Monday, 29 September 2014
இனிதாய் இனியேனும் !!
மனதிற்கு இத்தனை இனிதாய் இருக்குமென
அறிந்ததில்லை இதுவரை !!
வெண்பனிக் காலத்தின் குளிரை
முற்றிலும் மறந்த
கத்திரி காலத்தின் வெம்மையில்
புதிதாய் துளிர்த்த இளந்தளிர் சாத்தியமா !!
இருந்தும் இன்றென் சோலையில்
கூதல் காற்றுடன்
மரக்கிளை நிறைத்த இளந்தளிர்களும்
மாற்றங்கள் தொடரட்டும்
இப்படியே இனிமையாய் இனியேனும் !!!
Friday, 12 September 2014
ஸ்ரீயின் செல்ல குறும்புகள்
நேற்று பள்ளியில் பென்சில் பாக்ஸ்சை தொலைத்துவிட்டான்.
அவன் அம்மா (தம்பி மனைவி) அதற்கு அவனை சத்தம் போட்டு
பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டாமா என்று கேட்டிருக்கிறாள் .
குறும்புகார ஸ்ரீ அதற்கு தன் அம்மாவிடம்
" இன்று எது உன்னுடையதோ அது நாளை வேறோருவனுடையது " அப்படின்னு கிருஷணர் கீதையிலேயே சொல்லிருக்காங்க மா.. நேற்று என்னுடைய பாக்ஸ் இன்று வேறு ஒரு பையனுடையது ... நீ ஏன் என்னை திட்டுற... பீ கூல் மா ன்னு கோபமா இருந்த அம்மாவை தன் வசீகர பேச்சால் சிரிக்க வைத்துவிட்டான் ...
துளித்துளியாய் ஒரு கவிதை
துளித் துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது
முற்றத்தின் கீற்றுகளிலும்
மரங்களின் இலைகளிலும் மழை நீர்
பொழிந்ததின் அடையாளம் சற்று நேரத்தில் மறைந்திடலாம்
நீர் சூழ் மேகங்கள் காற்றின் திசைக்கேற்ப கலைந்து
கதிரவனின் ஒளியால் பெருவெளியெங்கும் தகிக்கலாம்
கூடடைந்த பறவைகளும் , மனிதர்களும்
தங்கள் இயல்புக்கு திரும்பலாம்
குட்டையென தேங்கிய கடைசித் துளியும்
நிலத்தின் உஷ்ணம் விழுங்கியதோடு
பெய்தலின் சுவடற்றுப் போகலாம்
ஆனால் சற்றுமுன் இங்கொரு பலத்த மழை பெய்தது
அதன் சாரல் தொட்டு என் உயிர் நனைத்து
உனக்காய் ஒரு கவிதை செய்துகொண்டிருக்கிறேன் !!
முற்றத்தின் கீற்றுகளிலும்
மரங்களின் இலைகளிலும் மழை நீர்
பொழிந்ததின் அடையாளம் சற்று நேரத்தில் மறைந்திடலாம்
நீர் சூழ் மேகங்கள் காற்றின் திசைக்கேற்ப கலைந்து
கதிரவனின் ஒளியால் பெருவெளியெங்கும் தகிக்கலாம்
கூடடைந்த பறவைகளும் , மனிதர்களும்
தங்கள் இயல்புக்கு திரும்பலாம்
குட்டையென தேங்கிய கடைசித் துளியும்
நிலத்தின் உஷ்ணம் விழுங்கியதோடு
பெய்தலின் சுவடற்றுப் போகலாம்
ஆனால் சற்றுமுன் இங்கொரு பலத்த மழை பெய்தது
அதன் சாரல் தொட்டு என் உயிர் நனைத்து
உனக்காய் ஒரு கவிதை செய்துகொண்டிருக்கிறேன் !!
நேற்றின் நினைவுகள்
தன்னிருப்பை நினைவூட்டி
காலப் பெருவெளியில் கரைந்தபடி
நிழலாடிக் கொண்டிருக்கிறது
நேற்றின் நினைவுகள்
எதுவென்றறியாத நாளைய பயங்களும்
மனதின் நம்பிக்கைகளும்
ஒன்றாய் பிணைத்து உயிரிழையில் ஊசலாட
இன்றைய நாளோ
அவை துயிலுறங்கி
நேற்றையும் நாளையையும்
சூன்யமாக்கி கல்லெறிய
மனக் குளத்தின் நீர்த்திவலைகளாய்
நினைவுக் கரையான்கள்
மெல்ல முன்னேறி மென்றுக்கொண்டிருக்கிறது
முடிந்திடா உரையாடல்
சூழ்ந்திடும் மௌனம் போர்த்தி
உறங்கச்செல்கிறேன்
தலையணையாக மாறிய கைகளில்
உறுத்தும் காதணியாக
என்னை அசைந்து புரள வைக்கிறது
என்னோடு சேர்ந்து உறங்க வந்த உரையாடலின்
நெருடிய சொற்கள்
வரவேற்பறையில் விட்டுவிட்டு வந்த வார்த்தைகளும்
இங்குமங்கும் உலாவிகொண்டிருகின்றன உறங்க மறுத்து
மனதின் சுவர்களில் எதிரொலித்துக்கொண்டே!!!
Thursday, 11 September 2014
வாழ்வும் கவிதையும்
எங்கோ எழுதப்பட்டது போலவே தோன்றுகிறது
எங்கே.... எப்போது.... யாரால் .... என தெரியாத போதும்
எழுதப்பட்டதென உணரமுடிகிறது
வாழ்வும் அப்படியே ....
எப்படி வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாரோ....எப்போதோ... வாழ்ந்தவர்களை
பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது
அதனால் தானோ
வாழ்வும் கவிதையும் அதனதன் வழியில்
தடையின்றி இயங்கிகொண்டே இருக்கிறது??
உயிர்ப் பூவில் கோர்க்கிறேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?
மலையுரசும் முகில் அழைத்து மழை நீரை சேர்க்கிறேன்
அதிகாலை பனியோடு விழிநீரில் கோர்க்கிறேன்
மொட்டவிழும் மலரெடுத்து உன் முறுவலோடு சேர்க்கிறேன்
சலசலக்கும் நதியொலியில் புன்சிரிப்பை கோர்க்கிறேன்
குழல் வழியும் இசை பிரித்து உன் சுவாசம் சேர்க்கிறேன்
உன்னைத் தொட்ட தென்றலை என் நீள் மூச்சில் கோர்க்கிறேன்
கீழ்வான சிவப்பெடுத்து என் விழிகளுக்குள் சேர்க்கிறேன்
ஊனுருக்கும் ஏக்கத்தை அதிலே கனவாக்கிக் கோர்க்கிறேன்
ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?
உன்னுள் உறையும் ஓர்கணம்
புதிதாய் எனை மீட்டெடுக்கிறேன்
பரந்த உன் தோள்களில்
என் கனவுகளுக்கு
கொஞ்சம் வண்ணம் தீட்டிக்கொள்கிறேன்
தனித்து விழித்திருந்ந இரவுகளை
உன் மடியுறங்கும் பொழுதொன்றில் கடந்துவிடுகிறேன்
இறுகும் உன் அணைப்பில்
சிறு பேதையாகி விடுகிறேன்
என் அணு துளைக்கும் உன் பார்வையில்
பெண்மை மொக்குடைத்து பூத்து காத்திருக்கிறேன்
இதழோடு உயிர்கலக்கும் அக்கணத்தில்
இப்பிறப்பின் வலியனைத்தும் வென்றிடுவேன்.
Subscribe to:
Posts (Atom)