Tuesday 6 October 2015

கொலுப்படிக்கட்டுகள்

நவராத்திரி கொலு அமைக்கும் முறை:
==============================

முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகள். ( நிஜ தாவரங்களையும் இப்போது வைகிறார்கள் )
இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
நாலாம்படி : நான்கறிவு உயிர்களாக விளங்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
ஐந்தாம்படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்
ஆறாம்படி: ஆறறிவு மனித பொம்மைகள்.
ஏழாம்படி: மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகள்.
எட்டாம்படி: தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவகிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
ஒன்பதாம்படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர். அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

Monday 17 August 2015

தந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி 19-9 -2013


உயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள்.


அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ.


ரூபமாய் என்னை பாதுகாத்த நீ
இப்போது அரூபமாய் என்னை சுற்றி
பாதுகாப்பு கவசமிட்டிருக்கிறாய் .


எப்படி வாழ்வேன் உன்னை பிரிந்து என
அரற்றிய என்னை
இது தான் வாழ்வின் நியதி என
உணர்த்த சென்று விட்டாய் .


இல்லாள் இல்லா இடம்
சொர்க்கமே இல்லை என்றுரைக்கும் நீ ,
நீ இருக்கும் இடத்தை சொர்க்கமாக மாற்ற
உன்னவளையும் அழைத்துக்கொண்டாய் .


மெய்யால் என்னை விட்டுச் சென்ற நீ
நினைவுகளில் என்னுள் உறைந்தே இருக்கின்றாய்
இனி ஒரு பிறவி ஒன்றிருந்தால்
மீண்டும் உன் வீட்டின் இளவரசியாய்
எனை ஈன்றிடும் வரம் வாங்கி வா எந்தையே ....

Sunday 1 February 2015

நற்றமிழாலும் சொற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்தநற்றமிழாலும் சொற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த
சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடன்
கலைமகளாம் , அன்பின் திருமகளாம்
அக்கா கலைசெல்வியுடன்
இல்லறத்தில் இணைந்து
இருபத்தியேழாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும்
எங்கள் ஆசான் திரு இரா. குமார் அவர்களுக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துகள்

எளிமையின் உதாரணமாய்
எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்தும் நுன் திறமையுடன்
ஏற்றம் மாற்றம் எதுவானாலும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூடி
உழைப் பென்று வந்துவிட்டால்
ஒய்வுறக்கம் தேடா வேகத்தோடு
உண்மை நேர்மையை அணியாய் கொண்ட
நேர் நிமிர் நெஞ்சம் கொண்டு
உதவியென்று வருவோர்க்கு மட்டுமல்லாது
தேவையறிந்து செய்யும் கர்ண பிறப்பாய்
"தான் " எனும் கனம் சிறிதும்
தலைக்கேற்றிக் கொள்ளா பண்பாளராய்
தமிழால் தான் சிறக்க
தன்னால் உடனிருப்போர் சிறப்புறச் செய்யபவர்

இத்தனையும் எங்கள் ஆசான் என்றால்
அவரின் உற்ற துணையாய்
பக்க பலமாய் ....
அவர் பணி செவ்வனே செய்ய
வழிவகுத்து ,
வாழ்வெனும் ஏற்ற தாழ்வுகளில்
உடனிருந்து அரவணைத்து
எங்கள் ஆசானை போற்றுபவர்
அன்பின் அக்கா கலைச்செல்வி அவர்கள்
இவர்களின் இல்லறத்தில் நல்லறமாய்
விளைந்த நல் முத்து
எங்கள் செல்வம் முல்லைசெல்வன் ...
தமிழ் அன்னையின் ஆசிகளோடு
என் அன்னையின் அருளோடு
வள்ளுவன் வாசுகி போல
நூற்றாண்டுகள் நீடு வாழ வேண்டுகிறேன்
பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கிய
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றென்றும்!!!!
வாழ்த்தும் வயதில்லை
வணங்கி பணிகிறேன் நின் தாள் ஆசானே !!
நல் மொழி கூறி ஆசிர்வதியுங்கள் அக்காளுடன்!!!


Thursday 15 January 2015

தைத் திருநாள் வாழ்த்துகள் .தைமகளின் பிறப்பு
தரணியெங்கும் செழிப்பு
மதம்கடந்து இனம் கடந்து
நித்தம் உதிக்கும் கதிரவனுக்கு
நன்றி சொல்லிடும் நன்னாள்

வருடம் முழுதும் உழைத்துக் களைத்த
உழவர் களிக்கும் திருநாள்!
அவனுக்கிணையாய் கழனியில் கடமையாற்றும்
காளையின் பெருநாள்

குருதியை அமுதாக்கி அவனிகாக்கும்
ஆவினத் திருநாள்
அன்பும் பண்பும் ஒன்றாய் சூழ
மங்கையர் துணையை வேண்டும்
மாதவப் பெருநாள்

அல்லல்கள் மாய்ந்து
அரும்பிடும் இன்ப வாழ்வு
கவலைகள் கெடுக’வென்று
களித்திடும் இன்பத் திருநாள்

புது நெல்லை குத்தி
புத்தரிசி ஆக்கி,
புதுப்பானையில் இட்டு
சர்க்கரையும், வெல்லமும் சங்கமிக்க,
பொங்கல் அது பொங்கி வர,
குடும்பத்தோடும், சுற்றத்தோடும்
குலவையிட்டு, குதூகலிக்கும்
பொங்கல் திருநாள்

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள் .


Monday 12 January 2015

வ(வி)ழி தேடி தவிக்கும் நான்

 
இப்பிறவி கடந்தேறி
மீண்டும் பிறவா வரம் வேண்டுகிறாய் நீ
நானோ மறுபிறவிக்கு தவமிருக்கிறேன்
மனதினில் மட்டுமல்லாமல்
உன்னுள் கருவாய் , உருவாய்
உயிராய் ,மெய்யாய்
சேய் எனும் உறவாய் !!
வ(வி)ழி தேடி தவிக்கும் எனக்கு
விடியலே உன் விழிகளில் வேண்டும் என
தவமிருகின்றேன்
மனதால் மடி கிடத்தினாய்
மடி சுமந்து தாலாட்டும் காலத்துக்காய்
வரம் வேண்டி காத்திருக்கிறேன்
மகளென மனம் ஏற்றாலும்
உதிர உறவென்று பிணைத்து விட்டால்
அறுபடாது நம் உறவென்று
மீண்டுமொரு பிறவிக்கு தவமிருக்கிறேன்


கையறுநிலைக் காத்திருப்புஉரிமையோடான நேசத்திற்கு
உளம் ஏங்கி உயிர்துடிக்கும்.

நெஞ்சில் வெடித்தெழும்
நேசத்தின் நிகழ்வுகளை
சொல்லொணா துயருடன்
சொல்லி அழாச் சுமையுடன்
காத்திருக்கும் கணங்கள்
கவியில் சொல்லிட முடிவதில்லை

காலாண்டு நீடிக்கவில்லை
கடல் போல அன்பு
காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க
காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி

முடிவில்லா இப்பெருவெளியில்
அரவமற்று அனாதையாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில்
உறக்கம் மட்டுமா தொலைந்து போவது?


அன்பால் மணம்வீசும் ...


ஒற்றைப் பூவை வரைந்து
கைகளில் தந்துவிட்டுகடக்கிறாய்
காற்றோடு மணம்வீச தொடங்குகிறது
அப்பூ
வியப்போடு சுவாசிக்க
நந்தவனமாய் உருப்பெறுகிறது
சற்றும் யோசிக்காது
சிறகுவிரிக்கிறேன்
பட்டாம்ப்பூச்சயாய் மாறி!!