Friday 19 December 2014

தாய்மையே பெண்மை !!


பெண் என்பவள் சக்தியின் ரூபம் என சொல்லும் உலகில்
பெண்மை பற்றி அறிந்திட
சக்தியவளை தொழுதுநின்றேன்

இமைக்கும் நொடியில் கண்முன் தோன்றினள்
சூலோடு பாசாங்குசம் கைகளில் ஏந்தி
கர்ஜிக்கும் சிம்மவாகினியாக ..
அக்கினி குஞ்சுகளிரெண்டு அவள் கண்கள்
அன்னையென காண்போர்க்கு
அவை அன்பின் பிறப்பிடம்...

அழைத்த காரணம் அறிந்து
அன்போடு குறுநகை புரிந்தாள்
எண்ணியதை அடுக்கடுக்காய் கேட்டுநின்றேன்
‘‘பெண்மையென்பது என்ன தாயே?
பேதங்களறப்பிரித்து சொல்வாய்;
சொல்லுவதை நான் உரக்கச்சொன்னால்
புவிதனில் பெண்மை மலர்ந்திடவேண்டும்;

மின்னலென ஒளிர்ந்த நகைப்புடன்
விழிகளை நோக்கி வினவலைத்திருப்பினாள்
உன்னுள் இருக்கும் உணர்வைப் பற்றி
என்னைக்கேட்டால் யாது சொல்வேன் ?
புரிந்தும் புரியாததிது அம்மா
விரிவுர சொல்லென்றேன்

ஒளிரும் கதிரை விழியில் மலர்த்தி
பென்மையிதுதான் பார் என்றாள்
குளிரும் திங்களை நெற்றியில் கொண்டு
பென்மையிதுதான் பார் என்றாள்;

தகிக்கும் நெருப்பை தொடச் சொன்னாள்
சுட்டது தாயே நெருப்பென்றேன்
அதுதான் பெண்மை என்றுரைத்தாள்;
பனியினில் என்னை நனைய வைத்து
உணர்வினை நன்றாய் உணர்ந்திடச் சொன்னாள்
குளிர்ந்த்தது தாயே மெய்யென்றேன்
பென்மையிது தான் உணரென்றாள்

மலர்ந்து மணக்கும் மலரும் பெண்மை
மலரிடை கொண்ட முள்ளும் பெண்மை
இன்பம் துன்பம் இரண்டுமறிவாய்
இரண்டும் பெண்மை தான் என்றாள்

இத்தனை சொல்லிப் புரியவைத்தாய்
இருப்பினும் ஒன்றாய் சேர்த்துச் சொல்லென்றேன்

குறுநகை கொஞ்சும் முகம் மறைத்து
ஈன்றவள் முகமாய் தோற்றம் காட்டி
"தாய்மைதான் பெண்மை
பெண்மைதான் தாய்மை "
என்றுரைத்து உடன் மறைந்தாள்
தெளிந்தமனதுடன் திசை தொழுதேன் !!


தவ நெறிப் பிரியங்களே போற்றி!!


வாழ்வனைத்தும் தவயோகமாய் மாற்றும்
தவ நெறிப் பிரியங்களே போற்றி!!

புகையென படர்ந்திருக்கும் பொய்மை விலக்கி
உண்மை நிலைகள் உணர்த்தும்
யோக நெறிப் பிரியங்களே போற்றி!!

இலக்கறியாமல் வலியோடுழலும் மனதிற்கு
வலியனைத்தும் வழிகளாய் மாற்றும்
வசந்தப் பிரியங்களே போற்றி!!

ஓம் நமோ பகவதே !!
ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி
பரமே!!


மீண்டும் ஒரு கருவறை வாசம்

ஈரைந்து மாதங்கள்
இருள்சூழ் கருவறை சொர்க்கமாய்

பழி பாவங்கள் ஏதுமற்று
பொய்மை சூழ்ச்சி அறியாமல்
நிம்மதியுறக்கம்கொண்டேனடி

வெளிச்ச பெருவெளி பிறப்பெடுக்க

அன்போடு வஞ்சனைகளும் சேர்ந்தே சூழ
பிரித்தறியத்தெரியா பேதையானேன்

அலைக்கழிந்த மனம் அமைதியுறங்க
மீண்டும்ஒரு கருவறை சேர வரம் தா அம்மா.


நிஜம் தொலையும் முகங்கள்


தமக்கென்று தனித்தனியாய்
வரையறைகள் தாங்கியுள்ளன
இங்குள்ள முகங்களனைத்தும்

அன்பெனும் ஓரிழையில் இவ்வனைத்தையும்
பிணைத்திட சாத்தியமெனினும்
உடன்படுவோர் யாவருமில்லை

அவரவரின் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனை செய்தும் நகர்த்திக் கொண்டிருக்கும்
நீண்டதொரு நாளின் அயர்வுற்ற மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப் பார்க்கிறேன்

வாழ்வின் மேல்
எவ்விதியையும் சுமத்திடாத இயற்கை
அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கிறது
யாவராலும் வரையப் பட்ட ஓவியங்களை !!


ஸ்ரீயும் நானும்

ஸ்ரீ நேற்றிரவு அலைபேசியில் :அத்தம்மா போன வருசமும் இந்த வருசமும் இன்னைக்கு மீட் பண்ணுது தெரியுமா ?

நான் : என்னடா சொல்லுற கண்ணா .... புரியும் படியா சொல்லு ...
.
ஸ்ரீ : 20.12.2013.... இப்போ மீட் பண்ணிடிச்சா....

நான் :..

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா !!


தம்பி மனைவி (ஸ்ரீயின் அம்மா) பக்கத்தில் இருக்கும் கடையில் போய் ஏதோ சாமான் வங்கி வர சொல்லி இருக்கா ரெண்டு மூணு நாட்களாக...
 
கடைக்காரரும் சில்லறை காசு இல்லாமல் மீதம் தர வேண்டிய ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் சில்லறைக்கு "ஹால்ஸ் " மிட்டாய் தந்து அனுப்பியிருக்கார்...

இன்று காலையில் மீண்டும் ஸ்ரீயை கடைக்கு அனுப்பி இருக்கா அவன் அம்மா... இவன் கடந்த ரெண்டு மூணு நாள் குடுத்த "ஹால்ஸ்" எல்லாத்தையும் கையில் எடுத்துட்டு கடைக்கு போயிருக்கான் ...

கடைகாரர் சாமான்களை குடுத்துவிட்டு தம்பி சில்லறை ஐந்து ரூபாய் இருக்கா என்று கேட்க ... இவனோ இருக்கு என்று ஐந்து ஹால்ஸ் மிட்டாய்களை எடுத்து இந்தாங்க என்று குடுக்க ...
என்ன இது என்று கடைக் காரர் கேட்க .... நீங்களும் சில்லறை இல்லாமல் தானே இந்த மிட்டாய்களை தாறீங்க , என் கிட்டயும் சில்லறை இல்ல அதனால நானும் நீங்க குடுத்த ஹால்ஸ்சயே உங்களுக்கு தாரேன் என்று சொல்ல....
கடைகாரர் உன்ன எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா என்று சொல்ல.... இவனும் உங்கள எப்படி கடவுள் செய்தாங்களோ அதே போல என்னையும் செய்து அனுப்பிருக்காங்க என்று பதில் சொல்லிட்டு வந்துவிட்டான்
ஹஹஹா....


Friday 12 December 2014

அவஸ்தைகளாகும் அதீதங்கள்

விடைகள் தேடி
அலையும் மனதினில்
யாரோ வினா விதைத்துச் சென்றுள்ளனர்.

ஏன் ? ஏன் ? ஏனென
மனக்காடெங்கும் கேள்வி மரங்களாய்
செழித்து கிளைத்து நிற்கின்றது.

தெளியும் மன ஓடையில்
வீசியஎரிகற்களாய்
இப்போதுன் வார்த்தைகள் விழுந்து சலசலக்கிறது

அதீத உனதன்பை எங்கே தவறவிட்டோமென
கனவிலும் உன் நினைவு சுமந்து உறங்குகிறேன்

வலிகள் விழிகளில் கரைதட்டி
அதீதங்கள் அவஸ்தைகளாய் கரைகின்றது

கனக்கும் மனதிற்கும்
வலிகளின் நீட்சிகளுக்கும்
யாதுரைப்பேன்
உன் உள்ளம் நெருங்குதல் சாத்தியமில்லையென..

இதழ்கள் தேடி

நெற்றியில்
நீ பதித்த முத்தம்
மெல்ல ஊர்கிறது
இதழ்கள் தேடி!!

மௌனத்தின் பேரிரைச்சலாய்!!


எழுதப்படாத கவிதைகளெல்லாம்
யாரோ ஒருவரின் குழலிசையாய்
எங்கோ சிந்திய தூரிகையின்ஓவியமாய்
நடனத்தின் அபிநயமாய்
இன்னும் பலவாறாய் இருந்திட
இப்போதென் மௌனத்தின் பேரிரைச்சலாய்!!

புன்னகைப் பூ

பறிக்கத் துடித்த மனம்
திரும்புகிறது
பூக்களின் புன்னகையை ரசித்து !!

மூடிடும் வாழ்க்கைப் புத்தகம்


நாம் தேடிக்கடந்தது ,
தேடலிலிருப்பது,
தேடநினைப்பது ...

வித்தியாசங்களின் விளக்கங்களை
விலையாகக் கொடுத்து
வாங்கிட நினைக்கும்
வாழ்வு எதுவரை?

இகத்தினில் மனிதனின்
இயக்கத்தின் ரகசியம்
உணர்ந்திடும் பொழுதினில்
இயம்பிடும் உண்மைகள்

கிடைத்ததைக் கொண்டு
வாழ்க்கையை முடித்திடும்
அரும் பெரும் பண்பினை
அடைந்திட வாழ்க்கையில்
அனுபவம் என்றொரு
அழகிய நூலினை அறிந்ததும்
அகவைகள் ஆயின பலவே !

துலங்கிடும் பொழுதுகள் யாவும்
பகிர்ந்திடும் செய்திகள் பலவே

நிகழ்ந்திடும் நிகழ்வுகள் அனைத்தும்
நினைத்திடும் வகையில் நிகழ்வதுமில்லை

உருண்டிடும் உலகினை அழகாய்
உருட்டிடும் வித்தகன் யாரோ ?

அனுபவம் என்றொரு நூலை
ஆக்கி முடித்திடும் வேளை
மூடிடும் வாழ்க்கைப் புத்தகம்

Thursday 4 December 2014

தீபத் திருநாள்



நல எண்ணம் சூழ் உலகே
எண்ணெய் நிறை தளும்பும் ஆழியாய்
மெய்யே திரியாய்
வாழும் உயிர்களெல்லாம்
ஒளிரும் சுடராய்
புவியெங்கும் ஒளிர
நானும் ஏற்றுவோம்
நாளும் நாளும் ...
அன்பெனும் சுடரை!!
அகங்கார அரக்கன் அழித்து
அறியாமை இருள்விலக்கி
ஜோதியாய் , ஒற்றுமைத் தீபத்தை
நாமும் ஏற்றுவோம்
எந்நாளும் நன்னாளாய் !!


Tuesday 2 December 2014

தூரிகை சிந்திய எண்ணத் துளிகள்-2



அமைதியின் அழகில் லயிக்கும் மனதிற்கு
ஆர்ப்பாட்டங்கள் அர்த்தமற்றே தெரிகிறது

***************************************************

ஓடும் நதி தனக்கு மட்டுமே சொந்தமென
அதன் கரையோர மரம் நினைத்தல் அர்த்தமற்றது.

‪#‎சில_மனங்களும்_சில_மனிதர்களும்‬

***********************************************

நிதர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாமல்
கண்டும் காணாதுபோல கடந்துவிடுகிறோம்
சுவடில்லாமல்

************************************************

சில நிகழ்வுகளை மறக்கவேண்டும்
என நினைத்துக்கொண்டே
நம்மையறியாமல் நினைவு அடுக்குளின்
மேலெழுப்பி விடுகிறோம்.

****************************************************

உருவம் தேடா உணர்வின் தொகுப்பாய் - மனதுள்
உருண்டோடும் சந்தோஷ சிலிர்ப்புக்கள் தான்
பெயர் கொண்டதா அன்பென்று !!

**********************************************
வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

*****************************************
ஈடுபாடில்லாமல்
செய்ய முற்படும் செயல்களுக்கு
காலத்தை காரணம் காட்டி
தப்பித்துக்கொள்ளவே விழைகிறது மனம்

*******************************************

புறக்கணித்தலைப் போலொரு
கொடிய வன்முறை
வேறொன்றும் இல்லை...
‪#‎அன்பு_செய்வோம்‬

***************************************

வலியில் துடிக்கும்
உயிரின் மதிப்பு
பொருள் தேடலில்…
பொசுங்கிப் போகிறது

**************************************

எதிர்பார்ப்புகளும்,
இயலாமையும்
ஒரே கோட்டில் நிற்கும்பொழுது
வாழ்க்கை கசந்து விடுகின்றது


தூரிகை சிந்திய எண்ணத்துளிகள்



ஆறுதலளிக்கும்
அன்பான சொல்
ஓசையின்றி
சாத்திவிடுகிறது
வெறுமையின்
கதவுகளை.

****************************************************



அளவளாவிய நினைவுகளை
அசை போட்டுக் கடத்துகிறேன்
உன் நினைவு சூழ் காலத்தையும்
வெறுமை சூழ் பயண நேரத்தையும்.

******************************************************

பகிர்தலற்ற பாரங்கள்
மனதை அழுத்தி
உயிர் பருகியே அடங்குகிறது
பல நேரங்களில்

********************************************************

மௌனம் மொழிபெயர்ந்து
கவிதைகளாக ...
சொற்கள் வாதிடுகின்றன
தங்களை ஓவியமாக்கிவிட !!

************************************************************



உண்டு
விழுங்கி
கழிவதென்றாலும்
ஜீரணிக்க சிரமமாய்
மனதில் சில நிகழ்வுகள்

***********************************************************

எதுவும் நிரந்தரமல்ல
எனும் வார்த்தைக்குள் அடங்கிவிடுகிறது
எண்ணிலடங்கா உணர்வுகள்

**************************************************************

சொல்லுபவர்கள் இறைத்துவிடுகின்றனர்
சொற்கள் தான் மென்று அரைபடுகின்றன

***************************************************************

கொள்ளும் கலனிற்கேற்ப
தன்னியல்பு மாறாமல்
உருமாற்றிக்கொள்ளும்
நீரின் குணம் எத்தனை உன்னதமானது !!

***************************************************************

சிலவற்றை

கற்றுக்கொள்வதற்கான விலையென்பது
அதற்காகச் செலவிட்ட

நம் வாழ்வின் ஒரு பகுதியாவே இருக்கிறது

*****************************************************************


கடந்து விட்டதாய் என்னும் சில நாட்களின்
ஏதோவொரு மணித்துளியில்
ஒளிந்திருக்கக்கூடும்
மனதை நிறைக்கும் நினைவொன்று.!!

இளைப்பாறும் மேகங்கள்

மிதந்து களைத்த
மேகக் கூட்டம்
அமர்ந்து இளைப்பாறுகிறது
மலைமுகடுகளில்!!

விரல் கோர்த்திடு


பக்கம் அமர்
தோள் சாய்த்துக்கொள்
தலைகோது
விரல் கோர்த்திடு
முத்தமிட்டுக் கொள்கிறேன்.

முயங்கும் பொழுதொன்றில்...


வேண்டாமென நானும்
வேண்டுமென நீயும்
மதனோற்சவ அரங்கேற்றத்தில் ..
மாறனின் இடைவிடா கணைகளில்
மயங்கி முயங்கிய பொழுதொன்றில்
உன் வேண்டும்களுக்கும்
என் வேண்டாம்களுக்கும்
ஒன்றென பொருளுணர
அரங்கேறியது அங்கோர்
மதனோற்சவம்.


அழியா சுவடுகள்...



எப்படி தேடிடினும் கிடைத்திடா சில சுவடுகள்...

அடைத்திட்ட பூங்காவின் ஊஞ்சலிகளில்
மழலைகள் ஆடிவிட்டு போனதற்கோ

காய்ந்த சருகுகளின் மேல்
சற்றுமுன் ஒரு இலை உதிர்ந்தற்கோ

அடுக்கி கிடக்கும் புத்தகத்தினுள்
மயிலிறகு தேடிய அடையாளமோ

பூட்டிய மாடமாளிகைகளெல்லாம் முன்னெப்போதோ
விசாலமாய் திறக்கப்பட்டிருந்ததற்கோ

எந்த தடங்களும் இருப்பதில்லை
எனினும் அழிக்கவியலாமல் தேங்கி விடுகின்றன
சில நினைவுகள்
சில உணர்வுகள்
சில தேதிகள்...


குட்டி மீராவும்.. பெரிய மீராவும்..

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
தேடிக் களைத்து
உதடுபிதுக்குகையில்
வென்றுவிடுகிறாய்
எனை கண்டுபிடிக்காமலே!!

Monday 1 December 2014

வரமாய் வேண்டுகிறேன்...


அலையாடும் எண்ணங்கள் அமைதியுறங்க
உன்தோள்தனை தேடுகிறேன் சிறுபிள்ளையாய்
சாய்ந்திடும் வரமொன்றை நீஅளித்தால்
ஜென்மசாபங்கள் கரைந்திடும் அந்நொடியே!!

சாரலென விழிமழையும் ஏக்கப்பெருமூச்சோடு வர
உன்மடிகடல்கலந்திட இடம்கொடுத்தால்
என்விழியோடு இமைதழுவி உறக்கம் கொள்வேன்.

அனல்தகிக்கும் பூக்காடாய் மனம் கனன்றிருக்க
பனிபொழிவாய் பார்வைவீசி
வார்த்தைகளால் வான்கிழித்தால்
குளிர்நிலவாய் குடிபெறுவேன்.

படைத்தவன் கொண்ட ஆணையெல்லாம்
அளிப்பவனாய் நீ அவதரித்தால்

ஆசைகொள்ளும் பருவம் கழித்து
அறிவு சொல்லும் சிந்தை கழித்து
எதற்கும் துவளும் மனம் கழித்து
பேதையாவேன் அன்றி பேரிளம்பெண்ணாவேன்!!