Showing posts with label தோழமை. Show all posts
Showing posts with label தோழமை. Show all posts

Monday, 12 January 2015

வ(வி)ழி தேடி தவிக்கும் நான்

 
இப்பிறவி கடந்தேறி
மீண்டும் பிறவா வரம் வேண்டுகிறாய் நீ
நானோ மறுபிறவிக்கு தவமிருக்கிறேன்
மனதினில் மட்டுமல்லாமல்
உன்னுள் கருவாய் , உருவாய்
உயிராய் ,மெய்யாய்
சேய் எனும் உறவாய் !!
வ(வி)ழி தேடி தவிக்கும் எனக்கு
விடியலே உன் விழிகளில் வேண்டும் என
தவமிருகின்றேன்
மனதால் மடி கிடத்தினாய்
மடி சுமந்து தாலாட்டும் காலத்துக்காய்
வரம் வேண்டி காத்திருக்கிறேன்
மகளென மனம் ஏற்றாலும்
உதிர உறவென்று பிணைத்து விட்டால்
அறுபடாது நம் உறவென்று
மீண்டுமொரு பிறவிக்கு தவமிருக்கிறேன்


கையறுநிலைக் காத்திருப்பு



உரிமையோடான நேசத்திற்கு
உளம் ஏங்கி உயிர்துடிக்கும்.

நெஞ்சில் வெடித்தெழும்
நேசத்தின் நிகழ்வுகளை
சொல்லொணா துயருடன்
சொல்லி அழாச் சுமையுடன்
காத்திருக்கும் கணங்கள்
கவியில் சொல்லிட முடிவதில்லை

காலாண்டு நீடிக்கவில்லை
கடல் போல அன்பு
காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க
காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி

முடிவில்லா இப்பெருவெளியில்
அரவமற்று அனாதையாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில்
உறக்கம் மட்டுமா தொலைந்து போவது?


Sunday, 11 January 2015

அதீதம் தொலைத்த பொழுதொன்றில் ..



அடரிருளினும் கொடியதாய்
நிரவிகொண்டிருக்கிறது உன் நீள் மௌனம்

தினங்கள் யுகங்களாய் நகர
எங்கோ உள்மனவெளி அதிர்வுகளும்
நிசப்தமாக்கி கொள்(ல்)கின்றன

உன் அதீதம் தொலைத்த ஏதோ ஒரு நொடியில்
நீ மௌனம் தழுவிக் கொண்டாய்
அன்பினை எதிர்பார்த்துக் காத்திருந்த மனதினை
மௌனச் சிறையில் தாளிட்டேன்

இனியேனும் அன்பின் கரங்களை இறுக மூடிக்கொள்
நம் மௌனங்களில் புதைந்திருக்கும் துயரங்கள்
வேறெவரையும் சூழ வேண்டாம்

நுனியறியா இம்முடிச்சிகளில்
நாம் மட்டும் புதைந்து போவோம்

மௌனத்தின் பிடி தளரும் பொழுதுகளில்
மனதிற்கு சொல்லி வைத்தேன்
இனி எமக்குள் பொதுவானாதாய் வேறொன்றும் இல்லை
இந்த நீள் மௌனம் தவிர என


Monday, 30 June 2014

வசந்தத்தின் தருணத்திற்காக ....



நீண்டதொரு மௌனம் வெளிபடுத்துகிறது
நமக்குள்ளான இடைவெளியை ...

மனசிறையில் அடைபட்டிருக்கும் வார்த்தைகளை
முதலில் விடுவிப்பது யாரென தடுக்கிறது தன்முனைப்பு  நம்மை ...

ஒரு சிறு கேவலோ, அல்லது ஒற்றைவிழி த்துளியோ
உடைத்திடும் அந்த மௌனகூட்டின் சிறைக் கதவுகளை...

உடைபடும் அந்த வசந்தத்தின் தருணத்திற்காக
காத்துக் கொண்டிருக்கிறோம் இருவேறு திசைகள் நோக்கி...