Monday, 30 June 2014
சொற்களின் ஈரம் தேடி...
உணர்ச்சிகளற்ற குரலில்
மரணசாசனமாய் உமிழ்ந்துவிட்டு செல்கிறாய்
இது நம் இறுதிச் சந்திப்பென்று
வந்து தெரித்தவைகளில் -சில
நீலமாகவும், அடர்சிவப்பாகவும்
பூத்து கொக்கரித்தன
எஞ்சியவை என் விழி நீரில்
கரைந்துகொண்டிருக்க
திசைஎட்டிலும் தேடுகின்றேன்
எந்த சொல் உன் இறுதிச் சொலென்று ..
அன்பின் எண்ணிக்கை...
இருவிரல் சேர்த்து
கிள்ளித் தந்த முத்தங்களை
எண்ணிக்கையில் அடக்கிட எண்ணி,
இருக்கை விரல் நீட்டி, மடக்கி
கூட்டி கழித்து , தப்பா சரியா என மனக் கணக்கிட்டு
காலை கண்விழித்ததும் ரெண்டு ,
காப்பியோடு ஒன்னு,
பால்கனியில் வந்துநிற்கும்
புறாக்களை கொஞ்சும் போது
கொஞ்சி கொடுத்தது நாலு ,
அலுவல் செல்லும் அவசரத்தில்
கொடுத்தது ஒண்ணா ரெண்டா...
மூன்றென்று நினைக்கிறேன்
கணக்கிட்டு முடிக்குமுன்னே அந்தி சாய ...
பௌர்ணமி நிலவை பார்க்க அழைத்து
பார்த்தும் பார்க்காமல் திரும்பும் போது
எட்டி கட்டி கொடுத்தது ஒன்று என ...
இன்னும் கணக்கில் அடங்க வில்லை
அழகு கன்னம் கிள்ளி
ஒற்றை விரலால் தொட்டு
இதழ் குவித்து ஒற்றி
பின்னோடு கட்டியென
எப்படி கணக்கிட்டாலும்
நம் முத்தங்கள் எண்ணிக்கையில் அடங்கவில்லை
ஆம்...
அன்பு எண்ணிக்கையில் அடங்காது!!!
சொல்காய்ச்சி வனம்!!!
சொல்காய்ச்சி மரமாகி விட்டது மனம் ....
உதிரும் சொல்
விழுந்த இடமெல்லாம்
மரங்களாய் மனம்...
துளிர்த்து ...
கிளைத்து....
உதிர்ந்து....
மனங்கள் ( மரங்கள்) பெருகி
வெளிவர வழியறியா
எல்லையற்ற பெருவனமாய் நான் ...
தவிப்பின் உச்சத்தில்
மௌனம் பேசப் பழகுகிறது உதடுகள்
சிக்கி முக்கியாய் நினைவுகள் உரசிக்கொள்ள
வெந்து தணிகிறது மனக் காடு .!!
தாய்மையின் ஏக்கம்....
சுவாசத்தில் உன் வாசம்...
மார்போடு அணைத்து மடிகிடத்தும் போது
மேனியெங்கும் உன் வாசம்...
விரல் பிடித்து நடக்கையில்- என்னருகில்
இருக்கையிட்டு அமர்ந்துகொண்டது உன் வாசம்...
கல்லூரிக் காலங்களில்- உன்
திசையிருந்து வரும் காற்றினில் உன் வாசம்...
உன் மடிதனில் நானுறங்க ஏங்கும் இந்நாளில் - நீராழி
கடந்தொரு தேசத்தில் நீயும்
உன் நினைவுகளின் வாசம் சுவாசித்து நானும்...
வசந்தத்தின் தருணத்திற்காக ....
நீண்டதொரு மௌனம் வெளிபடுத்துகிறது
நமக்குள்ளான இடைவெளியை ...
மனசிறையில் அடைபட்டிருக்கும் வார்த்தைகளை
முதலில் விடுவிப்பது யாரென தடுக்கிறது தன்முனைப்பு நம்மை ...
ஒரு சிறு கேவலோ, அல்லது ஒற்றைவிழி த்துளியோ
உடைத்திடும் அந்த மௌனகூட்டின் சிறைக் கதவுகளை...
உடைபடும் அந்த வசந்தத்தின் தருணத்திற்காக
காத்துக் கொண்டிருக்கிறோம் இருவேறு திசைகள் நோக்கி...
Thursday, 19 June 2014
அமைதி ...
கூச்சல்களின் சமாதி இல்லை
மனதில் ஒலித்திடும் ஓம்கார நாதம் !!
அடரிருளின் நிசப்தம் இல்லை
இதயத்தில் தோன்றும் நிலவின் உதயம் !!
மனதின் சப்தங்கள் அடங்கும் வேளையில்
அமைதிப் பூக்கள் மலர்கிறது !!
போர்தொடுக்கும் கைகள் -என்று
பூக்களைத் தொடுக்கின்றதோ ...
அன்று விளையும்
மழலையின் சிரிப்பென
அனைவரின் மனங்களிலும் அமைதி!!
அன்பென்பது யாதென தேடி ....
அன்பென்பது யாதென கேட்டேன் ...
அழகென்றனர்-சில நேரங்களில்
சிதைந்து அழிவதையரியாமல்
மலரென்றனர்-மலர்ந்ததும்
உதிர்ந்து சருகாவதை உணராமல்
தெய்வமென்றனர் -கற்சிலையாய்
பல நேரங்களில் இருப்பதையறியாமல்
அமுதென்றனர் -நஞ்சாய்
சில நேரங்களில் மாறுமென அறியாமல்
உண்மை என்றனர்-பொய்மையில்
பல நேரம் கரைவ தரியாமல்
இசையென்றனர்- பல நேரங்களில்
தாளம் தப்பி போவதையரியாமல்
அலைந்து அறிந்து உணர்ந்த போது
வியந்து நின்றேன்
அன்பு அழகு தான் மழலையின் அழகு நடையில் !!
அன்பு மலர் தான் மழலையின் ஸ்பரிசத்தில் !!
அன்பு தெய்வம் தான் மழலையின் கனிந்த பார்வையில் !!
அன்பு அமுதம் தான் மழலை வாய் நன்னீரில் !!
அன்பு உண்மை தான் மழலையின் புன்சிரிப்பில் !!
அன்பு இசைதான் மழலையின் மொழியில்!!!
தவிர்த்தலின் வலி
புன்னகை திரையிட்டு மறைகின்றேன்
இமை தட்டி நிற்கும் நீர்த்துளிகளை
தொலைக்க இடம் தெரியாமல்
எதிர்வரும் ஒரு அடைமழை நாளில்
தடயங்கள் இன்றி தொலைக்க தீர்மானித்தேன்
ஒரு மழை நாளும் வந்தது
உன்னுடன் களித்திட காத்திருந்த
மழைநாட்கள் இத்தனை ஆக்ரோஷமாய் இல்லை
அணையுடைந்த வெள்ளமாய்
வழிந்த கண்ணீரைக்
கரைத்த மழையில்
நனைந்து திரும்பினேன்.
அழுதலின் பொருட்டோ
நனைதலின் பொருட்டோ
தும்மல் எழுந்தது
என் நினைவே சிறுதும் இல்லா
உன்னை நினைவுருத்தியவாறு ...
நீர்க்குமிழியாய் நினைவுகள் ..
மழைவிட்ட ஒரு மாலைவேளையில்
ஓடை போல ஓடும் நீரில் விளையாட
காகிதக் கப்பல் செய்து தர கேட்டான் ஸ்ரீ.
நினைவின் அதிர்வுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல
பழைய புத்தகங்களெல்லாம் கப்பல்களாயின ...
தூவானமாய் தெறித்த மழைத்துளிக்கு
ஓடைநீரில் மூழ்கிய கப்பலை கண்டு
ஓவென அழ ...
தேற்றும் வழியறியாமல்
தவிக்குமென் நினைவுகளில்
உடைந்து சிதறுகிறது
நீர்க்குமிழி ...
Tuesday, 17 June 2014
விடியல்களின் ஒரு வெளிச்சப் பயணம் தேடி !!!
விடியல்களின் வெளிச்சம் தேடி
விரைந்து செல்கிறோம்... ஒரு பயணம்!
நம்பிக்கையின் ஒளிபற்றி,
முன்னேறிக் கொண்டிருக்கிறோம்,
எம் வாழ்வின் விடியல் நோக்கி...
புத்தகம் சுமக்கும் கைகளில்
ஆயுதமேந்தி
புன்னகை சுமந்த எங்கள் முகமோ
புரட்சியின் ஆயுள் ரேகை சுமந்து...
மனிதர்களை வதைத்த மனங்களில்
மனிதம் விதைக்க விரைகிறோம்...
இனி வரும் எம் மக்கள்
முகங்களில் புன்னகை மலரவேண்டும்...
கண்ணிவெடிகளின் சப்தம் கேட்ட எம் மக்கள்,
இனி வான வேடிக்கை காணவேண்டும்...
அகதிகளாய் அந்நிய தேசம் செல்லாமல்,
எம் மண்ணின் மூச்சு காற்றை சுவாசிப்போம்...
கைகோர்ப்போம் விடியல்களின்
ஒரு வெளிச்சப் பயணம் தேடி !!!
Subscribe to:
Posts (Atom)