Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Monday, 12 January 2015

வேடிக்கையல்ல வாழ்க்கை



ஒன்றுமேயில்லை என்பதே
நியதியாகிறது முடிவில்...
ஆயினும் அனைத்திலும்
முடிவையே தேடி ...
இடைப்பட்டதின் லயித்தலை
தொலைப்பதே வாடிக்கையாக்குகிறோம்
வேடிக்கை வாழ்வதனில் !!



Friday, 19 December 2014

நிஜம் தொலையும் முகங்கள்


தமக்கென்று தனித்தனியாய்
வரையறைகள் தாங்கியுள்ளன
இங்குள்ள முகங்களனைத்தும்

அன்பெனும் ஓரிழையில் இவ்வனைத்தையும்
பிணைத்திட சாத்தியமெனினும்
உடன்படுவோர் யாவருமில்லை

அவரவரின் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனை செய்தும் நகர்த்திக் கொண்டிருக்கும்
நீண்டதொரு நாளின் அயர்வுற்ற மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப் பார்க்கிறேன்

வாழ்வின் மேல்
எவ்விதியையும் சுமத்திடாத இயற்கை
அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கிறது
யாவராலும் வரையப் பட்ட ஓவியங்களை !!


Friday, 12 December 2014

மூடிடும் வாழ்க்கைப் புத்தகம்


நாம் தேடிக்கடந்தது ,
தேடலிலிருப்பது,
தேடநினைப்பது ...

வித்தியாசங்களின் விளக்கங்களை
விலையாகக் கொடுத்து
வாங்கிட நினைக்கும்
வாழ்வு எதுவரை?

இகத்தினில் மனிதனின்
இயக்கத்தின் ரகசியம்
உணர்ந்திடும் பொழுதினில்
இயம்பிடும் உண்மைகள்

கிடைத்ததைக் கொண்டு
வாழ்க்கையை முடித்திடும்
அரும் பெரும் பண்பினை
அடைந்திட வாழ்க்கையில்
அனுபவம் என்றொரு
அழகிய நூலினை அறிந்ததும்
அகவைகள் ஆயின பலவே !

துலங்கிடும் பொழுதுகள் யாவும்
பகிர்ந்திடும் செய்திகள் பலவே

நிகழ்ந்திடும் நிகழ்வுகள் அனைத்தும்
நினைத்திடும் வகையில் நிகழ்வதுமில்லை

உருண்டிடும் உலகினை அழகாய்
உருட்டிடும் வித்தகன் யாரோ ?

அனுபவம் என்றொரு நூலை
ஆக்கி முடித்திடும் வேளை
மூடிடும் வாழ்க்கைப் புத்தகம்

Wednesday, 8 October 2014

நாணற்ற நான்



வாழ்வின் முதலும் முடிவுமாய்
என்னைச் சுற்றி சொந்தங்களும் நட்புகளும்
கண்ணீர் சிந்தியபடி ...

என் குடும்பத்தினர் அழவும் திக்கற்று
பித்துப்பிடித்தவர்களாய்
ஆற்றி ஆறுதல் படுத்த நினைக்கிறேன்
ஆயினும் முடியவில்லை
அமைதியாய் கண்மூடியபடி...


கருவில் உதித்து பாதுகாப்பாய் வளர்த்த நாட்கள்
தவழும் போதும் தத்தி நடைபோடும் போதும்
தாங்கி வளர்த்த நாட்கள்

சிறுமியாய் பெற்றவர்கள் கைபிடித்து சுற்றிய நாட்கள்
பட்டாம்பூச்சியாய் விளையாடித் திரிந்த நாட்கள்
விடுமுறைக்காய் ஏங்கி பூர்வீகம் சென்ற நாட்கள்
கல்லூரிக் காலத்தில் விடுதியில் தங்கி
நண்பர்களுடன் கொண்டாடிய நாட்கள்
மனந்தவனோடு, நான் மடிசுமந்தவர்களோடு
கொஞ்சி மகிழ்ந்த நாட்கள்

வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
மனக்கண் முன் பிம்பங்களாய் தோன்றி மறைகின்றது
சில போராட்டங்களையும் சந்தித்து சலித்து போய் நான்
இதோ சிரித்து அழுது லயித்து ரசித்து வாழ்ந்த இல்லத்திலேயே
உயிரற்ற உடலாக...

இன்னும் சற்றுநேரத்தில் இங்கிருந்து பிரிந்து
தனிமை தீயில் நானும் கருகிடுவேன்
இருந்தும் நானின்றி அழுத
இரண்டு வயது தம்பி மகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்
நாம் சாமியாகி விட்டதாய்...


Thursday, 11 September 2014

வாழ்வும் கவிதையும்



எழுதும் ஒவ்வொரு வரியும்
எங்கோ எழுதப்பட்டது போலவே தோன்றுகிறது

எங்கே.... எப்போது.... யாரால் .... என தெரியாத போதும்
எழுதப்பட்டதென உணரமுடிகிறது

வாழ்வும் அப்படியே ....

எப்படி வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாரோ....எப்போதோ... வாழ்ந்தவர்களை
பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது

அதனால் தானோ
வாழ்வும் கவிதையும் அதனதன் வழியில்
தடையின்றி இயங்கிகொண்டே இருக்கிறது??


Tuesday, 8 July 2014

அனுபவப் பொக்கிஷம்


வாழ்வின் உதயத்திற்காக
காத்துக்கொண்டிருக்க்கிறேன்.

புலரும் பொழுதொன்றில்
நான் விழிக்காமலும் போகலாம்...

இருந்தும்
கடந்துவிட்டிருந்த நேற்றையும்
நிகழும் இந்நொடிப் பொழுதையும்
கைகளுக்குள் வசப்படுமென்றால்
பொக்கிஷமெனப் பூட்டிவைத்துக் கொள்வேன்

இனி வரப்போகும் நாளைகளையேனும்
முறையாய் பயன் படுத்த
எனக்கது பாடஞ்சொல்லும் !!!


Tuesday, 17 June 2014

வாழ்தல் எளிது ...


நினைவுகளைப் போல
சில நொடிகளையேனும்
நிறுத்திக் கொள்வதானால்
வாழ்தல் எளிது ..

சுழலும் பருவங்கள் போல
சில தருணங்களும்
மீண்டும் வந்தால்
வாழ்தல் எளிது ...

மழலையாய் மீண்டுமொருமுறை
வாய்ப்பளித்தால்
அப்போதேனும் சரியாய்
முயற்சிக்கலாம்
வாழ்தல் எளிதென்று ..

Tuesday, 15 April 2014

இயல்பின் மாற்றங்கள்


அந்திசாயும் பொழுதொன்றில்
அருகிலுள்ள பூங்காவில்
ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தேன்

நிஜங்களின் நிதர்சனங்களும்-மனதில்
நிழலாடும் எண்ணங்களும்-அலைகளாய்
கரை மோதிச் சென்றன.


வார்த்தைப் பரிமாற்றங்களோடு
வசந்தத்தின் கற்பனைகள் சுமந்து
ஆங்காங்கே ஓரிருவர் இருக்க ...

எறும்புகளின் தேடல்களும்
மனதின் அலைவரிசையாய் ஒலிக்கும்
பறவைகளின் கீதங்களும்
எல்லையில்லா ஆனந்தமாய் !!

பின்னிய வலையறுந்து
கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவற்று கையேந்திய
பிஞ்சின் வலியும்
கனக்கத்தான் செய்கிறது

வாயிலுக்கருகில் உள்ள மரத்தடியில்
அயர்ச்சியாய் உறங்கும் முதியவரை காணவில்லை
என்ன ஆயிற்றோ ...
நாளை எவரோ ...

நாளையும் செல்வேன்
தன்னியல்பில் இருந்து மாறியவை
எவையென்றறிய ...


Friday, 28 March 2014

கான்கிரீட் காடுகள்



நெடுந்தூர ஜன்னலோர பயணத்தில்
இப்போது ரசிப்பதற்கொன்றுமில்லை

ஊர் எல்லை தாண்டி வரும்
இருள் காடுகளைக் கடக்கும் போதெல்லாம்
மரங்களின் ஊடே ஊஞ்சல் கட்டி
ஆட தொடங்கிவிடுகிறது மனசு

ஆடும் போதே
கிளைகளுக்கிடையே
கீழிறங்கும்
நிலவொளியின் அழகில் மயங்குவதும்,

தவழும் பனிக் காற்றை
கை விரித்து தழுவிக் கொள்வதும்,

கூதலுக்கு இதமாய்
கைகள் தேய்த்து கன்னத்தில் ஒற்றிக் கொள்வதும்,

உவர்மண்ணின் மணத்தோடு
பசுமரத்தின் மணத்தை சுகமாய் சுவாசிப்பதும்
முன்னொரு காலாமாகிவிட்டது

மனிதம் தொலைத்த மனங்களைப் போலவே
பசுமையிழந்து மூச்சுத் திணறுகிறது
வனமெங்கும் விதைந்தெழுந்த
கான்கிரீட் காடுகளால்...


Wednesday, 19 March 2014

துறவும் முடிவல்ல


துறவின் அடையாளம் காவியல்ல
வெற்றுடலும் அதன் அடையாளம் இல்லை

பற்றற்றதே துறவு

வாழ்வின் முடிவென்று
துறவை நாடினால்

அதே அடையும் நேரம்
இந்த வாழ்க்கை தான் எதற்கு?

துறவென்பது முடிவல்ல !!!

Wednesday, 26 February 2014

தேடல்...சுகமா? சுமையா?



தேவைகள் எதுவென்றறியாமலே 
தேடல்களை தொடங்கிவிடுகிறோம்.

தேவைகள் யாதென தெரிந்து 
தேடும் வேளைகளில் 
தெரிந்து விடுகிறது 
இருத்தலும் இல்லாமையும் 

எப்போது , எங்கே, யாரால் , எப்படி , தொலைத்தோம் 
என்பதை உறுதிபடத் தெரியாமல் 
அவநம்பிக்கையோடு அயர்ந்தமர செய்கிறது 
நம் இயலாமை 

கண்டெடுத்திடும் தருணங்களுக்கு நிகராக
நம் கவனத்தை ஈர்ப்பதில்லை 
காணாமல் தேடிய பொழுதுகள்

தொலைந்த ஏதோவொன்று 
தன்னை தேடுவாரற்று 
புதைந்து போயிருக்கலாம் 
அதன் துயர் மிகு ஓலக் கூக்குரல் 
உரிமையாளரை சென்றடையாமல் போயிருக்கலாம் 

புதிய வரவுகளால் கவனிப்பாரற்று 
புறந்தள்ளப்பட்டிருக்கலாம் 
கண்ணெதிரே இருந்தும் 
பொலிவிழந்த அதனிருப்பு 
தன்னை அடையாளப் படுத்த தவறியிருக்கலாம் 

இருத்தலும் இல்லாமையும்
ஒன்றென உணர்வது வலி மிக்கது...



Friday, 31 January 2014

நம்பிக்கை கயிறு


வாழ்க்கை ஒரு மலையேற்றம்
ஏற்றம் ஒன்றே குறியாய்
வீறுகொண்டு ஏறு

பயணம் ஒன்றே குறியாய்
சிகரம் அல்ல
வீறுகொண்டு ஏறு

வெற்றி தோல்விகள் சகஜமாய்
முயற்சி ஒன்றே குறியாய்
வீறுகொண்டு ஏறு

ஏற்றத்தில் தயக்கம்
மலையளவு தேக்கம்
வீறுகொண்டு ஏறு

தடைக் கற்களே
படிக்கற்களாய் மாற்றி
மேலே ஏறு
அடுத்த உயரம் கண்களுக்கு புலப்படும்

ஏறும் போது தடையாய் தெரியும் பாறைகள்
தவறி விழும்போது தாங்கி நிற்கும்.

சில அடி ஏற பல அடி சறுக்கும்
துவண்டு விடாதே

ஏற்றம் மட்டுமே குறியாய்
வீறுகொண்டு ஏறு

வீழ்வதும் உன் தவறல்ல
விழு, ஆனால் விட்டுவிடாதே
உச்சியோடிணைந்திருக்கும்
நம்பிக்கை எனும் ஒற்றைக் கயிற்றை

மீண்டும் ஒரு ஏற்றத்திற்காய் ஆயத்தமாகு !!!




Wednesday, 29 January 2014

நானென்பது யார்?


நானென்பது யாரென
புரியாத புதிராய்
முன்னின்றது
கேள்வியொன்று !!!

விடை தேடி களைத்த வேளையில்
பெரும் கேள்விக்கனைகளோடு
முன் வந்து நின்றது அறிவு

நானென்பது யார்?

என்னில் உணர்ந்த அனுபவங்களா?
ஆழ்மனக் கடலில் புதைந்திருக்கும்
நினைவுகளின் பொக்கிஷங்களா?
நம்பிக்கையின் ரேகைகளா?
மரபு வழி புகுந்த
முன்னோர்களின் கனவுக்கோளங்களா ?

சொல்லற்று நிற்கையில்
வியப்பாய் விரிகிறது "நான்"!!!

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமாய்
விலகவும், விலக்கவும் இயலா
மனதை நிரப்பும் கேள்விகளோடு
மற்றொரு நாளும் தொடங்குகிறது...

தேடல் முடியவில்லை ....

பெருவெளியில் படர்ந்திருக்கும்
காலத்தை போலவே
புரிவதாய் இல்லை
நள்ளிரவில் எனை எழுப்பும் கேள்விகள்

அதிகாலை உதிக்கும் இளங்கதிரே
நீயாவது சொல்

நானென்பது யாரென்று ??





Monday, 30 December 2013

முடிவறியா பாதைகள்



இடைவெளிகள் அதிகமற்று
ஒற்றைப் புள்ளியாய்
நீண்டுகொண்டே செல்கிறது...

முடிந்துவிடுமென முன் அடி வைக்க
பிரிந்தே செல்கிறன பாதைகள் ...
இடம் மாறி நடக்க எத்தனிக்கும் வேளைகளில்
வாழ்வின் தடம் மாற்றிடும் பாதைகள் ...

வளைவு நெளிவுகளாய்...
மேடு பள்ளங்களாய்....
அகண்டும் குறுகலுமாய்...
தடைகளற்று நீண்டு கொண்டே ....

பயணிப்பவர்களுக்கு மட்டுமேயல்லாமல்
பார்வையாளர்களுக்கும் ....
கண் அளக்கும் தூரம் அருகிருந்தாலும்,
கால்களால் அளந்திடும் தூரம் நீளமே...
வாழ்வின் பயணங்கள் ஒரு புள்ளியில் முற்றுபெற,
பாதைகளோ முடிவறியா !!!