Wednesday, 26 February 2014

தேடல்...சுகமா? சுமையா?



தேவைகள் எதுவென்றறியாமலே 
தேடல்களை தொடங்கிவிடுகிறோம்.

தேவைகள் யாதென தெரிந்து 
தேடும் வேளைகளில் 
தெரிந்து விடுகிறது 
இருத்தலும் இல்லாமையும் 

எப்போது , எங்கே, யாரால் , எப்படி , தொலைத்தோம் 
என்பதை உறுதிபடத் தெரியாமல் 
அவநம்பிக்கையோடு அயர்ந்தமர செய்கிறது 
நம் இயலாமை 

கண்டெடுத்திடும் தருணங்களுக்கு நிகராக
நம் கவனத்தை ஈர்ப்பதில்லை 
காணாமல் தேடிய பொழுதுகள்

தொலைந்த ஏதோவொன்று 
தன்னை தேடுவாரற்று 
புதைந்து போயிருக்கலாம் 
அதன் துயர் மிகு ஓலக் கூக்குரல் 
உரிமையாளரை சென்றடையாமல் போயிருக்கலாம் 

புதிய வரவுகளால் கவனிப்பாரற்று 
புறந்தள்ளப்பட்டிருக்கலாம் 
கண்ணெதிரே இருந்தும் 
பொலிவிழந்த அதனிருப்பு 
தன்னை அடையாளப் படுத்த தவறியிருக்கலாம் 

இருத்தலும் இல்லாமையும்
ஒன்றென உணர்வது வலி மிக்கது...



Friday, 21 February 2014

நானும் கண்ணாடி தான்


உன்னில்
பிம்பமாய்
பிரதிபலிப்பவள்
நான்

உன் சிரிப்பில்சிரித்து
உன் துக்கத்தில்
துக்கமடைபவள் .

ஆயினும்
உன் கோபங்களும்
புறக்கணிப்புகளும்
என்னில் எரிந்த
கல்லாய்...

சுக்குநூறாகி விடுகிறேன்

கண்ணாடியாய்
என்னை
கையாளுடா...


Wednesday, 19 February 2014

தொடரும்....


இனி "தொடரும்"....

இந்த ஒற்றை சொல்லுக்குப் பின்னால்
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்...
ம்ம்ம் எனும் சலிப்புகள்...
அடுத்து எப்போது எனும் தவிப்புகள்...

இது போலவே...

தவிக்கவும் தடுமாறவும்
வைக்கிறாய் என்னையும்

அலைபேசி வழி
பேசிகொண்டிருக்கும் போதே
ஒரு நொடி என
உரையாடலை
நிறுத்திவிட்டு போகும்
உனக்காக...


Monday, 17 February 2014

நிஜம் தேடி ...


நிஜம் தேடி அலைந்து
தோற்கும் நேரங்களில்
தளர்ந்து போகின்றது அகம் ...

முட்களின் கூர்மையாய்
வார்த்தைகளின் வலி
மனதில் தைக்க,
மடை தடுக்கும் வெள்ளமாய்
இமை தட்டி வழியும் கண்ணீர்
கன்னக்குழி நிறைக்க...

உள்ளம் மூடி
தோளோடு சாய்கிறேன்
கண்ணீரின் பிம்பத்தில் ஒரு முகம்
நெஞ்சோடு அணைக்கையில் ...

வார்த்தை தொலைத்து
மௌனப் பாலத்தில்
கடந்துகொண்டிருக்கிறேன்
வாழ்வோடு சேர்ந்த அன்பை தேடி நிரப்ப...

இன்றோ பொறுமை காத்து நிற்கிறேன்
விடியலின் உண்மைகளுக்காக ....

Sunday, 16 February 2014

கற்பனையாய் ஒரு சுமை


சில்லென தென்றல் முகம் வருட
தோளோடு தோள் உரசி
கைகோர்த்து நடந்த
ஒரு மாலைவேளையின் நினைவுகள்...

பக்கமாய் அமர்ந்திருக்கையில்
சுவாசத்தின் வெப்பம் என் மேல் மோத
உன் வசமிழந்த நிமிடங்கள் ...

வியர்வையின் கசங்கலாய் சட்டை பிடித்திழுத்து
மார்பில் முகம் புதைத்து
ஈரத்தோடு காதலையும் உள்வாங்கிய
ஈரமான மணித்துளிகள் ...

நீ விரட்ட
நான் விலக
என்னை இழுத்தணைத்த
கற்பனை பொழுதுகள் ...

இப்படி பல்லாயிரம் கற்பனைகளோடு
உன்னையும் சேர்த்து சுமக்கிறேன்
என் நினைவில் நீ தடம் பதித்த நாள் முதலாய்...


Saturday, 15 February 2014

வாழ்வியல் ரசியங்கள்



நண்பர்கள் சிலர் சேர்ந்து தங்கள் முன்னால் பேராசிரியரை சந்திக்க அவர் இல்லத்துக்கு சென்றிருந்தனர். தன்னிடம் பயின்ற மாணவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று அமர செய்தார் பேராசிரியர் .
அவர்கள் அருந்துவதற்கு காப்பி தயாரித்து காண்ணாடி , பீங்கான், வெள்ளி, போன்ற விலை உயர்ந்த கோப்பைகளிலும் அன்றாடம் உபயோகிக்கும் சில வகை கோப்பைகளிலும் எடுத்து வந்து மாணவர்களின் முன் வைத்தார் .
மாணவர்கள் எல்லாரும் அவரவர்க்கு ஒவ்வொரு கோப்பையை கையில் எடுத்துக்கொண்டனர்

பேராசிரியர் மாணவர்களிடம் , நான் உங்கள் அனைவரையும் கவனித்துகொண்டு தான் இருக்கிறேன் . நீங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு விலையுயர்ந்த கோப்பையில் உள்ள காப்பியை பருக எடுத்துகொண்டீர்கள்
அனைவருமே பகட்டான மதிப்பு மிக்க கோப்பைகளையே விரும்புகிறீர்கள். அதுவே மன அழுத்தத்திற்கும் பதற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக அமைகிறது.

உங்களுடைய தேவை காப்பியே அன்றி கோப்பைகள் அல்ல என்றாலும் நீங்கள் அனைவரும் பகட்டையே விரும்புகிறீர்கள் .
நம் வாழ்வென்பது காப்பியை போல என்றால் , வேலை, பணம், புகழ், அந்தஸ்த்து, நேசம் போன்றவை அனைத்தும் காப்பியை தன்னுள் நிரப்பிக் கொள்ளும் ஒரு கருவியே.

பணம், புகழ், அந்தஸ்த்து போன்ற கோப்பைகளுக்கு அடிமையாகாமல் வாழ்வெனும் பானத்தை பருகி ருசியுங்கள் ( ருசிப்போம் நாமும் )

#ஒரு_ஆங்கில_கதையின்_மொழி_தழுவல்


Friday, 14 February 2014

காதலை போற்றுவோருக்கு தனி ஒரு நாள் வேண்டுமா ??


முகம் கானா என் முகநூல் ஆன்மா, திருமதி சுந்தரி கதிர்
https://www.facebook.com/sundarichalliah
அவளின் பார்வையில் காதல் என்பது என்ன என்று தன் அழகிய சொல்லாடல்களுடன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை உங்களுடன் பகிர்கிறேன்



காதல்.....அனல் கொல்லும் பனி மொழி

உச்சரிக்கும் போது உள்ளாடும் நாக்கு
கீழ் மேலாய் தட்டி .......

உதடுகள் இணையாமல் உள்ளங்கள் இணையும் மொழி

வார்த்தைகளுக்குள் அர்த்தங்களாய் சிறை படுத்தமுடியாத
மெளனத்தில் தான் உன்னை அழகாய் பேசமுடியும்

வெட்கம் தருகிறாய்...வேகம் தருகிறாய்
முடிவில் வேதனையும் தருகிறாய்

ஆனால் அத்தனையும் இனிக்க இனிக்கவே......

சிலருக்கு தவிப்பு ..பலருக்கு தேடல் நீ

காதலே உனது பொருள் அன்புஎனில்

பலரில் நீ இன்னும் வேணும் வேணும்
என்கிற ஏக்கக் குறையே

காதலே நீ பாசம் எனில்...
உன்னில் வழுக்கி விழுந்தவர் ஏராளம்

காதலே ..கலவி தான் உன் முடிவெனில்
உன்னை முழுமையாய் உணராத

தன்னை தான் ..உன்னோடு கடக்க முடியாத
உணர்வு வக்கிரப் பள்ளவிழும்
வாய்சவடால் வீரர்கள் இங்கு அதிகம்

அடி முடி காணாத ஆதாம் ஏவாள் பிரியமே
நீ பிறவிகள் மண்ணில் தோன்ற

வித்திட்ட விதையா ...இல்லை விதை கொழுத்த கனியா

பிரிய பிரிய பிரியம் வளர்க்க உன்னால் மட்டுமே இயலும்

ஒருவிழி மோதலில் ..ஒரு மொழி ஆசையில்
மடி கொடுத்து குழைய களிப்பூற வைத்து சிகரம் வளைக்கும் வல்லைமையும் நீயே

கண்ணுக்குள் கத்தி குத்தி கண்ணீர் உதிரம் வரவழைக்க
நீ மறுத்து செல்லும் ஒரு அலட்சியம் போதும்

உன்னை தீண்டாத பருவம் ஆண்//பெண்ணில் இங்கு இல்லை
உன் பெயர் எழுதி வைத்து எத்தனை பேர் தற்கொலை செய்தினும்
உன்னை சிறையில் போட்டு கழுவில் ஏற்ற ஒருவருக்கும் துணிவு இல்லை

ஒரு கைகுலுக்கலாய்..ஒரு கனிந்த குழைவுகளாய்
ஒரு ஆர்ப்பாட்டமாய்..ஒரு அமைதியாய்
ஓர் ஆனந்தமாய்..ஓர் ஏமாற்றமாய்.............
மனித உரு தழுவி....மனங்களில் நீ வாழ்ந்துகொண்டு இருக்கிறாய்

அரும்பு மூச்சு விடும் பூக்களிலும்
பூ தொடரும் பிஞ்சுகளிலும்

பிஞ்சு பருவம் பழுக்கும்
வயதுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் புனிதமே

உன்னை ஏன் நான்

நான் என்னும் என்னை முழுவதுமாய் மறந்து

நீயே சரணாகதியென பதி பற்றும்
இறைப்பிரியம் எனக் கூறக் கூடாது

ஆம்
எனது கனவுகளில்..நினைவுகளில் ..நிஜங்களில்
நிகழ்வுகளில் நீக்கமற நிறைந்து ......

மொழிகளில் போதையேற்றி தள்ளாடும்
என் விதவிதமான ’’கரைகாணா நேசம்’’ எனும் ஆளுமையே

நீ எனக்கு...என்றும் என்றென்றும்

எட்டியாபுரத்து செல்லம்மாவின் கணவனை.....
முண்டாசுக் கவிக் காதலனை மூச்சு முட்டுத் தழுவிய
கற்புக்கரசி கனவு கண்ணம்மா...வழிவந்த

அன்புருகி நான் ஊன்மறக்கும்
நேச இறையெனும் ஆலயமே.........

நிமிட நிமிட நான் உனை நேசித்து..
மொழிதொட்டு பூஜிக்க

இது போன்று
தனி ஒரு நாள் எனக்கு இனி வேண்டுமோ ,,

என் சுவாச நேசமே.......!!!