Friday, 19 December 2014

தாய்மையே பெண்மை !!


பெண் என்பவள் சக்தியின் ரூபம் என சொல்லும் உலகில்
பெண்மை பற்றி அறிந்திட
சக்தியவளை தொழுதுநின்றேன்

இமைக்கும் நொடியில் கண்முன் தோன்றினள்
சூலோடு பாசாங்குசம் கைகளில் ஏந்தி
கர்ஜிக்கும் சிம்மவாகினியாக ..
அக்கினி குஞ்சுகளிரெண்டு அவள் கண்கள்
அன்னையென காண்போர்க்கு
அவை அன்பின் பிறப்பிடம்...

அழைத்த காரணம் அறிந்து
அன்போடு குறுநகை புரிந்தாள்
எண்ணியதை அடுக்கடுக்காய் கேட்டுநின்றேன்
‘‘பெண்மையென்பது என்ன தாயே?
பேதங்களறப்பிரித்து சொல்வாய்;
சொல்லுவதை நான் உரக்கச்சொன்னால்
புவிதனில் பெண்மை மலர்ந்திடவேண்டும்;

மின்னலென ஒளிர்ந்த நகைப்புடன்
விழிகளை நோக்கி வினவலைத்திருப்பினாள்
உன்னுள் இருக்கும் உணர்வைப் பற்றி
என்னைக்கேட்டால் யாது சொல்வேன் ?
புரிந்தும் புரியாததிது அம்மா
விரிவுர சொல்லென்றேன்

ஒளிரும் கதிரை விழியில் மலர்த்தி
பென்மையிதுதான் பார் என்றாள்
குளிரும் திங்களை நெற்றியில் கொண்டு
பென்மையிதுதான் பார் என்றாள்;

தகிக்கும் நெருப்பை தொடச் சொன்னாள்
சுட்டது தாயே நெருப்பென்றேன்
அதுதான் பெண்மை என்றுரைத்தாள்;
பனியினில் என்னை நனைய வைத்து
உணர்வினை நன்றாய் உணர்ந்திடச் சொன்னாள்
குளிர்ந்த்தது தாயே மெய்யென்றேன்
பென்மையிது தான் உணரென்றாள்

மலர்ந்து மணக்கும் மலரும் பெண்மை
மலரிடை கொண்ட முள்ளும் பெண்மை
இன்பம் துன்பம் இரண்டுமறிவாய்
இரண்டும் பெண்மை தான் என்றாள்

இத்தனை சொல்லிப் புரியவைத்தாய்
இருப்பினும் ஒன்றாய் சேர்த்துச் சொல்லென்றேன்

குறுநகை கொஞ்சும் முகம் மறைத்து
ஈன்றவள் முகமாய் தோற்றம் காட்டி
"தாய்மைதான் பெண்மை
பெண்மைதான் தாய்மை "
என்றுரைத்து உடன் மறைந்தாள்
தெளிந்தமனதுடன் திசை தொழுதேன் !!


4 comments:

  1. //மலர்ந்து மணக்கும் மலரும் பெண்மை
    மலரிடை கொண்ட முள்ளும் பெண்மை
    இன்பம் துன்பம் இரண்டுமறிவாய்
    இரண்டும் பெண்மை தான் என்றாள்
    //

    அருமை

    ReplyDelete
  2. வணக்கம்
    சகோதரி
    தாய்மையை போற்றும் கவி மிக நன்றாக உள்ளது ஒவ்வொரு வரிகளும் மிக இரசனையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete