Wednesday, 30 July 2014

எண்ணங்களும் வண்ணங்களும்


வட்டமாக்க தூரிகை பிடிக்க
சதுரமாகிறது

சதுரமென நினைக்கும் நேரம்
மற்றுமொன்றாய்,
முக்கோணம் பல கோணங்களாய்...

பறவையென நினைக்கும் நொடிகளில்
வலைக்குள் அகப்பட்ட சிறு பூச்சியாகும்...

ஆலவிருட்சம் கற்பனிக்க
சிறு நாணலாகிற்று!!

வைக்கும் புள்ளி கோடுகளாய் நீளும்
நீளும் கோடுகள் நிற்கும் ஒரு புள்ளியாய்...

வண்ணம் தீட்ட நினைக்கும் எதுவும்
வசப்படுவதில்லை என்பதில்
வரைந்துகொண்டே இருக்கிறேன் என்றபோதும்,
எதையும் வரைந்ததில்லை நான்!!


அன்பின் துளிகள்இருமுறை இதழ் பதித்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்


உயிர்ப்பூக்கள்


உருட்டி விழிக்கும் விழிகளிருந்தும்
உயிர்ப்பில்லாத கண்கள்,

அசைவுகளற்ற மென் கரங்கள்
தவழ்ந்தரியா , நடந்தரியா பிஞ்சுக் கால்கள்
மலராத அரும்பாய் இதழ்கள் என ,

உயிர்களின் உருவேந்தி
உணர்வுகளின்றி உறைந்திருக்கும்
உயிரில்லா பொம்மைகள்...

மழலைகளின் மென் தீண்டலில்
அவர்களுடன் களிப்பாட
புன்னகை பூத்து
உயிர்பெற்று எழும்பிவிடுகின்றன!!!

நீங்குதலின் கறை


அனைத்தும் போல
இயல்பாய் நிகழ்கிறது
உனக்கும் எனக்குமான
ப்ரியங்களின் நீங்குதலும் ..

உணர்ச்சிகளற்று
உறைந்திருக்கும் உயிரின் மீது
தன் கூரியபற்களையும் நகங்களையும் பதிக்கிறது
தனிமை

எதிர்ப்பவர்களின்றி வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற எனதுயிரில்
படிய தொடங்குகிறது
நீங்குதலின் ரத்தக்கறை

தியானத்தின் ஓரத்தில் ..


மனதை சமன் படுத்த
தியானத்திற்கு ஆயத்தமானேன்

தியானவிரிப்பின் ஒரு ஓரத்தில்
என்னோடு சிறு எறும்பொன்றும்
அமர்ந்துகொண்டது

கண்கள் மூடி
தியானிக்கத் தொடங்கினேன்

ஓரத்தில் இருந்த எறும்பு
பல்கி பெருகி
சாரை சாரையாக
ஊர்ந்துகொண்டிருகிறது
இப்போது தியானத்தின் மேல்.


Thursday, 17 July 2014

இனியவளின் பிறந்தநாள்....


என்னவள் Sundari Kathir..... 
தன் எழுத்தென்னும் நேசக் கரம் கொண்டு 
அனைவரையும் கட்டி போட்டவள்....
கண்ணில் படும் காட்சிகள் அனைத்திலும் 
தன் நேசப் பார்வை செலுத்தி 
உயிர்பித்து விடுபவள்...
இன்று (17-7-14) பிறந்தநாள் ... 
என்னோடு இணைந்து வாழ்த்துங்கள் தோழமைகளே ...

அன்பின் ப்ரியங்கள் சுமந்த அன்பானவளுக்கு ஆயிரம் முத்தங்கள்
பிறந்த நாள் வாழ்த்துகள் டா செல்லம்

முகமறியா முகநூலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்
அன்னையின் வரமாய் கிடைத்தவள் நீ
ஒன்றாகக் கைகோர்த்து வலம்வந்தது கிடையாது- இருந்தும்
சுனை நீராய் சுரந்தது நம் அன்பின் ஊற்று
முகநூல் வீதிகளில் திரும்பிய பக்கமெல்லாம்
நம் இருவர் பேர் சொல்ல
அன்பின் நேசமாய் உலாவருகிறோம்

ஆயிரம் சுமைகள் உனக்குண்டு - அதனுடன்
பல நேரங்களில் என் சுமையும் சேர்த்து சுமந்தவள் நீ

வலி என்று நான் தவித்த நேரங்களில்
மயிலிறகின் தீண்டலாய்
உன் வார்த்தைகளே என் வலி நிவாரணி

எனக்கே தெரியாமல்
என்னை சுற்றி பின்னப்பட்ட
மாய வலைகளை அறுத்தெரிந்தவள் நீ
என் மேல் விழும் பழிச்சொல் அம்புகளை
என் நிழல் கூட தீண்டா வண்ணம் தாங்கி
வந்த இடம் நோக்கி திருப்பி அனுப்பியவள்

அன்பை வார்த்தைகளில் காட்டதே
செயல்களில் உணர்த்து என்று
"அதிமுக்கியமானவள்" நீ எனக்கு என
என்னை உணர செய்தவள்

ஈரைந்து மாதங்கள் என்னை சுமந்தவள்
காற்றோடு கலந்த வேளையில்
வாவென அவளை அழைத்து
நீ சுமந்தவளை இனி நான் சுமக்கிறேன்
மகளாக எனக்கு தத்து கொடு என
என்னை மனதால் மடி சுமந்தவள்

பாசத்தை பனித்துளிக்குள் உறைய வைத்து
பதறாமல் பகிர்ந்தளிக்கவும்
சிரித்துக்கொண்டே கண்டிக்கவும்
கோபத்தோடு கொஞ்சவும்
உனக்கு மட்டுமே சாத்தியப் படுகிறது

கண் படுமோ , இல்லை சொல் படுமோ என்று
எல்லோரும் பெருமிதமாய் பேசும் நம் அன்பின் ப்ரியங்கள்
இனியும் யார் கண்ணும் சொல்லும்
படாமல் காக்க நம் அன்னையிடம் பிரார்த்தனைகள்

வரும் ஜென்மங்களில்
ஒரே கருவறையில்
உதிரம் பகிர்ந்த சொந்தமாய்
பிறவி வேண்டி
நம் அன்னையிடம் வரம் வேண்டி
வாழ்த்துகிறேன் செல்லம் ...

இன்று மலர்ந்த அரும்பாய் என்றும் நீ மணக்க
அன்னையின் அருளோடு என் ப்ரிய முத்தங்கள் செல்லம்
உம்ம்ம்மம்ம்ம்மாஆஆஆ .
லவ் யூ டி செல்லம் ... லவ் யூ டி அம்மா....

உன் அதிமுக்கியமான மீரா.


Wednesday, 9 July 2014

கலையும் கனவுகள் .தெள்ளிய நீர் நிறைந்தோர் அழகிய பொய்கை ! அதில் ஆயிரமாயிரம் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின . மலர்களில் சுரந்த தேனைக் குடித்து , களித்து , ரீங்காரமிட்டபடி வண்டுகள் பறந்தன . அதில் ஒரு கருவண்டு மிதமிஞ்சி தேனைக் குடித்தது , மதிமயங்கி பூவிலேயே கிடந்தது .

காலம் கரைந்து கொண்டிருந்த உணர்வு அந்த வண்டிற்கு இல்லை .

மாலை வந்தது ,இருள் கவிந்தது .மலர்ந்த தாமரையின் இதழ்கள் குவியலாயின ; மயங்கி கிடந்த வண்டு எதையும் அறியவில்லை . அது வெளியில் பறப்பதற்காகத் தாமரை காத்திருக்கவில்லை ; தன் இதழ்களை மூடிக் கொண்டது .

நேரம் கடந்தது . வண்டு விழித்தது .ஆனால் அந்தோ ! இருட்டைத் தவிர வேறு எதையும் அந்த வண்டு காணவில்லை . இதழ் குவிந்த தாமரையில் மாட்டிக்கொண்டதைப் புரிந்துகொள்ள அதற்குச் சற்று நேரம் பிடித்தது . ஆனாலும்

' இந்த இரவு கழிந்து விடும் . கதிரவன் வருவான் .இந்தத் தாமரை மீண்டும் மலரும் . நான் ஆனந்தமாய் வெளியில் பறப்பேன் , பாடித் திரிவேன்!' என்று கனவில் மிதந்தது அந்த கருவண்டு .

ஆனால் நடந்தது வேறு ! தண்ணீர் குடிப்பதற்காகக் குளத்தில் இறங்கியது யானை ஒன்று . மனம் போன போக்கில் தாமரை மலர்களைப் பறித்து வெளியில் ஏறிந்தது . கருவண்டின் கனவுகள் கலைந்தன .

சுகங்களையும் போகங்களையும் நாடி ஓடுகின்றோம் . தடைகள் வருகின்றன , துன்பங்கள் வருகின்றன . உடனே கனவு காண்கிறோம் , சிறந்த எதிர்காலம் ஒன்றின் கனவில் மூழ்குகிறோம் , காலம் பறக்கிறது , கனவுகள் கலைகின்றன ___ மனித வாழ்க்கை பொதுவாக இப்படித்தான் செல்கிறது


Tuesday, 8 July 2014

மனம் படித்தவள்


வான் பிடிக்குமா என கேட்டேன்
வான் தழுவும் மேகம் பிடிக்குமென்றாள்

நிலவை பிடிக்குமா என கேட்க
நிலவோடு கொஞ்சும்
நட்சத்திரங்கள் பிடிக்குமென்றாள்

வெயில் பிடிக்குமா என்றேன்
வெயிலில் அலையும்
உன் வியர்வை பிடிக்குமென்றாள்

மழை பிடிக்குமா என்றதற்கு
நனைந்த பின் உன் தலையில் வழியும்
துளிகள் பிடிக்குமென்றாள்

தென்றலென கேட்க
தழுவும் உன் விரல் பிடிக்குமென்றாள்

மரங்கள் பிடிக்குமா என்றேன்
அதனுடன் படரும் கொடிகள் பிடிக்குமென்றாள்

பறவைகள் என்றேன்
பாதுகாப்பாய் அணைத்துக்கொள்ளும்
அதனின் சிறகுகள் பிடிக்குமென்றாள்

இசை பிடிக்குமா என கேட்டேன்
இசைக்கும் குயில் பிடிக்குமென்றாள்

தனிமை பிடிக்குமா என்று கேட்டேன்
உன் நினைவுகளோடான பொழுதுகள் பிடிக்குமென்றாள்

கவிதை பிடிக்குமா என்றேன்
கவிதை புனையும் உன்னை பிடிக்குமென்றாள்

ஊடல் பிடிக்குமா என்றேன்
ஊடலுக்கு பின் வரும் கூடலும் பிடிக்குமென்றாள்ஒற்றைக் குயில்


வெயில் போர்த்திய
மூங்கில் காடுகளின்
துளைகளில் உட்புகுந்து
வெளியேறும்
ஒற்றைகுயிலின் கீதம்....

இசையில் லயித்த பகலவன்
கூடடையும் பொழுதினில்

ஒற்றைகுயிலின் துணை நானோ??
இல்லை அந்த ஒற்றை குயிலே நானோ???

அனுபவப் பொக்கிஷம்


வாழ்வின் உதயத்திற்காக
காத்துக்கொண்டிருக்க்கிறேன்.

புலரும் பொழுதொன்றில்
நான் விழிக்காமலும் போகலாம்...

இருந்தும்
கடந்துவிட்டிருந்த நேற்றையும்
நிகழும் இந்நொடிப் பொழுதையும்
கைகளுக்குள் வசப்படுமென்றால்
பொக்கிஷமெனப் பூட்டிவைத்துக் கொள்வேன்

இனி வரப்போகும் நாளைகளையேனும்
முறையாய் பயன் படுத்த
எனக்கது பாடஞ்சொல்லும் !!!


Wednesday, 2 July 2014

இயற்கை தந்த அற்புத பானம்... பதநீர்.
பனைமரத்தின் பாளையை சீவி அதில் ஒரு சுண்ணாம்பு தடவிய கலயத்தை கட்டிவிட்டு செல்வர் பனை ஏறுபவர்கள் .அதிலிருந்து வடியும் நீரே பதநீர் .

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.

பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது. மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

இப்போது கிராமப்புறங்களில் பனை ஏறுபவர்கள் குறைந்துகொண்டே வருவதால் சுத்தமான பதநீர் கிடப்பது இல்லை . நீரில் சர்க்கரை பாகு கலந்து பதநீர் என்று விற்பனை செய்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் சாப்ட்ரிங்க்ஸ் அருந்தும் நம் மக்கள் இது போன்ற நல்லதொரு பானத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை என்பது தான் வருத்ததிற்குரிய உண்மை .


இயற்க்கை தந்த அற்புத பானம் .. இளநீர்இளநீர் மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம். சுவையான பானம். சுத்தமானது கூட.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், என பல்வேறு வகைகள் உள்ளன.

இளநீரில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக இருக்கிற வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் நல்மருந்து இளநீர்.. உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். வெப்பத்தைத் தணிக்கும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும்.

ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. காலரா நோயாளிகளுக்கு இளநீர் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக நல்ல மருந்தாகிறது. சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. இளநீர் மிகவும் சுத்தமானது.

இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.