Wednesday, 30 July 2014

எண்ணங்களும் வண்ணங்களும்


வட்டமாக்க தூரிகை பிடிக்க
சதுரமாகிறது

சதுரமென நினைக்கும் நேரம்
மற்றுமொன்றாய்,
முக்கோணம் பல கோணங்களாய்...

பறவையென நினைக்கும் நொடிகளில்
வலைக்குள் அகப்பட்ட சிறு பூச்சியாகும்...

ஆலவிருட்சம் கற்பனிக்க
சிறு நாணலாகிற்று!!

வைக்கும் புள்ளி கோடுகளாய் நீளும்
நீளும் கோடுகள் நிற்கும் ஒரு புள்ளியாய்...

வண்ணம் தீட்ட நினைக்கும் எதுவும்
வசப்படுவதில்லை என்பதில்
வரைந்துகொண்டே இருக்கிறேன் என்றபோதும்,
எதையும் வரைந்ததில்லை நான்!!


அன்பின் துளிகள்



இருமுறை இதழ் பதித்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்


உயிர்ப்பூக்கள்


உருட்டி விழிக்கும் விழிகளிருந்தும்
உயிர்ப்பில்லாத கண்கள்,

அசைவுகளற்ற மென் கரங்கள்
தவழ்ந்தரியா , நடந்தரியா பிஞ்சுக் கால்கள்
மலராத அரும்பாய் இதழ்கள் என ,

உயிர்களின் உருவேந்தி
உணர்வுகளின்றி உறைந்திருக்கும்
உயிரில்லா பொம்மைகள்...

மழலைகளின் மென் தீண்டலில்
அவர்களுடன் களிப்பாட
புன்னகை பூத்து
உயிர்பெற்று எழும்பிவிடுகின்றன!!!

நீங்குதலின் கறை


அனைத்தும் போல
இயல்பாய் நிகழ்கிறது
உனக்கும் எனக்குமான
ப்ரியங்களின் நீங்குதலும் ..

உணர்ச்சிகளற்று
உறைந்திருக்கும் உயிரின் மீது
தன் கூரியபற்களையும் நகங்களையும் பதிக்கிறது
தனிமை

எதிர்ப்பவர்களின்றி வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற எனதுயிரில்
படிய தொடங்குகிறது
நீங்குதலின் ரத்தக்கறை

தியானத்தின் ஓரத்தில் ..


மனதை சமன் படுத்த
தியானத்திற்கு ஆயத்தமானேன்

தியானவிரிப்பின் ஒரு ஓரத்தில்
என்னோடு சிறு எறும்பொன்றும்
அமர்ந்துகொண்டது

கண்கள் மூடி
தியானிக்கத் தொடங்கினேன்

ஓரத்தில் இருந்த எறும்பு
பல்கி பெருகி
சாரை சாரையாக
ஊர்ந்துகொண்டிருகிறது
இப்போது தியானத்தின் மேல்.


Thursday, 17 July 2014

இனியவளின் பிறந்தநாள்....


என்னவள் Sundari Kathir..... 
தன் எழுத்தென்னும் நேசக் கரம் கொண்டு 
அனைவரையும் கட்டி போட்டவள்....
கண்ணில் படும் காட்சிகள் அனைத்திலும் 
தன் நேசப் பார்வை செலுத்தி 
உயிர்பித்து விடுபவள்...
இன்று (17-7-14) பிறந்தநாள் ... 
என்னோடு இணைந்து வாழ்த்துங்கள் தோழமைகளே ...

அன்பின் ப்ரியங்கள் சுமந்த அன்பானவளுக்கு ஆயிரம் முத்தங்கள்
பிறந்த நாள் வாழ்த்துகள் டா செல்லம்

முகமறியா முகநூலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்
அன்னையின் வரமாய் கிடைத்தவள் நீ
ஒன்றாகக் கைகோர்த்து வலம்வந்தது கிடையாது- இருந்தும்
சுனை நீராய் சுரந்தது நம் அன்பின் ஊற்று
முகநூல் வீதிகளில் திரும்பிய பக்கமெல்லாம்
நம் இருவர் பேர் சொல்ல
அன்பின் நேசமாய் உலாவருகிறோம்

ஆயிரம் சுமைகள் உனக்குண்டு - அதனுடன்
பல நேரங்களில் என் சுமையும் சேர்த்து சுமந்தவள் நீ

வலி என்று நான் தவித்த நேரங்களில்
மயிலிறகின் தீண்டலாய்
உன் வார்த்தைகளே என் வலி நிவாரணி

எனக்கே தெரியாமல்
என்னை சுற்றி பின்னப்பட்ட
மாய வலைகளை அறுத்தெரிந்தவள் நீ
என் மேல் விழும் பழிச்சொல் அம்புகளை
என் நிழல் கூட தீண்டா வண்ணம் தாங்கி
வந்த இடம் நோக்கி திருப்பி அனுப்பியவள்

அன்பை வார்த்தைகளில் காட்டதே
செயல்களில் உணர்த்து என்று
"அதிமுக்கியமானவள்" நீ எனக்கு என
என்னை உணர செய்தவள்

ஈரைந்து மாதங்கள் என்னை சுமந்தவள்
காற்றோடு கலந்த வேளையில்
வாவென அவளை அழைத்து
நீ சுமந்தவளை இனி நான் சுமக்கிறேன்
மகளாக எனக்கு தத்து கொடு என
என்னை மனதால் மடி சுமந்தவள்

பாசத்தை பனித்துளிக்குள் உறைய வைத்து
பதறாமல் பகிர்ந்தளிக்கவும்
சிரித்துக்கொண்டே கண்டிக்கவும்
கோபத்தோடு கொஞ்சவும்
உனக்கு மட்டுமே சாத்தியப் படுகிறது

கண் படுமோ , இல்லை சொல் படுமோ என்று
எல்லோரும் பெருமிதமாய் பேசும் நம் அன்பின் ப்ரியங்கள்
இனியும் யார் கண்ணும் சொல்லும்
படாமல் காக்க நம் அன்னையிடம் பிரார்த்தனைகள்

வரும் ஜென்மங்களில்
ஒரே கருவறையில்
உதிரம் பகிர்ந்த சொந்தமாய்
பிறவி வேண்டி
நம் அன்னையிடம் வரம் வேண்டி
வாழ்த்துகிறேன் செல்லம் ...

இன்று மலர்ந்த அரும்பாய் என்றும் நீ மணக்க
அன்னையின் அருளோடு என் ப்ரிய முத்தங்கள் செல்லம்
உம்ம்ம்மம்ம்ம்மாஆஆஆ .
லவ் யூ டி செல்லம் ... லவ் யூ டி அம்மா....

உன் அதிமுக்கியமான மீரா.


Wednesday, 9 July 2014

கலையும் கனவுகள் .



தெள்ளிய நீர் நிறைந்தோர் அழகிய பொய்கை ! அதில் ஆயிரமாயிரம் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின . மலர்களில் சுரந்த தேனைக் குடித்து , களித்து , ரீங்காரமிட்டபடி வண்டுகள் பறந்தன . அதில் ஒரு கருவண்டு மிதமிஞ்சி தேனைக் குடித்தது , மதிமயங்கி பூவிலேயே கிடந்தது .

காலம் கரைந்து கொண்டிருந்த உணர்வு அந்த வண்டிற்கு இல்லை .

மாலை வந்தது ,இருள் கவிந்தது .மலர்ந்த தாமரையின் இதழ்கள் குவியலாயின ; மயங்கி கிடந்த வண்டு எதையும் அறியவில்லை . அது வெளியில் பறப்பதற்காகத் தாமரை காத்திருக்கவில்லை ; தன் இதழ்களை மூடிக் கொண்டது .

நேரம் கடந்தது . வண்டு விழித்தது .ஆனால் அந்தோ ! இருட்டைத் தவிர வேறு எதையும் அந்த வண்டு காணவில்லை . இதழ் குவிந்த தாமரையில் மாட்டிக்கொண்டதைப் புரிந்துகொள்ள அதற்குச் சற்று நேரம் பிடித்தது . ஆனாலும்

' இந்த இரவு கழிந்து விடும் . கதிரவன் வருவான் .இந்தத் தாமரை மீண்டும் மலரும் . நான் ஆனந்தமாய் வெளியில் பறப்பேன் , பாடித் திரிவேன்!' என்று கனவில் மிதந்தது அந்த கருவண்டு .

ஆனால் நடந்தது வேறு ! தண்ணீர் குடிப்பதற்காகக் குளத்தில் இறங்கியது யானை ஒன்று . மனம் போன போக்கில் தாமரை மலர்களைப் பறித்து வெளியில் ஏறிந்தது . கருவண்டின் கனவுகள் கலைந்தன .

சுகங்களையும் போகங்களையும் நாடி ஓடுகின்றோம் . தடைகள் வருகின்றன , துன்பங்கள் வருகின்றன . உடனே கனவு காண்கிறோம் , சிறந்த எதிர்காலம் ஒன்றின் கனவில் மூழ்குகிறோம் , காலம் பறக்கிறது , கனவுகள் கலைகின்றன ___ மனித வாழ்க்கை பொதுவாக இப்படித்தான் செல்கிறது