Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, 2 December 2014

விரல் கோர்த்திடு


பக்கம் அமர்
தோள் சாய்த்துக்கொள்
தலைகோது
விரல் கோர்த்திடு
முத்தமிட்டுக் கொள்கிறேன்.

முயங்கும் பொழுதொன்றில்...


வேண்டாமென நானும்
வேண்டுமென நீயும்
மதனோற்சவ அரங்கேற்றத்தில் ..
மாறனின் இடைவிடா கணைகளில்
மயங்கி முயங்கிய பொழுதொன்றில்
உன் வேண்டும்களுக்கும்
என் வேண்டாம்களுக்கும்
ஒன்றென பொருளுணர
அரங்கேறியது அங்கோர்
மதனோற்சவம்.


Monday, 1 December 2014

வரமாய் வேண்டுகிறேன்...


அலையாடும் எண்ணங்கள் அமைதியுறங்க
உன்தோள்தனை தேடுகிறேன் சிறுபிள்ளையாய்
சாய்ந்திடும் வரமொன்றை நீஅளித்தால்
ஜென்மசாபங்கள் கரைந்திடும் அந்நொடியே!!

சாரலென விழிமழையும் ஏக்கப்பெருமூச்சோடு வர
உன்மடிகடல்கலந்திட இடம்கொடுத்தால்
என்விழியோடு இமைதழுவி உறக்கம் கொள்வேன்.

அனல்தகிக்கும் பூக்காடாய் மனம் கனன்றிருக்க
பனிபொழிவாய் பார்வைவீசி
வார்த்தைகளால் வான்கிழித்தால்
குளிர்நிலவாய் குடிபெறுவேன்.

படைத்தவன் கொண்ட ஆணையெல்லாம்
அளிப்பவனாய் நீ அவதரித்தால்

ஆசைகொள்ளும் பருவம் கழித்து
அறிவு சொல்லும் சிந்தை கழித்து
எதற்கும் துவளும் மனம் கழித்து
பேதையாவேன் அன்றி பேரிளம்பெண்ணாவேன்!!


Sunday, 23 November 2014

மழையாய் தழுவி....

அவள் மீது
வீழ்வதற்கென்றே
ஆர்ப்பரித்து வருகிறாய்..

அவளின் கூந்தல் நனைத்து
முகம் தழுவி
இடை நழுவி
விழுகிறாய் ...

மழையே
உன்னை போல இன்றேனும்
நானிருக்க வேண்டும்!!

Monday, 29 September 2014

இனிதாய் இனியேனும் !!



நீண்ட காத்திருப்பின் முடிவு
மனதிற்கு இத்தனை இனிதாய் இருக்குமென
அறிந்ததில்லை இதுவரை !!

வெண்பனிக் காலத்தின் குளிரை
முற்றிலும் மறந்த
கத்திரி காலத்தின் வெம்மையில்
புதிதாய் துளிர்த்த இளந்தளிர் சாத்தியமா !!

இருந்தும் இன்றென் சோலையில்
கூதல் காற்றுடன்
மரக்கிளை நிறைத்த இளந்தளிர்களும்

மாற்றங்கள் தொடரட்டும்
இப்படியே இனிமையாய் இனியேனும் !!!



Thursday, 11 September 2014

உயிர்ப் பூவில் கோர்க்கிறேன்


ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?

மலையுரசும் முகில் அழைத்து மழை நீரை சேர்க்கிறேன்
அதிகாலை பனியோடு விழிநீரில் கோர்க்கிறேன்

மொட்டவிழும் மலரெடுத்து உன் முறுவலோடு சேர்க்கிறேன்
சலசலக்கும் நதியொலியில் புன்சிரிப்பை கோர்க்கிறேன்

குழல் வழியும் இசை பிரித்து உன் சுவாசம் சேர்க்கிறேன்
உன்னைத் தொட்ட தென்றலை என் நீள் மூச்சில் கோர்க்கிறேன்

கீழ்வான சிவப்பெடுத்து என் விழிகளுக்குள் சேர்க்கிறேன்
ஊனுருக்கும் ஏக்கத்தை அதிலே கனவாக்கிக் கோர்க்கிறேன்

ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?


உன்னுள் உறையும் ஓர்கணம்


உன் மார்பினுள் தொலைந்து
புதிதாய் எனை மீட்டெடுக்கிறேன்

பரந்த உன் தோள்களில்
என் கனவுகளுக்கு
கொஞ்சம் வண்ணம் தீட்டிக்கொள்கிறேன்

தனித்து விழித்திருந்ந இரவுகளை
உன் மடியுறங்கும் பொழுதொன்றில் கடந்துவிடுகிறேன்

இறுகும் உன் அணைப்பில்
சிறு பேதையாகி விடுகிறேன்

என் அணு துளைக்கும் உன் பார்வையில்
பெண்மை மொக்குடைத்து பூத்து காத்திருக்கிறேன்

இதழோடு உயிர்கலக்கும் அக்கணத்தில்
இப்பிறப்பின் வலியனைத்தும் வென்றிடுவேன்.


Friday, 15 August 2014

நினைவுகளில் கதகதத்தேன் .....

உள்ளங்கை உரசி
தெறித்த நெருப்பில்
கடுங்குளிர் கொளுத்தி தோற்றேன்,

இறுதியாய் என்னுள்
கனன்று கொண்டிருந்த - உன்
நினைவுகள் உரசிக் கதகதத்தேன்!!

தோல்வியும் இனிக்கும்....


சுவாசிக்கும் காற்றில்
தூவிச் சென்றாயோ
காதலின் விதைகளை...

உன் மூச்சில் சிறை புக
விளைகிறதென் உயிர்.

உன் விழியில்
இடறி விழுந்த
என் இதயத்தை எடுக்க
உரிமையற்று நிற்கின்றேன்

எந்த தோல்வியும்
இத்தனை இனித்ததில்லை.

ஈர முத்தம்


நுரை பூசும் உன் தழுவலுக்காய்
தவித்துக் கிடக்கின்றேன்

என் தேகம் அணைக்கும்
உன் அலைகள்

விட்டுச் செல்கின்றனவே
உன் ஈர முத்தங்களை!

இளைப்பாறிக்கொள்ள .....

இயலுமென்றால்
கொஞ்சம் இடம்கொடேன்
இதயச்சுவர்களில்
மோதி உடையும் என் சொற்கள்
உன் செவிப்பறையில்
கொஞ்சம் இளைப்பாற..

நத்தையாய் ...


விரல் கோர்த்துக்கொண்டாய்
ஆளில்லா அந்த சாலையை கடக்கையில்
மித வெப்பம் நீட்டிக்க
நத்தையாகிறது என் பாதங்கள்

கால்தடங்களின் கொஞ்சல்



பதற்றங்கள் ஏதுமற்று
விலகுகின்றன
பின்னி கோர்த்த கைகள்

இயல்பாய் திரும்புகிறோம்
அவரவர் வெளிகளுக்கு

ஒன்றாய் பதித்துச் சென்ற
நம் கால்தடங்கள் மட்டும்
இன்னும் கொஞ்சல்களுடன்!!!

ஒரு முத்தம் மட்டும்...

குளிர் அணைக்க
இறுக்கமான போர்வை...

வெம்மை போக்க
ஈரமான கனவொன்றும் வேண்டும்.

இல்லையேல்,

இந்த மாலையை
எதிர் கொள்ள
ஒரு ஆழமான முத்தம் மட்டும்


Tuesday, 8 July 2014

மனம் படித்தவள்


வான் பிடிக்குமா என கேட்டேன்
வான் தழுவும் மேகம் பிடிக்குமென்றாள்

நிலவை பிடிக்குமா என கேட்க
நிலவோடு கொஞ்சும்
நட்சத்திரங்கள் பிடிக்குமென்றாள்

வெயில் பிடிக்குமா என்றேன்
வெயிலில் அலையும்
உன் வியர்வை பிடிக்குமென்றாள்

மழை பிடிக்குமா என்றதற்கு
நனைந்த பின் உன் தலையில் வழியும்
துளிகள் பிடிக்குமென்றாள்

தென்றலென கேட்க
தழுவும் உன் விரல் பிடிக்குமென்றாள்

மரங்கள் பிடிக்குமா என்றேன்
அதனுடன் படரும் கொடிகள் பிடிக்குமென்றாள்

பறவைகள் என்றேன்
பாதுகாப்பாய் அணைத்துக்கொள்ளும்
அதனின் சிறகுகள் பிடிக்குமென்றாள்

இசை பிடிக்குமா என கேட்டேன்
இசைக்கும் குயில் பிடிக்குமென்றாள்

தனிமை பிடிக்குமா என்று கேட்டேன்
உன் நினைவுகளோடான பொழுதுகள் பிடிக்குமென்றாள்

கவிதை பிடிக்குமா என்றேன்
கவிதை புனையும் உன்னை பிடிக்குமென்றாள்

ஊடல் பிடிக்குமா என்றேன்
ஊடலுக்கு பின் வரும் கூடலும் பிடிக்குமென்றாள்



Monday, 30 June 2014

இணையும் தேநீர் கோப்பைகள்


ஆதவனை தழுவிக்கொண்ட
கார்முகில் கூட்டம்...

ஒரு மழைநேர மாலை
யாருமில்லா சாலை...

மின்னல் கீற்றுடன் இதமான சாரல்
குளிர்காற்றின் அணைப்பு...

மனதை வருடும் இசைத் தாலாட்டு
சேரத்த்துடிக்கும் தேநீர் கோப்பைகள்...

திகட்டாத முத்தங்கள்
காதோடு இதழுரசும் ரகசியங்கள்...

சிறு போர்வைக்குள்
இரு உயிர்கள் !!!


அன்பின் எண்ணிக்கை...


இருவிரல் சேர்த்து
கிள்ளித் தந்த முத்தங்களை
எண்ணிக்கையில் அடக்கிட எண்ணி,

இருக்கை விரல் நீட்டி, மடக்கி
கூட்டி கழித்து , தப்பா சரியா என மனக் கணக்கிட்டு

காலை கண்விழித்ததும் ரெண்டு ,
காப்பியோடு ஒன்னு,
பால்கனியில் வந்துநிற்கும்
புறாக்களை கொஞ்சும் போது
கொஞ்சி கொடுத்தது நாலு ,
அலுவல் செல்லும் அவசரத்தில்
கொடுத்தது ஒண்ணா ரெண்டா...
மூன்றென்று நினைக்கிறேன்

கணக்கிட்டு முடிக்குமுன்னே அந்தி சாய ...

பௌர்ணமி நிலவை பார்க்க அழைத்து
பார்த்தும் பார்க்காமல் திரும்பும் போது
எட்டி கட்டி கொடுத்தது ஒன்று என ...
இன்னும் கணக்கில் அடங்க வில்லை

அழகு கன்னம் கிள்ளி
ஒற்றை விரலால் தொட்டு
இதழ் குவித்து ஒற்றி
பின்னோடு கட்டியென
எப்படி கணக்கிட்டாலும்
நம் முத்தங்கள் எண்ணிக்கையில் அடங்கவில்லை

ஆம்...
அன்பு எண்ணிக்கையில் அடங்காது!!!


வசந்தத்தின் தருணத்திற்காக ....



நீண்டதொரு மௌனம் வெளிபடுத்துகிறது
நமக்குள்ளான இடைவெளியை ...

மனசிறையில் அடைபட்டிருக்கும் வார்த்தைகளை
முதலில் விடுவிப்பது யாரென தடுக்கிறது தன்முனைப்பு  நம்மை ...

ஒரு சிறு கேவலோ, அல்லது ஒற்றைவிழி த்துளியோ
உடைத்திடும் அந்த மௌனகூட்டின் சிறைக் கதவுகளை...

உடைபடும் அந்த வசந்தத்தின் தருணத்திற்காக
காத்துக் கொண்டிருக்கிறோம் இருவேறு திசைகள் நோக்கி...



Tuesday, 17 June 2014

மொழி நீயே...

காகிதத்தில்
கவிசிற்பமொன்றை
செதுக்கி நீட்டினேன்

எனக்காகவா என்கிறாய் !!

என் மொழியே நீயான பின்
சொற்கள் மட்டும்
வேறெங்கு கருக்கொள்ளும் ...

Tuesday, 15 April 2014

ஒற்றை விரல் தீண்டலில்....


கடல் தப்பி கரை ஒதுங்கிய
மீன்கள் இரண்டு
மணல் வெளியில்
சந்தித்துக் கொண்டன

கடல் பற்றிய கதைகள் பல
இருந்தன அவைகளிடம்
ஆனால் கடல் இல்லை

வாழ்வின் முடிவை நோக்கி
பயணிக்கின்றன
அதனதன் வழியில்

ஒரு வேளை ,
ஒரு தலை கோதலோ
ஒரு மென் முத்தமோ- இல்லை
ஒரு ஒற்றை விரல் தீண்டலோ
நிகழ்ந்திருந்தால்
கடலற்றும்
வாழ்ந்திருக்கக் கூடும்.