Sunday 23 November 2014

தொலையும் அன்பின் அடையாளங்கள்

வலியில் துடிகின்றேன்
உன் வார்த்தை அம்பு தைத்த ரணங்களை வருடியபடி

உனக்கும் வலித்திருக்கும்
என் செயல்களென அறிவேன்

என் வார்த்தைகள் அனைத்த
அலைபேசி யில்
நிரம்பிக்கொண்டிருகிறது
உன் மற்ற செயல்களும்
மருந்தான என் சொற்களும்

மனமிறுக்கும் பிடிவாத முனைப்பால்
மீட்டெடுக்க மறுக்கிறோம்
அலைபேசியையும்
நம் அன்பின் அடையாளங்களையும்...

அன்னை துதி



பிரபஞ்சத்தின் கருனை வடிவான
சத்திய ஒளிப்பிழம்பே போற்றி!!

இருளென சூழ்ந்திடும் மனக்குழப்பம் நீக்கி
தெளிவு தரும் திவ்ய சாநித்யமே போற்றி!!

நல்லோர்கள் வழி நயவஞ்சகர்களை

அடையாளம் காட்டும் அன்னையெனும் திருவே போற்றி!!

வலிமிகுந்த நேரங்களில் வழி இது தானென நெறிபடுத்தும்
நிர்மல தேவி போற்றி!!

ஸ்துல உடல் நீத்து பொன்னொளிப் பிழம்பாய்
"மதர்" என அழைக்கும் மறுநொடி ஏதொ ஒரு வடிவில்
நானிருக்கிறேன் என்று மனஅமைதி தரும்
ஆனந்தக்கடலே போற்றி!! போற்றி!!

ஓம் ஆனந்தமயி!! சைதண்ய மயி!! சத்யமயி பரமே!


மனிதம் தொலைக்கும் மனிதர்கள்

விளையாடி அலுத்து வீசி
பின் மீண்டும் சேகரித்து
வீசி விளையாடி
பலவற்றை தொலைத்தும்
மழலையில் ...

வளரும் நாளிலும்
தொலைந்த விளையாட்டுகளில்
இது மட்டும் தொலைக்காமல்
முதுமை வரை...

பொம்மைகள் இப்போது
மனிதர்களாய் மாறியது ஒன்றை தவிர...


சூனியமான பெருவெளி

விழியிழந்த பாவையாய்
சூழ்ந்து கிடக்கின்றேன்
இருள்வெளியில்

நீளும் கருமையை
எவ்வொளி கொண்டும்
துளைக்கமுடிவவில்லை

உன் ஒற்றை விழி வழி
பார்த்த இப்பெருவெளி
இருள் நிறைந்த சூனியமாகிற்று

தடுமாறும் மனதிற்கு
தட்டுப்படும் உன் குணம்கொண்டு
சொல்லித்தருகிறேன்
மீட்சிப் பாதையின் தீரா வழிதனை

தேடலின் தொலைவிலும்
கைக்கு எட்டா கதவினாலும்
பழகிப்போனது
உண்பதும் உறைவதும்
அடரிருளில்

எங்கெங்கும்
வெளிச்சம் இப்போது
எனைச்சுற்றிய இருளாய்...


வலியா ? மருந்தா ?

வலிமிகுந்த நேரங்களில்
வந்தமர்ந்து விடுகிறாய்
மனதினில்

வலியா ? மருந்தா ? 

நீ யாரென்ற தேடலில்
அசைபோட்டு அனுபவிக்கிறேன்
அவஸ்தையாய்
உன் அதீத அன்பை ...

மழை

நனைந்து விளையாடி
களைத்து நடக்கிறது
குடைகளும்..
கால்களும்
கூடவே
மழைத்துளிகளும்!

மழலை அழகு

விரல் கூட்டி
இதழ் பிரித்து
உண்ண முயல்கையில் 

தவறும் பருக்கைகள்
பரிதவிக்கின்றன 

மோட்சத்திற்கான
வாய்ப்பை இழந்துவிட்டதென !!!

நாட்டிய மழை

அபிநயம் பிடிக்கும் மின்னலுடன்
ஜதி சேர்க்கும் இடிக்கு போட்டியாய்
மத்தளம் இசைகிறது
தகர கூரை மீதுவிழும் மழை

முயற்சி

மூழ்கிவிட்டதென அயராமல்
இன்னொரு கப்பல் செய்கிறார்கள்
அதனினும் திண்மையாய்!!
#மழலைகள்...

அடைமழையாய் ...

நொடிப் பொழுதில் நின்றுவிட்டாலும்
இன்னும் தூரிக்கொண்டே இருக்கிறது
அந்த அழகிய நிமிடங்கள்
நிற்காத அடைமழையென மனமெங்கும் !!


மழையாய் தழுவி....

அவள் மீது
வீழ்வதற்கென்றே
ஆர்ப்பரித்து வருகிறாய்..

அவளின் கூந்தல் நனைத்து
முகம் தழுவி
இடை நழுவி
விழுகிறாய் ...

மழையே
உன்னை போல இன்றேனும்
நானிருக்க வேண்டும்!!

அன்னை துதி



வெற்றிகள் வழி சந்தோஷங்கள் தரும்
சக்தியின் வடிவே போற்றி !!

நிலையான செல்வங்கள் வழி
நிம்மதி தரும் திருவின் வடிவே போற்றி !!

எந்நாளும் அழிவில்லா ஞானத்தில்
தெளிவு தரும் சகலகலா வல்லியே போற்றி !!

தன்னியல்பு நிலை மாறாமல்
தடைகள் அகற்றும் மகேஸ்வரியே போற்றி !!போற்றி!!

அன்னையே நின் பொற்பாத கமலங்கள் பற்றுகிறேன் போற்றி !!
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே..!!



எண்ணச் சிறகுகள்

இலக்குகளற்ற
எண்ணச் சிறகுகளைவிரிக்கிறேன்
பறத்தலுக்காக

இறகுகள் எங்கும்
நினைவுகளின் சுமைகள்

நினைவுகளில் மூழ்கி
நிஜம் தொலைத்திடுவேனோ

ஆயினும்
மனம் மறக்க மறுதலிக்கிறது
நினைவின் தடங்களை...

தெளியும் மனக் குளம்

ஒவ்வொன்றாய் எறிய
கலங்குகிறது மனக்குளம்

வண்டலும் படர்பாசியும்
கிளர்தெழுகிறது

காலம் நகர
ஓரிடத்து பாசை
வேறிடத்தில் படிகிறது
வண்டலும்

கற்கள் விழ கலங்கி
மீண்டும் தெளியும்..

இயல்பாய் காட்டிக்கொள்ள .........

மழையில் நனைந்தும்
இசையில் கரைந்தும்
புத்தகத்தினுள் புதைந்தும்
இதழ்களில் புன்னகைப் பூக்களை மலர்த்தியும்
மனம் மறைத்து
தன்னியல்பாய்
இருத்தலைக் காட்டிக்கொள்ள
வழிகள் ஆராய்ந்த படியே .

மௌன சாட்சி

சிறகொடிந்த பட்டாம்பூச்சி ஒன்று
அனல் தகிக்கும் சாலை நடுவில்
துடித்து உயிர் விடுவதை ..

விரைந்து கடக்கும் ஊர்திகளுக்கு பயந்து
சாலையோரம் மௌன சாட்சியாய் பார்த்த அன்று 

மீசை முறுக்கி சிரித்துக்கொண்டே
கனவில் வந்து போனார் பாரதி