Friday, 19 December 2014

தாய்மையே பெண்மை !!


பெண் என்பவள் சக்தியின் ரூபம் என சொல்லும் உலகில்
பெண்மை பற்றி அறிந்திட
சக்தியவளை தொழுதுநின்றேன்

இமைக்கும் நொடியில் கண்முன் தோன்றினள்
சூலோடு பாசாங்குசம் கைகளில் ஏந்தி
கர்ஜிக்கும் சிம்மவாகினியாக ..
அக்கினி குஞ்சுகளிரெண்டு அவள் கண்கள்
அன்னையென காண்போர்க்கு
அவை அன்பின் பிறப்பிடம்...

அழைத்த காரணம் அறிந்து
அன்போடு குறுநகை புரிந்தாள்
எண்ணியதை அடுக்கடுக்காய் கேட்டுநின்றேன்
‘‘பெண்மையென்பது என்ன தாயே?
பேதங்களறப்பிரித்து சொல்வாய்;
சொல்லுவதை நான் உரக்கச்சொன்னால்
புவிதனில் பெண்மை மலர்ந்திடவேண்டும்;

மின்னலென ஒளிர்ந்த நகைப்புடன்
விழிகளை நோக்கி வினவலைத்திருப்பினாள்
உன்னுள் இருக்கும் உணர்வைப் பற்றி
என்னைக்கேட்டால் யாது சொல்வேன் ?
புரிந்தும் புரியாததிது அம்மா
விரிவுர சொல்லென்றேன்

ஒளிரும் கதிரை விழியில் மலர்த்தி
பென்மையிதுதான் பார் என்றாள்
குளிரும் திங்களை நெற்றியில் கொண்டு
பென்மையிதுதான் பார் என்றாள்;

தகிக்கும் நெருப்பை தொடச் சொன்னாள்
சுட்டது தாயே நெருப்பென்றேன்
அதுதான் பெண்மை என்றுரைத்தாள்;
பனியினில் என்னை நனைய வைத்து
உணர்வினை நன்றாய் உணர்ந்திடச் சொன்னாள்
குளிர்ந்த்தது தாயே மெய்யென்றேன்
பென்மையிது தான் உணரென்றாள்

மலர்ந்து மணக்கும் மலரும் பெண்மை
மலரிடை கொண்ட முள்ளும் பெண்மை
இன்பம் துன்பம் இரண்டுமறிவாய்
இரண்டும் பெண்மை தான் என்றாள்

இத்தனை சொல்லிப் புரியவைத்தாய்
இருப்பினும் ஒன்றாய் சேர்த்துச் சொல்லென்றேன்

குறுநகை கொஞ்சும் முகம் மறைத்து
ஈன்றவள் முகமாய் தோற்றம் காட்டி
"தாய்மைதான் பெண்மை
பெண்மைதான் தாய்மை "
என்றுரைத்து உடன் மறைந்தாள்
தெளிந்தமனதுடன் திசை தொழுதேன் !!


தவ நெறிப் பிரியங்களே போற்றி!!


வாழ்வனைத்தும் தவயோகமாய் மாற்றும்
தவ நெறிப் பிரியங்களே போற்றி!!

புகையென படர்ந்திருக்கும் பொய்மை விலக்கி
உண்மை நிலைகள் உணர்த்தும்
யோக நெறிப் பிரியங்களே போற்றி!!

இலக்கறியாமல் வலியோடுழலும் மனதிற்கு
வலியனைத்தும் வழிகளாய் மாற்றும்
வசந்தப் பிரியங்களே போற்றி!!

ஓம் நமோ பகவதே !!
ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி
பரமே!!


மீண்டும் ஒரு கருவறை வாசம்

ஈரைந்து மாதங்கள்
இருள்சூழ் கருவறை சொர்க்கமாய்

பழி பாவங்கள் ஏதுமற்று
பொய்மை சூழ்ச்சி அறியாமல்
நிம்மதியுறக்கம்கொண்டேனடி

வெளிச்ச பெருவெளி பிறப்பெடுக்க

அன்போடு வஞ்சனைகளும் சேர்ந்தே சூழ
பிரித்தறியத்தெரியா பேதையானேன்

அலைக்கழிந்த மனம் அமைதியுறங்க
மீண்டும்ஒரு கருவறை சேர வரம் தா அம்மா.


நிஜம் தொலையும் முகங்கள்


தமக்கென்று தனித்தனியாய்
வரையறைகள் தாங்கியுள்ளன
இங்குள்ள முகங்களனைத்தும்

அன்பெனும் ஓரிழையில் இவ்வனைத்தையும்
பிணைத்திட சாத்தியமெனினும்
உடன்படுவோர் யாவருமில்லை

அவரவரின் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனை செய்தும் நகர்த்திக் கொண்டிருக்கும்
நீண்டதொரு நாளின் அயர்வுற்ற மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப் பார்க்கிறேன்

வாழ்வின் மேல்
எவ்விதியையும் சுமத்திடாத இயற்கை
அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கிறது
யாவராலும் வரையப் பட்ட ஓவியங்களை !!


ஸ்ரீயும் நானும்

ஸ்ரீ நேற்றிரவு அலைபேசியில் :அத்தம்மா போன வருசமும் இந்த வருசமும் இன்னைக்கு மீட் பண்ணுது தெரியுமா ?

நான் : என்னடா சொல்லுற கண்ணா .... புரியும் படியா சொல்லு ...
.
ஸ்ரீ : 20.12.2013.... இப்போ மீட் பண்ணிடிச்சா....

நான் :..

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா !!


தம்பி மனைவி (ஸ்ரீயின் அம்மா) பக்கத்தில் இருக்கும் கடையில் போய் ஏதோ சாமான் வங்கி வர சொல்லி இருக்கா ரெண்டு மூணு நாட்களாக...
 
கடைக்காரரும் சில்லறை காசு இல்லாமல் மீதம் தர வேண்டிய ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் சில்லறைக்கு "ஹால்ஸ் " மிட்டாய் தந்து அனுப்பியிருக்கார்...

இன்று காலையில் மீண்டும் ஸ்ரீயை கடைக்கு அனுப்பி இருக்கா அவன் அம்மா... இவன் கடந்த ரெண்டு மூணு நாள் குடுத்த "ஹால்ஸ்" எல்லாத்தையும் கையில் எடுத்துட்டு கடைக்கு போயிருக்கான் ...

கடைகாரர் சாமான்களை குடுத்துவிட்டு தம்பி சில்லறை ஐந்து ரூபாய் இருக்கா என்று கேட்க ... இவனோ இருக்கு என்று ஐந்து ஹால்ஸ் மிட்டாய்களை எடுத்து இந்தாங்க என்று குடுக்க ...
என்ன இது என்று கடைக் காரர் கேட்க .... நீங்களும் சில்லறை இல்லாமல் தானே இந்த மிட்டாய்களை தாறீங்க , என் கிட்டயும் சில்லறை இல்ல அதனால நானும் நீங்க குடுத்த ஹால்ஸ்சயே உங்களுக்கு தாரேன் என்று சொல்ல....
கடைகாரர் உன்ன எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா என்று சொல்ல.... இவனும் உங்கள எப்படி கடவுள் செய்தாங்களோ அதே போல என்னையும் செய்து அனுப்பிருக்காங்க என்று பதில் சொல்லிட்டு வந்துவிட்டான்
ஹஹஹா....


Friday, 12 December 2014

அவஸ்தைகளாகும் அதீதங்கள்

விடைகள் தேடி
அலையும் மனதினில்
யாரோ வினா விதைத்துச் சென்றுள்ளனர்.

ஏன் ? ஏன் ? ஏனென
மனக்காடெங்கும் கேள்வி மரங்களாய்
செழித்து கிளைத்து நிற்கின்றது.

தெளியும் மன ஓடையில்
வீசியஎரிகற்களாய்
இப்போதுன் வார்த்தைகள் விழுந்து சலசலக்கிறது

அதீத உனதன்பை எங்கே தவறவிட்டோமென
கனவிலும் உன் நினைவு சுமந்து உறங்குகிறேன்

வலிகள் விழிகளில் கரைதட்டி
அதீதங்கள் அவஸ்தைகளாய் கரைகின்றது

கனக்கும் மனதிற்கும்
வலிகளின் நீட்சிகளுக்கும்
யாதுரைப்பேன்
உன் உள்ளம் நெருங்குதல் சாத்தியமில்லையென..