பாட்டி மடியில்
கவலைமறந்து உறங்கிய பொழுதுகளெல்லாம்

இன்றும் பசுமையாய்
நெஞ்சின் மூலையில்...

நம் பிள்ளைகள் விடுமுறைகென
பாட்டி வீடு செல்லும் வேளைகளில்....

Tuesday, 1 April 2014

வார்த்தைப் பூக்கள்


கவிதைகளுக்கென
வார்த்தைகள் தேடும் போது
வசப்படுவதில்லை

தனிமையிலும்
கவிதைத் தாக்கங்களும்
இல்லா பொழுதுகளில்
சுற்றி சுற்றி வருகின்றன
மனதில் பதியா வேகத்துடன்

சுற்றும் வார்த்தைகளை
மனதில் விதைத்து சேமிக்க

அவை விருட்சங்களாய்
தழைத்து
கிளைகளெங்கும்
வார்த்தைப் பூக்கள்
கொய்து கோர்த்து மாலைகளாய்

மீண்டும் விதைகளாய்
விருட்சங்களாய்
எங்கும் கவி மாலைகள் !!!