Monday 18 August 2014

அம்மாவின் முதலாம் அண்டு நினைவு நாள் . ஆகஸ்ட் 23



அம்மா நீ எங்கம்மா இருக்க?.... எப்படி மா இருக்க???....
எங்க போனாலும் எங்கிட்ட சொல்லாம போக மாட்டயே.,
இப்போ மட்டும் ஏன் ஓன்னும் சொல்லாம போயிட்ட...
சொல்ல மறந்து போயிட்டியா...
இல்லல்ல நீ சொல்லிட்டு தான் போயிருக்க...
எனக்கு தான் அது இப்போ வர புரியல....
இல்லன்னா நான் உன் பாத்த அந்த நொடியில
உன் கண்ணுல தெரிஞ்ச ஒளி...
எனக்காக உன் உயிரை கண்ணில் தாங்கி வச்சிருந்தியா ..
கண்ணால என் கிட்ட சிரிச்சு போரேன் சொன்னத இப்போ வரை ஏத்துக்க முடியல மா.

நீ ரொம்ப சுயநலக்காரி மா...
உங்க மூனு பேருக்கும் செய்ய வேண்டிய கடமை எல்லாம் முடிஞ்சதுன்னு சொல்லிட்டே இருப்ப...
அதனால தான் எங்கள இப்படி கதற வச்சிட்டு
அப்பா கிட்ட போயிட்டயா
நாலு நாள் கூட அப்பாவ விட்டுட்டு தனியா இருக்க மாட்ட.... நீ பதினோரு மாசம் மனசுல வைராக்கியம் ஏந்தி அப்பா கிட்டயே போயிட்டயா...

எங்களுக்கு என்ன தெரியும்ன்னு இப்படி விட்டுட்டு போன..
நீ முத்தவ ... தம்பிக்கும் தங்கைக்கும் நீ ஆறுதல் சொல்லனும்ன்னு எல்லாரும் சொல்றாங்க... எத்தன பெரியவளா இருந்தாலும் நான் உனக்கு குழந்தைன்னு யாருக்கும் புரியலையே மா

என்ன தான் அப்பாக்கு செல்லபிள்ளையா இருந்தாலும் உன் கிட்ட கேக்காம ஒரு துரும்ப கூட அசைக்க மாட்டேனே... இப்போ 360 நாளா என்ன விரல் பிடிச்சு கூட்டுப்போக ஆளில்லாம விழுந்து முட்டி உடச்சி நிக்கிறேனே...

வலின்னு ஆராற்றும் போதெல்லாம் வழி பிறக்கும் மா ன்னு மடி அணைத்துக்கொள்வாயே.... இப்போ வலியோட தவிக்கிறேனே... வா மா... வந்து என்னை மடி சாய்த்து கோ ....

ஒரு நாள் உடம்பு வலிச்சாலே பதறுவியே.. ஒரு வருசமா மனசெல்லாம் ரணமாகி வலியோட கிடக்கோமே... உனக்கு தெரியலயா... இப்போலாம் ரணம் தீர்க்கும் மருந்தாகி போனது உன் புடவை மட்டும் தான் .. அன்பு காட்ட... அறுதல் படுத்த எத்தனை பேர் இருந்தாலும் உன் ஸ்பரிசத்துக்காக மனசு ஏங்குதே மா....

எத்தனை பேர் இருந்தாலும் அப்பா அம்மா இல்லாதவங்க அனாதைகளாமே.... நாங்க மூணு பெரும் இப்போ அப்படி தான் நிக்கிறோம் மா...

கண்டம் விட்டு கண்டம் இருக்கவங்கள தொடர்புல வச்சிருக்க வழி கண்டுபிடிச்சவங்க சொர்க்கத்தில இருக்கவங்கள தொடர்பு கொள்ள ஏதாவது கண்டுபிடிங்களேன்., ஒரே ஒரு தடவை என் அப்பா அம்மா கிட்ட பேசிக்கிறேன்...

நம்ம குட்டி மீராவ சாமி கும்பிடு டா அம்முன்னு சொன்னா நீயும் அப்பாவும் இருக்குற படத்துக்கு முன்ன போய் கும்பிடுறா... என்னடா அம்முன்னு கேட்டா... சாமி கண்ணுக்கு தெரிய மாட்டாங்க இப்போ பாட்டி தாத்தாவும் தெரியலல அதான் கும்பிடுறேன்ன்னு தத்தி தத்தி சொல்லுறா மா...

அம்மா... நீயும் அப்பாவும் எங்க கிட்டயே வந்துடுங்களேன்..... தோளோடு அணைத்துக்கொள்ள.... கன்னம் வழித்து கொஞ்சிக்கொள்ள.... கண்ணீர் பெருக சிரித்து பேச....தொலைத்த சந்தோஷங்களை எல்லாம் திரும்ப பெற ....கடவுளே... நான் வணங்கும் கண்ணனே.... என் அன்னையே.... என் அப்பா அம்மாவை திருப்பி கொடுத்திடுங்களேன்

அம்மா...... வா மா....... நீ மீரா மான்னு கூப்பிடும் சத்தம் காதில் கேட்டுட்டே இருக்கு... அதை நிஜமாக்கு மா....... அம்மாஆஆஆஅ......


Friday 15 August 2014

நினைவுகளில் கதகதத்தேன் .....

உள்ளங்கை உரசி
தெறித்த நெருப்பில்
கடுங்குளிர் கொளுத்தி தோற்றேன்,

இறுதியாய் என்னுள்
கனன்று கொண்டிருந்த - உன்
நினைவுகள் உரசிக் கதகதத்தேன்!!

தோல்வியும் இனிக்கும்....


சுவாசிக்கும் காற்றில்
தூவிச் சென்றாயோ
காதலின் விதைகளை...

உன் மூச்சில் சிறை புக
விளைகிறதென் உயிர்.

உன் விழியில்
இடறி விழுந்த
என் இதயத்தை எடுக்க
உரிமையற்று நிற்கின்றேன்

எந்த தோல்வியும்
இத்தனை இனித்ததில்லை.

ஈர முத்தம்


நுரை பூசும் உன் தழுவலுக்காய்
தவித்துக் கிடக்கின்றேன்

என் தேகம் அணைக்கும்
உன் அலைகள்

விட்டுச் செல்கின்றனவே
உன் ஈர முத்தங்களை!

இளைப்பாறிக்கொள்ள .....

இயலுமென்றால்
கொஞ்சம் இடம்கொடேன்
இதயச்சுவர்களில்
மோதி உடையும் என் சொற்கள்
உன் செவிப்பறையில்
கொஞ்சம் இளைப்பாற..

நத்தையாய் ...


விரல் கோர்த்துக்கொண்டாய்
ஆளில்லா அந்த சாலையை கடக்கையில்
மித வெப்பம் நீட்டிக்க
நத்தையாகிறது என் பாதங்கள்

கால்தடங்களின் கொஞ்சல்



பதற்றங்கள் ஏதுமற்று
விலகுகின்றன
பின்னி கோர்த்த கைகள்

இயல்பாய் திரும்புகிறோம்
அவரவர் வெளிகளுக்கு

ஒன்றாய் பதித்துச் சென்ற
நம் கால்தடங்கள் மட்டும்
இன்னும் கொஞ்சல்களுடன்!!!

இளஞ்சிங்கங்களின் விடியல்???


இருள் சூழ் கருவறை தொடங்கி
இருளில் முடங்கி முடிகிறது
இளம்பிஞ்சுகளின் விடியல்கள்

சுழலும் வாழ்வில்
சுகங்களையும் சோகங்களையும்
கற்பித்த வாழ்வின் பக்கங்கள்
பாடசாலைகள் அறியா...

இளங்குருதி சுண்டி
வியர்வையாய் பூக்கிறது
இம் மழலைச் செடிகளில்

எதிர்கால கனாக்களின்
வெளிச்சப் பக்கங்களை
திரையிட்டு மறைகிறது
விழி நீர்த் துளிகள்..

விதியா மதியா... யாரின் தவறு ?

பாலை மணலில்
நீந்திப் பழகும் மீன் குஞ்சுகள் இவர்கள்

விடிந்திட மறுக்கும் வாழ்வை வரவேற்க
விடியலில் விழிக்கும் இளஞ்சிங்கங்கள் இவர்கள்!!!


ஒரு முத்தம் மட்டும்...

குளிர் அணைக்க
இறுக்கமான போர்வை...

வெம்மை போக்க
ஈரமான கனவொன்றும் வேண்டும்.

இல்லையேல்,

இந்த மாலையை
எதிர் கொள்ள
ஒரு ஆழமான முத்தம் மட்டும்