Friday, 12 September 2014
Thursday, 11 September 2014
வாழ்வும் கவிதையும்
எங்கோ எழுதப்பட்டது போலவே தோன்றுகிறது
எங்கே.... எப்போது.... யாரால் .... என தெரியாத போதும்
எழுதப்பட்டதென உணரமுடிகிறது
வாழ்வும் அப்படியே ....
எப்படி வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாரோ....எப்போதோ... வாழ்ந்தவர்களை
பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது
அதனால் தானோ
வாழ்வும் கவிதையும் அதனதன் வழியில்
தடையின்றி இயங்கிகொண்டே இருக்கிறது??
உயிர்ப் பூவில் கோர்க்கிறேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?
மலையுரசும் முகில் அழைத்து மழை நீரை சேர்க்கிறேன்
அதிகாலை பனியோடு விழிநீரில் கோர்க்கிறேன்
மொட்டவிழும் மலரெடுத்து உன் முறுவலோடு சேர்க்கிறேன்
சலசலக்கும் நதியொலியில் புன்சிரிப்பை கோர்க்கிறேன்
குழல் வழியும் இசை பிரித்து உன் சுவாசம் சேர்க்கிறேன்
உன்னைத் தொட்ட தென்றலை என் நீள் மூச்சில் கோர்க்கிறேன்
கீழ்வான சிவப்பெடுத்து என் விழிகளுக்குள் சேர்க்கிறேன்
ஊனுருக்கும் ஏக்கத்தை அதிலே கனவாக்கிக் கோர்க்கிறேன்
ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?
உன்னுள் உறையும் ஓர்கணம்
புதிதாய் எனை மீட்டெடுக்கிறேன்
பரந்த உன் தோள்களில்
என் கனவுகளுக்கு
கொஞ்சம் வண்ணம் தீட்டிக்கொள்கிறேன்
தனித்து விழித்திருந்ந இரவுகளை
உன் மடியுறங்கும் பொழுதொன்றில் கடந்துவிடுகிறேன்
இறுகும் உன் அணைப்பில்
சிறு பேதையாகி விடுகிறேன்
என் அணு துளைக்கும் உன் பார்வையில்
பெண்மை மொக்குடைத்து பூத்து காத்திருக்கிறேன்
இதழோடு உயிர்கலக்கும் அக்கணத்தில்
இப்பிறப்பின் வலியனைத்தும் வென்றிடுவேன்.
Subscribe to:
Posts (Atom)






