Monday, 31 March 2014

மழலை மனங்கள்


வெள்ளை தாளெடுத்து
தான் வரைந்த,

வளைந்தோடும் ஆறு ,
ஆற்றின் கரையில்
உயர்ந்த தென்னை மரங்கள் .
அதிலொரு வீடு ,
வானத்தில் நிலவும்
விண்மீன்களையும்
பார்த்து ரசித்தபடி,

இரவாக்குவது எப்படி என யோசித்து
"சூரியன் மறஞ்ச உடனே ராத்திரியாகிடும் "
என தனக்கு தானே
சமாதானம் ஆகிடும்
மழலைகள்!!!



Sunday, 30 March 2014

நினைவோடு ...


கனவில் விதி எழுதி ,
நினைவில் உணர்வெழுதி,
நீ எங்கோ நான் எங்கோவென
இருந்த போதும் ,

காற்றினிலே அன்பெழுதி
தூதாய் அனுப்புகிறேன்
அதைநீ முத்தமிட்டு நேசிக்கிறாய் !!

தோள் இல்லை - ஆனாலும் நான்
சாய்ந்துகொள்கிறேன் -உன்
மடியில்லை - இருந்தும் நான்
துயில் கொள்கிறேன்!!

விண்ணை எட்டிய
நம் நட்பின் உணர்வுகள் இன்று
நட்சத்திரங்களோடு நடுவினில்
உலவிக் கொண்டிருக்க

நானும் உன் நினைவுகளின் தனிமையில்
உலாவிக் கொண்டிருக்கிறேன்...

என்ன தவம் செய்தேனோ ...


மனதோடு மடி சாய்த்துக் கொள்கிறாய்
நீ என் தாயும் இல்லை

கை பிடித்து நல்வழி பாதை காட்டுகிறாய்
நீ என் தந்தையும் இல்லை

அன்போடு அரவணைத்துக் கொள்கிறாய்
உதிரம் பகிர்ந்தவளும் இல்லை

என் உயிரே நீ தான் என்பேன்
என் நாயகனும் இல்லை

உன் விழி கலங்க என் மனம் கலங்கும்
உன்னை நான் மடி சுமக்க வில்லை

நன்மைகள் மட்டுமே எனக்கு நடக்க செய்யும்
நீ என் கடவுளும் இல்லை

அத்தனை உறவும் பொய்யானாலும்
எனக்கென இருக்கும் ஒரு உறவு
என் உயிர் சுமக்கும் தோழி நீயடி

என்ன தவம் செய்தேனோ
இங்கு உன்னை நான் பெறவே !!!


Friday, 28 March 2014

கான்கிரீட் காடுகள்



நெடுந்தூர ஜன்னலோர பயணத்தில்
இப்போது ரசிப்பதற்கொன்றுமில்லை

ஊர் எல்லை தாண்டி வரும்
இருள் காடுகளைக் கடக்கும் போதெல்லாம்
மரங்களின் ஊடே ஊஞ்சல் கட்டி
ஆட தொடங்கிவிடுகிறது மனசு

ஆடும் போதே
கிளைகளுக்கிடையே
கீழிறங்கும்
நிலவொளியின் அழகில் மயங்குவதும்,

தவழும் பனிக் காற்றை
கை விரித்து தழுவிக் கொள்வதும்,

கூதலுக்கு இதமாய்
கைகள் தேய்த்து கன்னத்தில் ஒற்றிக் கொள்வதும்,

உவர்மண்ணின் மணத்தோடு
பசுமரத்தின் மணத்தை சுகமாய் சுவாசிப்பதும்
முன்னொரு காலாமாகிவிட்டது

மனிதம் தொலைத்த மனங்களைப் போலவே
பசுமையிழந்து மூச்சுத் திணறுகிறது
வனமெங்கும் விதைந்தெழுந்த
கான்கிரீட் காடுகளால்...


Wednesday, 19 March 2014

துறவும் முடிவல்ல


துறவின் அடையாளம் காவியல்ல
வெற்றுடலும் அதன் அடையாளம் இல்லை

பற்றற்றதே துறவு

வாழ்வின் முடிவென்று
துறவை நாடினால்

அதே அடையும் நேரம்
இந்த வாழ்க்கை தான் எதற்கு?

துறவென்பது முடிவல்ல !!!

Monday, 17 March 2014

"தீ"ரா தாகம்


உழைப்பின் களைப்பை மறந்து நீ
பகலின் புழுக்கம் தொலைத்து நான்
இரவின் கைகளில்

அசைகளை மட்டுமே ஆடையாய் அணிந்து நீ
வண்ணம் தீட்டா ஓவியமாய் நான்

சந்தோஷ மழை சாரலாய் நீ
வெட்கத்தின் விளைநிலமாய் நான்

அணைய மறுக்கும் தீயின் தாகம்
காதலில் கலந்து , கரைந்த பின்பும்

தூரத்தில் கூவிற்று அதிகாலை சேவலொன்று

விடியலோடு விழித்துக் கொண்டது
இரவு சண்டையின் எச்சம்.





Monday, 10 March 2014

மனமெனும் மந்திரப் பறவை



பறத்தலுக்காக
தயாராகிகொண்டிருக்கின்றது
என் மனப் பறவை !

விரித்த சிறகுகளுக்குள்
அடங்குகிறது
பெருவெளியும் பேரண்டங்களும்!!!

எதிர் வரும் தடை உடைத்து
காற்றைக் கிழித்து
பருவம் கீழிறங்கி
சட்டென மேலெழும்புகிறேன்
ஒரு மழலை தேவதையாய்...

சிறு புள்ளியாகி மறைகிறது
பூகோளம் ....

பால்வெளியின் நட்சத்திரங்களை
பூக்களாய் சூடி கொள்கிறேன்
நிலவில் முகம் பார்த்து ரசித்துகொள்கிறேன்
வானம் அதை உடையாய் உடுத்தி ரசிக்கின்றேன்

அத்தனையும் முடித்து
தரையிறங்கி
கடல் பருகி தாகம் தனிகிறேன் !!!

மீண்டும் ஒரு பறத்தலுகாய்
ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது
இம் மனப் பறவை ....


Friday, 7 March 2014

பெண்ணெனும் சக்தி


பெண்ணெனும் சக்தி
புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று
சரித்திரம் எதுவுமில்லை

கல்வி, அலுவல், குடும்பம்
என சகலமும் உன் கையில் அடங்க,
நீயோ பிறரின் சுயநலத்தீயில் அடங்கிப்போகிறாய்!

மகளாய், சகோதரியாய், மனைவியாய், தாயாய்,
நீ கொண்டிருந்த உருவங்கள் களைந்து
மனித வேட்டையாடும் மிருங்களிடம் மானாய்
அமில மழையில் எரியும் சருகாய்
கள்ளித் தாயின் தவப் புதல்வியாய் ஆனாய்!!

துணிவோடு துயரகற்றி
எழுச்சியுற்றால் மீண்டெழலாம்
துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.

பெண்ணால் முடியாதாது - இதுவரை
உலகில் உருவாகவே இல்லை... !
உங்களால் முடியும் - ஏனெனில்
கருவறை தங்கும் கடவுளை விட
கருப்பை சுமக்கும் பெண்களே மகா சக்தி !!!


Thursday, 6 March 2014

கதகதப்பில் கரையும் நான்....


பனி போர்வை போர்த்திய
குளிர் பிரதேசத்தின் சன்னலொன்றை
தன் நலிந்த கரம் கொண்டு தட்டுகிறான்
உச்சிவேளை கதிரவன்

தடுப்புக்களையும் ஊடுருவி
அறையெங்கும் வியாபிக்க காத்திருக்கிறது
அதனின் வெம்மை

அதன் கதகதப்பில் என்னை இழக்க
மொத்தமாய் பனியை வெறுத்திட துணிகிறேன்

கதகதப்பின் உச்சத்தில்
நான் கரைந்து கொண்டிருக்க ,

கண்களுக்கு புலபடா
ஏதோவொரு இடுக்கின் வழியில்
மெல்ல கசியும் ஊதல் காற்று...
நான் கரையும் சாத்தியக் கூறுகளை
வேரறுத்துக் கொண்டிருக்கிறது!!!


Wednesday, 5 March 2014

நமக்குள் ஒளிந்திருக்கும் சக்தி



ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும், கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.

அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.
அந்த கிராமத்தையே சுற்றி வந்தார் ஆனால் ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை.

ஏன்னா அந்த காருக்கு முன்னாடி இரண்டு குதிரைகளை கட்டி ஓட்டிக்கிட்டு இருந்தார். அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியாதாம். காருக்குள்ள 100 குதிரை சக்திகள் இருக்கிறது ஆனால் இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக் கொண்டு இருந்தார்.

நம்ம எல்லாருமே இவரைப் போலத்தான்.நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது ஆனால் நாம் யாரும் அதை பயன்படுத்தாமல் இருக்கிறோம்.