Wednesday 8 October 2014

நாணற்ற நான்



வாழ்வின் முதலும் முடிவுமாய்
என்னைச் சுற்றி சொந்தங்களும் நட்புகளும்
கண்ணீர் சிந்தியபடி ...

என் குடும்பத்தினர் அழவும் திக்கற்று
பித்துப்பிடித்தவர்களாய்
ஆற்றி ஆறுதல் படுத்த நினைக்கிறேன்
ஆயினும் முடியவில்லை
அமைதியாய் கண்மூடியபடி...


கருவில் உதித்து பாதுகாப்பாய் வளர்த்த நாட்கள்
தவழும் போதும் தத்தி நடைபோடும் போதும்
தாங்கி வளர்த்த நாட்கள்

சிறுமியாய் பெற்றவர்கள் கைபிடித்து சுற்றிய நாட்கள்
பட்டாம்பூச்சியாய் விளையாடித் திரிந்த நாட்கள்
விடுமுறைக்காய் ஏங்கி பூர்வீகம் சென்ற நாட்கள்
கல்லூரிக் காலத்தில் விடுதியில் தங்கி
நண்பர்களுடன் கொண்டாடிய நாட்கள்
மனந்தவனோடு, நான் மடிசுமந்தவர்களோடு
கொஞ்சி மகிழ்ந்த நாட்கள்

வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
மனக்கண் முன் பிம்பங்களாய் தோன்றி மறைகின்றது
சில போராட்டங்களையும் சந்தித்து சலித்து போய் நான்
இதோ சிரித்து அழுது லயித்து ரசித்து வாழ்ந்த இல்லத்திலேயே
உயிரற்ற உடலாக...

இன்னும் சற்றுநேரத்தில் இங்கிருந்து பிரிந்து
தனிமை தீயில் நானும் கருகிடுவேன்
இருந்தும் நானின்றி அழுத
இரண்டு வயது தம்பி மகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்
நாம் சாமியாகி விட்டதாய்...


No comments:

Post a Comment